TNPSC Thervupettagam

பெரிய இறக்கையும் சிறிய இறக்கையும்

January 5 , 2025 6 days 34 0

பெரிய இறக்கையும் சிறிய இறக்கையும்

  • ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பது போல், இறக்கைகளின் நீளம் பறவைகளுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கிறது. நீண்ட இறக்கை உடைய பறவைகள் குறைந்த ஆற்றலைச் செலவிட்டு, காற்றின் உதவியுடன் பறக்கும் திறன் வாய்ந்தவை. திறந்தவெளிகளில் மட்டும்தான் இவற்றால் பறக்க இயலும். அடர்ந்த காடுகள், வளைந்து நெளிந்து பறக்க வேண்டிய இடங்களில், பெரிய இறக்கைகளைக் கொண்டு இவற்றால் பறக்க இயலாது.
  • நீளம் அதிகமாக இருப்பதால் தூக்கும் திறன் அதிகமாக இருக்கும். அதனால் அதிக எடை கொண்ட இரையைத் தூக்கிக்கொண்டு எளிதாகப் பறக்க முடியும். தொலை தூரம் செல்வதற்கு இவை உதவியாக இருக்கும். காற்றின் உதவியுடன் இவை பறப்பதால், காற்று வீசாதபோது, வெப்பநிலை வேறுபாட்டால் காற்று உயராதபோது, இந்தப் பறவைகளுக்குப் பறப்பது சவாலாக மாறிவிடுகிறது.
  • அதே நேரத்தில் சிறிய இறக்கை கொண்ட பறவைகள் தேவையான வகையில் திசையை மாற்றி, குறுகிய இடங்களிலும் எளிதாகப் பறந்து செல்ல முடிகிறது. அடர்ந்த காடுகளிலும் நகரின் சாலைகளிலும், கட்டிடங்களுக்கு இடையிலும் எளிதாகப் பறக்க முடிகிறது. தேவைக்கு ஏற்ற மாதிரி பாதையை மாற்றவும் வேகத்தை மாற்றவும் இவற்றால் முடிவதால், இரையைத் துரத்திப் பிடிப்பதற்கு இவை உதவியாக இருக்கின்றன.
  • நெருக்கடி நிறைந்த சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதற்கு எளிதாக இருக்கும். சட்டென்று வாகனத்தைத் திருப்பலாம். குறுகிய இடத்துக்குள் நுழைந்து சென்றுவிடலாம். காரில் செல்வதற்குக் கடினமாக இருக்கும். சட்டென்று காரைத் திருப்ப இயலாது. அதேபோல நீளமான இறக்கை கொண்ட பறவை பறந்துசெல்வது கடினமாக இருக்கும். நீளம் குறைந்த இறக்கை கொண்ட பறவைக்குப் பறப்பதற்கு எளிதாக இருக்கும்.
  • வீட்டில் இருக்கும் ஜன்னல் கம்பிகளின் வழியாக ஒரு சிட்டுக் குருவியால் எளிதாக உள்ளே வந்துவிட முடியும். ஆனால், கழுகு போன்ற பெரிய பறவைகள் அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாது. சிறகடித்துப் பறக்கும் தொழில்நுட்பத்தைச் சிறிய இறக்கை உள்ள பறவைகள் கொண்டிருப்பதால், எந்தவிதமான சூழ்நிலையிலும் அவற்றால் பறக்க முடிகிறது.
  • ஆனால், சிறகடித்துக் கொண்டே இருப்பதால் ஆற்றல் அதிகமாகச் செலவாகிறது. நெடுந் தொலைவு பறப்பதற்கும் சற்றுச் சிரமப்படுகின்றன. சில பறவை இனங்கள் திறந்த வெளியில் பறப்பதைத் தவிர்க்கின்றன. அப்படிப் பறக்கும்போது வேட்டையாடும் விலங்குகளிடம் அவை சிக்கிக்கொள்ள நேரும்.
  • ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவை, தனது இறக்கையின் அளவிற்கு ஏற்ப தரையிறங்குவதற்குக் கிடைமட்டமாகத் தேவைப்படும் தொலைவு வேறுபடும். அல்பட்ராஸ் போன்ற பறவைகள், இருக்கும் உயரத்திலிருந்து தரையிறங்க எந்த உயரத்தில் இருக்கிறதோ அது போன்று 10 மடங்கு தொலைவு தேவைப்படும். அதே நேரத்தில் அதைவிடச் சற்று சிறிய கடல் பறவைகளுக்கு இந்தத் தொலைவு 8 மடங்காக இருக்கும்.
  • புறாவுக்கு 4 மடங்கு தூரமே போதுமானதாக இருக்கும். எல்லா இடங்களிலும் எளிதாகப் பறந்து செல்லக்கூடிய சிட்டுக்குருவிக்கு இரண்டு மடங்கு தொலைவே போதுமானது. தேவையான திசையை மாற்றி முன்பும் பின்பும் பயணிக்கும் ஓசனிச்சிட்டுகளுக்கு, இருக்கும் இடத்தில் இருந்து நேரடியாகக் கிட்டத்தட்ட அதே இடத்தில் இறங்கவும் ஏறவும் முடியும்.
  • இறக்கையின் அளவுக்கு ஏற்றாற் போல் வேகமும் இதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மிதிவண்டியை நிறுத்துவதற்கு எவ்வளவு தொலைவு தேவை என்று கேட்டால், அந்த மிதிவண்டியில் எந்த விதமான பிரேக் இருக்கிறது என்பதோடு, அது எந்த வேகத்தில் பயணப்படுகிறது என்பதும் முக்கியமானது. அதுபோல் அதிவேகமாகப் பறக்கும் பறவைகள், வேகத்தைக் குறைத்து உயரத்திலிருந்து இறங்குவதற்குச் சற்று அதிகத் தொலைவு தேவைப்படும்.
  • இருந்தாலும் அவை அதிக இறக்கை நீளம் கொண்ட கடற்பறவை களைவிடச் சற்றுக் குறைவான தொலைவிலேயே இறங்கிவிடும். உயரே பறந்துகொண்டிருக்கும் பறவை, தான் இருக்கும் இடத்திலிருந்து இருந்து மிகக் குறுகிய தொலைவில் இறங்கக்கூடிய திறமை வாய்ந்தது. தான் எங்கே இறங்க வேண்டும் என்பதை முடிவு செய்து, உடனே அந்த இடத்தில் இறங்கிவிடுகிறது. அது மரத்தின் கிளையாகவும் இருக்கலாம், வீடுகளின் மேற்கூரையாகவும் இருக்கலாம். சவால் இன்றி, எளிதாக அவற்றால் இறங்கவும் மீண்டும் பறக்கவும் முடிகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்