TNPSC Thervupettagam

பெரியாரின் கருத்துரிமை: தான், மற்றமை, மக்கள்

August 5 , 2023 473 days 355 0
  • ஜெயகாந்தன் தாம் எழுதிய ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்னும் நூலில் பெரியார் பற்றி விவரித்துள்ள சம்பவம் ஒன்றைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். 1959ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர் சங்க மாநாட்டைத் தொடங்கி வைத்துத் தந்தை பெரியார் உரையாற்றிய நிகழ்வு அதுவெனவும் அப்போது தனக்கு இருபத்து நான்கு வயது எனவும் ஜெயகாந்தன் தன் நினைவிலிருந்து எழுதியுள்ளார்.
  • 1961 அக்டோபர் 15 அன்று திருச்சி, தேவர் ஹாலில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆறாவது மாநாடு அது என்றும் பெரியார் உரை உள்ளிட்ட அம்மாநாட்டுப் பதிவுகள் ‘விடுதலை’ இதழில் விரிவாகப் பதிவாகியிருப்பது பற்றியும் ஆ.இரா.வேங்கடாசலபதி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதிய ‘க்ளேஷ் ஆஃப் த டைடன்ஸ்’ (Clash of the titans) (02.05.2015) கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளார்.
  • அம்மாநாட்டில் புராணங்கள், இலக்கியங்கள் பற்றிப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் முக்கால் மணி நேரம் பெரியார் உரை அமைந்தது. இன்றைக்கு எழுத்தாளர்கள் (எழுத்தாளர் என்னும் சொல்லுக்குப் பதிலாகக் ‘கருத்தாளர்’ என்பதைப் பெரியார் பயன்படுத்தியுள்ளார். சான்று: ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரை) எப்படி எழுத வேண்டும் என்றும் அவர் தம் பேச்சில் குறிப்பிட்டார்.
  • அக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வந்திருந்த ஜெயகாந்தன் முதன்முதலாக அப்போதுதான் பெரியார் பேச்சை நேரடியாகக் கேட்டார். எழுத்தாளர் மாநாட்டில் இலக்கியம் தொடர்பாகப் பெரியார் பேசிய பேச்சு பொருத்தமில்லை என்று அவருக்குத் தோன்றியது. அப்பேச்சை ரசித்தாலும் அதற்கு மறுப்புத் தெரிவித்துப் பேசுவது எழுத்தாளனாகிய தன் கடமை என்று நினைத்தார்.

ஜெயகாந்தனின் மறுப்பு 

  • பெரியாரைக் குறைவுபடுத்தாமலும் அவமதிக்காமலும் தம் மறுப்புரையை ஜெயகாந்தன் அம்மாநாட்டில் வழங்கினார்.
  • சுயமரியாதைக் கொள்கையில் தனக்கிருக்கும் உடன்பாடான கூறுகளை விவரித்த ஜெயகாந்தன் தொடர்ந்து பேசினார். “பெரியார் அவர்களின் கட்டளைக்கேற்ப என்னால் எழுத முடியாது. இந்தக் கட்டளையை அவர் இந்த மகாநாட்டில் இடுவதற்கு முன்னால் இங்கே இருப்பவர்களெல்லாம் அதற்கு விருப்பப்படுகிறவர்கள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அப்படி அவர் நம்பி அந்தக் கட்டளையை இட்டிருக்கும் பட்சத்தில் நான் அதற்கு உடன்பட மறுக்கிறேன்” என்று தம் மறுப்பைத் தெரிவித்தார்.
  • மேலும் புராணம், இதிகாசம், இலக்கியம், மொழி முதலியவை பற்றிய தம் பார்வை பெரியாரிடமிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை விளக்குவதாக அவர் பேச்சு அமைந்தது.
  • அப்போது வயதில் முதிர்ந்தவராகவும் (82) பெருந்திரளான தொண்டர்களைக் கொண்டவராகவும் எவரும் மதிக்கும் தலைவராகவும் இருந்த பெரியாரை இருபத்தேழு வயதே ஆன ஜெயகாந்தன் மறுத்துப் பேசினார் என்பது முக்கியமான விஷயம். அத்துடன் அதைப் பெரியார் எவ்வாறு எதிர்கொண்டார் என்பது மிக மிக முக்கியமானது. “அந்தத் திருச்சி மகாநாட்டில் கலவரமோ குழப்பமோ நேராததற்கு ஒரே காரணம் பெரியார் அவர்களும் மேடையில் இருந்ததுதான்” என்கிறார் ஜெயகாந்தன். அவர் பேச்சைச் செவி மடலைக் கையால் குவித்து உன்னிப்பாகப் பெரியார் கேட்டார்.
  • தமக்கு ஆதரவான கருத்தை ஜெயகாந்தன் பேசியபோதும் மறுத்துப் பேசியபோதும் கைத்தடியைத் தட்டிப் பெரியார் உற்சாகப்படுத்தினார். “அவரது நாகரிகம் மிக மேன்மையானது என்று நான் அப்போது உணர்ந்தேன்” என்கிறார் ஜெயகாந்தன். அவர் பேச்சால் மனம் புண்பட்டுவிட்டதாகத் திராவிடர் கழகத் தோழர்கள் பலர் பெரியாரிடம் புகார் தெரிவித்தனர்.
  • அப்போது பெரியார் வழங்கிய அறிவுரை இது: “பொது வாழ்க்கையிலே அப்படி எல்லாம் மனசு புண்படக் கூடாது. இவர் ஒருத்தர்தான் நமக்குப் பதில் சொல்லி இருக்காரு. நாம் எவ்வளவு பேரைக் கேள்வி கேட்டிருக்கோம்? அவங்க மனசு புண்படுமேன்னு யோசிச்சோமா? அப்படியெல்லாம் யோசிச்சிக்கிட்டிருக்க முடியாது.”

ஓர் ஆஸ்திக மடாதிபதி!

  • பின்னர் ஜெயகாந்தனைப் பெரியார் அருகில் அழைத்தார். இருபத்தேழு வயதேயான இளைஞனை ‘வாங்க ஐயா’ என்று கரங்கூப்பினார். அப்போது பெரியார் விசாரித்ததுதான் மிகவும் சுவாரசியமானது. “நீங்க பிராமணப் பிள்ளையா?” என்று கேட்டார். “இல்லை” என்று ஜெயகாந்தன் பதில் சொன்னார்.  “ரொம்ப சந்தோஷம்” என்றார் பெரியார்.
  • இப்படி மறுத்துப் பதில் சொல்பவர் ஒரு பிராமணராக இருக்கலாம் என்று பெரியார் கருதியிருக்கலாம். ஆனால், அதற்காக எந்த மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தவில்லை. பிராமணர் அல்ல என்பது தெரிந்ததும் தம் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
  • பிராமணல்லாத ஒருவர் இப்படிப் பதில் சொல்லும் திறன் பெற்றிருக்கிறார் என்பது பெரியாருக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்கலாம். அது இயல்பானதே. இந்நிகழ்வை அவரவர் கோணத்திற்கேற்ப எப்படியும் விளக்கலாம். ஜெயகாந்தனின் கோணம் என்ன என்பதும் முக்கியம். “ஓர் ஆஸ்திக சமாஜத்தைச் சேர்ந்த மடாதிபதி போல” பெரியார் தெரிந்தார் என்கிறார் ஜெயகாந்தன். ‘மிகவும் பண்போடு’ தன்னை அழைத்தார் என்றும் சொல்கிறார்.  அதன் பின் அவர் சொல்வதுதான் பிரமாதம். ‘அக்காலத்திலெல்லாம் நான் யாரையும் காலில் விழுந்து வணங்கியதில்லை. ஆனால் அப்படி ஓர் உணர்வு எனக்கு அப்போது தோன்றியது’ என்று எழுதுகிறார் ஜெயகாந்தன்.
  • இந்தச் சம்பவத்தைக் கருத்துரிமை பற்றிப் பெரியார் கொண்டிருந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாகக் காணலாம். ஒருவர் கருத்தை மறுத்துப் பேசுவதற்கு இன்னொருவருக்கு உரிமை இருக்கிறது என்பதைப் பெரியார் வலியுறுத்துகிறார். மறுத்துப் பேசுவோர் கருத்தை உன்னிப்பாகக் கவனித்து அதை ஊக்கப்படுத்துவதில் பெரியார் கவனம் செலுத்தியுள்ளார்.
  • கருத்துக்களைப் பேசும்போது யாருக்காவது மனம் புண்படத்தான் செய்யும்; அதற்காகப் பேசாமல் இருக்க முடியாது என்பது பெரியார் எண்ணம். ‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’ என்பது பெரியாரின் அற்புதமான அறிவுரை. நம் பேச்சால் எத்தனை பேர் மனம் புண்பட்டிருப்பார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமா என்று பெரியார் கேட்கிறார்.

எது ஒழுக்கம்?

  • இன்னொரு சம்பவத்தை நினைவிலிருந்து எழுதுகிறேன். அநேகமாகக் கடலூராக இருக்கலாம். ஒரு கூட்டத்துக்காகச் சென்றிருந்த பெரியார் மதியம் கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அருகில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஆன்மிகக் கூட்டம் நடப்பதாக அவருக்குத் தகவல் தெரிந்தது. சரி, என்ன பேசுகிறார்கள் என்று கேட்க விரும்பித் தோழர்களோடு அம்மண்டபத்துக்குச் சென்றார். மண்டப நுழைவாயில் ‘அசைவ உணவு உட்கொண்டோருக்கு அனுமதி இல்லை’ என அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
  • அதைப் பார்த்ததும் “நாம் கோழி சாப்பிட்டிருக்கிறோம். உள்ளே போக வேண்டாம்” என்று சொல்லிப் பெரியார் திரும்பிவிட்டார். உடன் வந்தோர் “நாம் கோழி சாப்பிட்டிருக்கிறோம் என்பது யாருக்குத் தெரியும்? உள்ளே போகலாம்” என்றனர்.
  • பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. “நாம் நடத்தும் கூட்டத்திற்கு ஒரு விதிமுறை வகுத்தால் அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் அல்லவா? அப்படித்தான் இதுவும். பிறர் வைத்திருக்கும் விதியையும் நாம் பின்பற்ற வேண்டும்” என்று சொன்னாராம்.
  • இந்தச் சம்பவத்தில் இருவிஷயங்கள் முக்கியமானவை. கடவுள் இல்லை என்று பேசிய பெரியார் கடவுளைப் பற்றிப் பேசும் ஆன்மீகக் கூட்டம் கேட்கப் போனார் என்பது முதலாவது. தாம் எதை மறுக்கிறோமோ அதைப் பற்றித் தீரத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அவர் எண்ணம். ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களையும் பல புராணங்களையும் ஆழ்ந்து வாசித்தவர் பெரியார். அவ்வாசிப்பு அவற்றை மறுத்துப் பேச உதவியது.
  • எதிர்த்தரப்பினராக இருப்பினும் அவர்களது விதிமுறைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பது இரண்டாவது. மற்றவர் நம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் நாம் மற்றவரை மதிக்க வேண்டும். ஒழுக்கம் என்பதற்கு அவர் கொடுத்த விளக்கமும் அப்படியானதுதான். “ஒருவர் தன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறாரோ அப்படி எல்லாரிடமும் தான் நடந்துகொள்வதே ஒழுக்கமாகும்” என்றார்.

பெரியார் கடைப்பிடித்த நடைமுறை

  • பெரியாரின் வாழ்வையும் பேச்சு, எழுத்துகளையும் நுட்பமாக நோக்கினால் அவர் தம் உரிமையைப் பற்றி எத்தனை கவனம் கொண்டிருந்தாரோ அதற்கு நிகராகவோ அதைவிட அதிகமாகவோ எதிர்கருத்துக் கொண்டிருப்போராகிய ‘மற்றமை’ பற்றியும் கேட்போராக இருக்கும் ‘மக்கள்’ குறித்தும் அக்கறை செலுத்தினார் என்பது விளங்கும்.
  • கருத்துரிமை பற்றிப் பேசுகையில் ‘தான்’ என்பதற்கு நிகராக மற்றமை, மக்கள் ஆகியவற்றைப் பற்றியும் பேச வேண்டும். இம்முக்கோணம் எப்போதும் பெரியார் கவனத்தில் இருந்தது. ‘என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு; அதேபோல் என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு’ என்பது பெரியார் தம் வாழ்வில் கடைபிடித்த நடைமுறை. எதிர்வினையாக வருபவற்றை உன்னிப்பாகக் கேட்பதும் அவற்றுக்கு உரிய வகையில் பேச்சிலோ எழுத்திலோ பதிலளிப்பதும் பெரியாரின் பண்பு.
  • தம் கருத்துக்கு எதிரானவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்றோ தண்டனை தர வேண்டும் என்றோ பெரியார் ஒருபோதும் வலியுறுத்தியதில்லை. மோசமான செயல்களைக் கண்டித்ததும் அவற்றுக்குத் தண்டனை தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதுண்டு. கருத்துக்கும் செயலுக்குமான வேறுபாட்டை அவர் மனம் கொண்டிருந்தார்.
  • ‘நான் பேசுவனவற்றில் தப்பிதங்கள் இருக்கலாம் என்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், நான் சரி என்று நினைத்ததைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு என்பதில் நான் சந்தேகப்படவில்லை’ என்பது பெரியார் வாக்கு. இதில் ‘நான்’ என்பது பெரியாரைக் குறிப்பதல்ல. யார் இந்தத் தொடரைப் பயன்படுத்துகிறாரோ அவரைக் குறிக்கும். ஒவ்வொருக்கும் தான் சரி என்று நினைத்ததைச் சொல்ல உரிமை உண்டு என்பதே அவர் அபிப்ராயம். மற்றமையை உள்ளடக்கிப் பெரியார் சொன்னது இது.

கருத்து மாறக் கூடாதா?

  • ஒரு கருத்து சமூகத்தில் யாரைப் போய்ச் சேர்ந்து என்ன விளைவை ஏற்படுத்துமோ என்பது பெருங்கவலை தரக்கூடிய விஷயம். கேட்போராகிய மக்கள் பற்றிக் கருத்தாளர் கவலை கொண்டாக வேண்டும். ஒரு கருத்து புண்படுத்தலாம்; கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்; கலவரம் செய்யக் கூடத் தூண்டலாம். அதைப் பெரியார் கவனத்தில் கொண்டிருந்தார். ஆகவேதான் கருத்தைக் கேட்பவர், எதிர்கொள்பவர் நோக்கிலிருந்தும் அதாவது மக்கள் நோக்கிலிருந்தும் பெரியார் பேசினார்.
  • அவர் உரையிலும் எழுத்திலும் தம் கருத்தைப் பற்றிய ஐயங்களை முன்வைத்தார். ‘நாளை நான் எப்படி மாறப் போகின்றேன் என்பது எனக்கே தெரியாது. ஆகையால் நான் சொல்வதைக் கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்’ என்றும் ‘வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்குக் காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றையும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள் அபிப்ராயப்படி எதையும் முடிவுசெய்யுங்கள்’ என்றும் சொல்லிக்கொண்டேயிருந்தார்.
  • ஒருவர் எப்போதும் ஒரே கருத்தைக் கூறிக்கொண்டிருக்க இயலாது. கால மாற்றத்திற்கேற்பவும் சூழலுக்கேற்பவும் கருத்து மாறும். ‘அன்றைக்கு அப்படிச் சொன்னீர்கள், இன்றைக்கு இப்படிச் சொல்கிறீர்களே’ என்று கேட்பவர்களுக்குப் பதிலாக ‘ஏன் கருத்து மாறக் கூடாதா?’ என்று பெரியார் கேட்டார். ‘எனக்காக எந்த மனிதனும் எவ்விதக் கஷ்டமும் அடைய வேண்டாம்; எதையும் நம்ப வேண்டாம். நான் கூறுபவைகளை வெகுஜாக்கிரதையாய் அலசிப் பார்க்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்’ என்றார்.
  • யாருக்காகத் தாம் பேசுகிறோம், எழுதுகிறோம் என்று கருதினாரோ அவர்களுடைய சுதந்திரம் பற்றியும் பெரியார் சிந்தித்தார். “நான் ஒரு சுதந்தர மனிதன்; எனக்குச் சுதந்தர நினைப்பு, சுதந்தர அனுபவம், சுதந்தர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்தர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக் கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன்” என்றார் பெரியார்.

சிந்தித்தலின் முக்கியத்துவம் 

  • தாம் யாரை நோக்கிப் பேசுகிறாரோ அந்த மக்களை ஒன்றும் தெரியாதவர்களாக, முட்டாள்களாகப் பெரியார் கருதவில்லை. திரும்பத் திரும்ப அவர்களிடம் சொல்வது ‘சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்தியுங்கள்’ என்பதுதான். சிந்தித்தல் எத்தனை முக்கியமானது என்பதை அவர் குறிப்பிடத் தவறியதே இல்லை. சில சான்றுகள்:
  • “ஆகவே நான் சொல்லுவதைப் பொறுமையுடனும் சுயபுத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்குச் சரி என்று தோன்றியபடி நடவுங்கள்.”
  • “சிந்திப்பதில் கெடுதியில்லை; சிந்திப்பதால் நீங்கள் பாவியாகிவிட மாட்டீர்கள். சிந்தித்தால் தான் உங்கள் இழிவினுடைய – துன்பத்தினுடைய அஸ்திவாரம், ஆணிவேர் எங்கிருக்கின்றது என்று உங்களுக்குப் புரியும்.”
  • “அப்படியிருந்தும் பிறவியின் பெயரால் சாதி வித்தியாசம் இருந்துவரக் காரணம் என்ன என்பதை உங்கள் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”
  • “உங்கள் புத்திக்குச் சரி என்று பட்டதைத் தைரியமாகச் செய்யுங்கள். அது நாத்திகமானாலும் மகா பாதகமானாலும் கடைசியாய் ஒரு சிறிதுகூட அந்தப் பூச்சாண்டிகளுக்குப் பயப்படாதீர்கள்.”
  • “சாதாரணமாக, சிந்திக்கத் துவங்கிவிட்டோமானால், எந்தச் சங்கதியையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கிற பழக்கத்துக்கு வந்துவிட்டோமானால் – அப்புறம் தானாக எல்லாச் சங்கதிகளின் குறைகளையும் போக்கிக்கொள்ள முடியும்.”
  • “ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்.”

முத்தரப்பின் மீதும் கவனம்

  • மேற்கண்டவற்றில் சொந்த புத்தியுடன் எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் பெரியார் எந்த அளவு வற்புறுத்துகிறார் என்பது தெளிவு. சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை ஒழித்து விட முடியாது. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் உருவாக்கக்கூடிய கருத்துக்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் என்ன செய்யலாம்? அவற்றைக் கேட்பவர்களாகிய நாம் (மக்கள்) நம் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திப்பதன் மூலம் எது சரியானது, எது தவறானது என்று எளிதாக முடிவுசெய்யலாம்.  ‘வீண் வார்த்தைகளுக்குக் காது கொடுக்காதீர்கள்’ என்று அவர் சொல்வது அதனால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது, இல்லாமல் செய்வது என்னும் நோக்கில்தான்.
  • கேட்கும் எதையும் அப்படியே நம்பிவிடக் கூடாது. அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்; ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிந்திப்பது மனித இயல்பு. அதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் பழக்கமாக்கிக்கொள்ள முடியும். ஒவ்வொருவருக்கும் சிந்திக்கும் பழக்கம் வந்துவிட்டால் எந்தக் கருத்தையும் பொறுமையுடனும் நிதானத்துடனும் ஆராய்ந்து முடிவெடுக்க இயலும். சுயபுத்தியுடன் சிந்தித்தல் ஒன்றுதான் அனைவருக்கும் தேவை.
  • எவர் ஒருவருக்கும் தம் கருத்தை வெளியிடும் உரிமை இந்தச் சமூகத்தில் இருக்கிறது. அதை எவர் ஒருவரும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. தம் சொந்தப் புத்தியால் சிந்தித்து, கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தள்ள வேண்டியவற்றைத் தள்ளிவிட வேண்டும். சொல்பவருக்கு இருக்கும் உரிமை போலவே கொள்பவருக்கு இருக்கும் உரிமையையும் பெரியார் தெளிவு படுத்திக் கொண்டே இருந்தார். 
  • தான், மற்றமை, மக்கள் ஆகிய முத்தரப்பையும் எப்போதும் கவனத்தில் இருத்தி மிகவும் விரிவான களத்தைக் கருத்துரிமைக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் பெரியார். இப்படித்தான் பெரியாரின் கருத்துரிமை பற்றிய சிந்தனையை நான் புரிந்துகொள்கிறேன்.  

நன்றி: அருஞ்சொல் (05 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்