TNPSC Thervupettagam

பெரியாரும் காந்தி கிணறும்

December 25 , 2021 953 days 519 0
  • காந்தி கணக்கு என்றொரு வழக்கு உண்டு. அது என்ன என்பதைப் பற்றிப் பல கருத்துகள் கூறப்படுகின்றன. விவாதங்களும் நடக்கின்றன. காந்தி கிணறு என்றும் ஒன்று உண்டு. இதுவும் விவாதத்திற்கு உரிய விஷயம்தான். இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்தவர் தந்தை பெரியார்.
  • காரைக்குடியை அடுத்த சிராவயலில், 06-04-1926 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் பங்கேற்றுப் பேசினார். இரு விழாக்கள் ஒருசேர நடந்த நிகழ்வு அது. காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா ஒன்று; ‘காந்தி கிணறு திறப்பு விழா மற்றொன்று. வாசக சாலை தெரியும்; அது என்ன காந்தி கிணறு?
  • குடியிருப்பு, கோயில், கிணறு முதலியவை நம் கிராமங்களில் தலித் மக்களுக்குத் தனியாக இருப்பது இன்றுவரைக்கும் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்கள் கோயிலைப் புதுப்பித்துத்தருவதாக வாக்குறுதி கொடுத்தும் புதுப்பிக்கத் தொகையை முன்கூட்டியே வழங்கியும் ஊராட்சித் தலைவர் ஆனவர்களைப் பற்றிய செய்திகள் வந்தன. குடியிருப்பும் கோயிலும் இப்போதும் தனியாக இருப்பது நிதர்சனம்.
  • ஆனால் தண்ணீர்ப் பிரச்சினை அப்படியல்ல. தண்ணீர்த் தொட்டிகள் அமைத்துக் குழாய் மூலம் தண்ணீர் தரும் முறையால் அது எல்லாச் சாதியினருக்கும் இன்று பொதுவானதாகி இருக்கிறது. ஆகவே கிணறுகள் இன்று பயன்பாட்டில் இல்லை.
  • நீராதாரத்துக்காகக் கிணற்றை நம்பி இருக்க வேண்டியிருந்த தலித் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருந்தது. பெரும்பாலும் கிணறுகள் ஆதிக்க சாதி மக்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அவர்களை எதிர்நோக்கி இருக்க வேண்டியிருந்தது. அக்கிணறுகளில் தலித்துகள் தாமாகத் தண்ணீர் இறைத்துக்கொள்ள முடியாது.
  • குடங்களை வைத்துக்கொண்டு நிற்க வேண்டும். கிணற்றுக்கு நீரெடுக்க வரும் ஆதிக்க சாதியினரிடம் குடத்தை நீட்டிக் கெஞ்ச வேண்டும். யாராவது ஓரிருவர் மனமிரங்கித் தண்ணீர் இறைத்து ஊற்றும் வரைக்கும் காத்திருந்துதான் நீரைப் பெற வேண்டும்.
  • இந்நிலையைப் போக்குவதற்கு 1920, 1930-களில் தலித் மக்கள் குடியிருப்புப் பகுதியில் தனிக்கிணறுகளை வெட்டிக் கொடுக்கும் திட்டத்தைக் காந்தி முன்வைத்துச் செயல்படுத்தியிருக்கிறார். இப்படியான கிணறுகளுக்குப் பெயர்தான் காந்தி கிணறு.
  • தமிழ்நாட்டில் பலரிடம் நன்கொடை பெற்று, பல இடங்களில் இப்படிக் கிணறுகள் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றில் சில கிணறுகள் பற்றிய தகவல்கள் இப்போது தெரியவருகின்றனபெரியார் திறந்துவைத்த சிராவயல் காந்தி கிணறு ஒன்று. இது 1926ஆம் ஆண்டு வெட்டப்பட்டது.
  • மானாமதுரையில், 1934ஆம் ஆண்டு ஒரு கிணறு தோண்டப்பட்டுள்ளது. அக்கிணற்றுக்கு காந்தி நூறு ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். பி.எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ராஜாஜியும் பங்கேற்க அக்கிணற்றைக் காந்தியே திறந்துவைத்திருக்கிறார்.
  • இந்தக் கிணற்றைப் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் மானாமதுரையில் கிருஷ்ணசாமி அய்யங்கார் தலைமையில் ஐயாயிரம் மக்கள் கூடிய கூட்டம் பற்றிப் பரவசத்துடன் தமிழ்நாட்டில் காந்தி நூலில் தி.சே.சௌ.ராஜன் குறிப்பிட்டு எழுதியுள்ளார். 27 ஜனவரி 1934 அன்று இந்நிகழ்வு நடந்ததாகக் காந்தியின் நாட்குறிப்புத் தகவல் தெரிவிக்கிறது.
  • 1934ஆம் ஆண்டு காந்தியின் தமிழ்நாட்டு வருகையின்போது மானாமதுரை மட்டுமல்லாமல், காரைக்கால் அருகே திருநள்ளாறு, சுரக்குடி பகுதியில் ஒரு காந்தி கிணறு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. காந்தியின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2018ஆம் ஆண்டு இக்கிணற்றைத் தூய்மைப்படுத்தி அதையொட்டி சிலை, படிப்பகம் என நினைவகத்தையும் புதுச்சேரி அரசு அமைத்தது.
  • அந்தக் கிணற்றை இவ்வாண்டு (02-10-2021) காந்தி ஜெயந்தி அன்று புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமாகிய பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுத்தம் செய்து பொதுமக்கள் பார்வையிட வழி அமைத்துக்கொடுத்தனர். இச்செய்தி இதழ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக வெளியாயிற்று.
  • காந்தி 1934ஆம் ஆண்டு தமிழ்நாட்டு வருகையின்போது காரைக்காலில் நடந்த நிகழ்விலும் பங்கேற்றுள்ளார். 16 பிப்ரவரி 1934 அன்று இந்நிகழ்வு நடந்ததாகக் காந்தியின் நாட்குறிப்புத் தகவல் கூறுகிறது. அப்போது இக்கிணறு திறக்கப்பட்டிருக்கலாம்.
  • இப்படி இன்னும் பல காந்தி கிணறுகள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடும். அவை பற்றிய தகவல்கள் தேடித் தொகுக்கப்பட வேண்டும். தலித் மக்களுக்குத் தண்ணீர் வசதி கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் இந்தக் கிணற்றுத் திட்டத்தைக் காந்தி கொண்டுவந்திருக்கலாம். ஆனால் பெரியாருக்கு இத்திட்டத்தில் உடன்பாடில்லை.
  • காங்கிரஸில் இருந்தபோதே காந்தியின் கொள்கைகள் பலவற்றை விமர்சித்துப் பெரியார் பேசினார். 1925ஆம் ஆண்டு இறுதியில் காங்கிரஸில் இருந்த வெளியேறிய பிறகுதான் சிராவயலில் நடந்த காந்தி கிணறு திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளார். அந்த விழாவிலேயே கிணறு பற்றிய தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கிணற்றைத் திறந்து வைப்பதைச் சிறுமையாகவே தாம் கருதுவதாகவும் மிகுந்த சங்கடத்துடனே அதில் கலந்துகொள்வதாகவும் ஆதிதிராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமம் என்றும்  கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
  • ஆதிதிராவிடர்களுக்கு என்று வெட்டப்படும் தனிக்கிணறு என்பது அவர்கள் மற்றவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதன் அடையாளச் சின்னம்; மற்றவர்களோடு கலக்கத்தக்கவர்கள் அல்ல என்பதற்கான நிரந்தர வேலி என்கிறார். ஆதிதிராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேடம் போட்டுக்கொண்டு தம்மை உயர்ந்தவர்களாகவும் தர்மவான்களாகவும் நிலைநிறுத்தவே இது உதவும் என்கிறார்.
  • சரி, அப்படியானால் தலித் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்க என்ன செய்வது? பெரியார் கேட்கிறார்: நமது கிணறு குளங்களில் ஆதித் திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அனுமதிக்கலாகாது? பட்சிகளும் மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகின்ற தென்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்ன என்ன வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதம் வரும் தண்ணீரை ஆதித்திராவிடர்கள் எடுத்துச் சாப்பிட்டு விடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்?’ (பெரியார் .வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 1, சமுதாயம் 1, .113)
  • காந்தி, பெரியார் இருவருமே கொள்கைகளைப் பேசுபவர்கள் மட்டுமல்ல; நடைமுறைவாதிகள். தீண்டாமையை வெகுவிரைவில் ஒழிக்க முடியாது என்பதைக் காந்தி அறிவார். தீண்டாமை ஒழியும் வரை தலித் மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படக் கூடாது என்னும் நோக்கத்தில் தற்காலிக ஏற்பாடாக இந்தக் கிணற்றுத் திட்டத்தை அவர் முன்மொழிந்திருக்கலாம்.
  • பெரியாரின் பார்வை இதில் மாறுபட்டிருக்கிறது. உடனடியாகத் தீண்டாமையை ஒழித்துவிட முடியும் என்று பெரியாரும் நம்பியவரல்ல. அதற்குக் காலம் எடுத்துக்கொள்ளும் என்றுதான் கருதினார். ஆனால் தனிக்கிணறு என்னும் திட்டம் தீண்டாமை ஒழிப்பைத் தாமதப்படுத்தும், ஆதிக்க சாதியினரைத் தர்மவான்களாகக் காட்டிக்கொள்ளவே உதவும் என்பது அவர் எண்ணம்.
  • ஏற்கனவே ஆதிக்க சாதியினர் புழங்கும் கிணறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தலித் மக்களும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது, அதை நோக்கிச் செல்வதே தீண்டாமையை ஒழிக்கும் எனப் பெரியார் கருதியுள்ளார்.
  • ஈரோடு நகர்மன்றத் தலைவராக அவர் இருந்த போது செய்த சாதனைகளில் ஒன்று காவிரியிலிருந்து குழாய் பதித்து நகர் முழுவதற்கும் தண்ணீர் வசதி வழங்கியது. எல்லோரும் ஒரே குழாயில் தண்ணீர் பிடித்துக் கொள்ளும் நடைமுறையை அவர் சாத்தியப்படுத்தினார். அந்த அனுபவத்தின் அடிப்படையிலும் இந்தத் தனிக்கிணறு பிரச்சினையை அவர் அணுகியிருக்கக் கூடும்.
  • இப்பிரச்சினை காட்டுவது இதைத்தான்: சாதிய அமைப்பு முறைக்குள் உரையாடி சமரசம் காண்பது காந்தியின் பார்வை. சாதிய அமைப்பு முறைக்குள் மீறலை நிகழ்த்துவது பெரியாரின் பார்வை!

நன்றி: அருஞ்சொல் (25 – 12 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்