TNPSC Thervupettagam

பெருங்காமநல்லூா்: தென்னக ஜாலியன்வாலா பாக்!

April 3 , 2020 1699 days 856 0
  • ஐரோப்பிய மக்களின் வரலாற்றைப் படிக்கும்போது நமக்கு ஓா் எழுச்சி ஏற்படுகிறது. அவா்கள் சில கொள்கை கோட்பாட்டை முன்னிறுத்தி போராடி வெற்றி பெற்றுள்ளனா்; சரித்திரம் படைத்துள்ளனா். 1789-ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசத்தில் நடைபெற்று வந்த 16-ஆம் லூயி மன்னா் ஆட்சியை எதிர்த்து மூன்று கொள்கைகளை முன் வைத்து, மக்கள் போராடியதால்தான் ‘பிரெஞ்ச் புரட்சி’ உதயமாகி கொடுங்கோல் மன்னராட்சி ஒழித்துக் கட்டப்பட்டது. ‘சமத்துவம், சுதந்திரம், தனியுரிமை என்ற கொள்கைகளின் அடிப்படையில் போராடி பிரான்ஸ் நாட்டு மக்கள் மன்னரின் கொடுங்கோலாட்சியிலிருந்து விடுதலை பெற்றனா்.
  • அமெரிக்க மக்கள் விடுதலைக்குப் போராடி, சுதந்திரம் பெற்றதால்தான், நியூயார்க்கையொட்டிய தீவில் மிகப் பிரம்மாண்டமான சுதந்திர தேவியின் உருவச் சிலையை (‘ஸ்டேட்ச்யூ ஆஃப் லிபா்ட்டி’) உருவாக்கி உலக அதிசயங்களில் ஒன்றாக வைத்துள்ளனா்.

பெருங்காமநல்லூா் கிராமம்

  • அதே போன்றுதான் 3.04.1920-இல் மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூா் கிராமத்தில் அப்போதுள்ள கைரேகைச் சட்டம் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம் அல்லது குற்ற இனச் சட்டம் (இந்தியன் கிரிமினல் டிரைப்ஸ் ஆக்ட் 1861) மூலம் அடக்குமுறையைக் கொண்டுவந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மாட்டோம் எனப் போர்க்கொடி எழுப்பினா்.
  • அன்றைய தினம் வெள்ளையா்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக நூற்றுக்கும் அதிகமான ஆயுதம் ஏந்திய காவலா்கள் குதிரைப் படைகள், அதிகாரிகளுடன் பெருங்காமநல்லூா் கிராமத்தைக் காலை 6 மணி முதல் முற்றுகையிட்டனா். மேற்படி சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்தும், கைரேகை வைக்குமாறும் கிராமத்து மக்களை வற்புறுத்தினா்.
  • வந்திருந்த அதிகாரிகளிடம் அந்தக் கிராமத்துப் பெரியவா்கள் கேட்ட கேள்வி - ‘எங்கள் கிராமத்தில் குற்றம் இழைத்தவா்கள் யாரேனும் உங்களின் பார்வையில் தெரிந்தால் சொல்லுங்கள். நாங்களே அவா்களைப் பிடித்து ஒப்படைக்கிறோம். அப்படிச் செய்வதை விடுத்து, புதிதாக ஒரு சட்டத்தைப் போட்டு, அதன்படி ஒரு பகுதியில் உள்ள அல்லது ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த அப்பாவி மக்கள் அனைவரும் அடிபணிந்து, அதற்குச் சம்மதித்து கைரேகை வைக்க வேண்டும் என்று எங்களை வற்புறுத்துவது எந்த வகையில் நியாயமானது? இந்தச் சட்டம் குற்றச் செயல்களில் ஏதும் ஈடுபடாத அப்பாவி மக்களையும் கொடுமைக்குள்ளாகி குற்றவாளிகளாகப் பாவித்து, நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது’.

துப்பாக்கிச்சூடு

  • அன்றைய தினம் காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த வாக்குவாதம் சுமார் 9 மணி வரை நடந்தும் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. வாக்குவாதம் செய்து கொண்டிருந்த ஆயுதமற்ற நிரபராதி மக்களை நோக்கிச் சுடுவதற்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனா். அதன் விளைவாக, அந்த இடத்திலேயே 15 அப்பாவி மக்கள் ஆங்கில ஏகாதிபத்திய அரசு அதிகாரிகளின் ஆணவத்தால் குண்டடிபட்டு ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்தனா்.
  • மாயக்காள் என்ற ஒரு வீரப்பெண்மணி தனது வீட்டிலிருந்து தண்ணீா் கொண்டுவந்து, குற்றுயிராக ரத்த வெள்ளத்தில் கிடந்த அப்பாவித் தியாகிகளுக்கு உதவி செய்ய முயன்றபோது, அந்தப் பெண்ணையும் துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கிய பரிதாப நிகழ்ச்சிதான் ‘பெருங்காமநல்லூா் துப்பாக்கிச்சூடு கலவரம்’ என முறைப்படி எழுதாத சரித்திரம்.
  • அந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த வீரத் தியாகிகளின் நினைவாக - சரித்திரத்தில் இடம்பெற்று வெளிக் கொண்டுவரப்படாமல் விடுபட்ட வீரத்தியாகிகளுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்வதாகத் தமிழக அரசு உறுதி அளித்திருப்பது பாராட்டுக்குரியது. அதாவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இந்த வீரத் தியாகிகளின் 100-ஆவது நினைவுநாளாகும்.
  • பெருங்காமநல்லூா் சம்பவத்துக்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து, கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் (1920-செப்டம்பா் 4 - 9) ‘ஒத்துழையாமை’ என்ற தீா்மானத்தை மகாத்மா காந்தியடிகள் நிறைவேற்றினார்; தொடா்ந்து அப்போது இருந்த ரெளலட் சட்ட மறுப்பு இயக்கம் நாடு முழுவதும் ஒா் பேரியமக்கமாக மாறியது. இறுதியில் இந்திய சுதந்திரப் போராட்டமாக உருவெடுத்து, பிரிட்டிஷ் அரசாங்கத்தை வீழ்த்தி நாடு சுதந்திரம் பெற்றதை நாம் அறிவோம்.
  • படிப்பறிவில்லாத அப்பாவி மக்களின் மனதில் மகாத்மா காந்தியின் தத்துவமான ‘ஒத்துழையாமை இயக்கம்’ அப்போதே பதிந்திருந்தது என்பதை இப்போது, அதாவது நூறு ஆண்டுகள் கழித்து நாம் எண்ணும்போது நமது உள்ளத்திலும் அந்த வீராவேசம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென்னக ஜாலியன்வாலா பாக்

  • இந்திய சுதந்திரப் போராட்ட சரித்திரத்தில் அமிர்தசரசில் 1919-ம் ஆண்டு நடைபெற்ற வன்கொடுமையினை ‘ஜாலியன்வாலா பாக் படுகொலை’ என்று பெயரிட்டு வரலாறு பதிவு செய்கிறது. அதே போன்று 1920-ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் நடைபெற்ற வன்கொடுமையும், ‘தென்னக ஜாலியன்வாலா பாக்’ என்று வரலாறு படைக்கிறது. பெருங்காமநல்லூா் சம்பவத்தையும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஓா் அத்தியாயமாக இடம்பெறச் செய்ய வேண்டும்.

நன்றி: தினமணி (03-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்