TNPSC Thervupettagam

பெருநாட்டில் இருந்த தமிழ்!

April 2 , 2019 2096 days 1262 0
  • தென்அமெரிக்கா மிகவும் விளம்பரம் பெறாத கண்டம். தென்அமெரிக்காவில் பெரு என்ற நாடும் உள்ளது. இந்தப் பெரு நாட்டில் இன்கா என்ற இனத்தவரும் வந்தேறிகளாகிய ஸ்பானிய மரபினரும் வாழ்கின்றனர். இன்கா என்பது  இளவரசனைக் குறிக்கும் சொல்.  பெரு நாட்டில் ஏறத்தாழ 3 கோடி மக்கள் இருக்கின்றனர்.
பெரு நாடு
  • இந்த நாடு குறித்து  சிலர் ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளனர். தனிநாயக அடிகளார் வீரகேசரி பருவ இதழில் இன்கா இனத்தவரைப் பற்றி கட்டுரை ஒன்று  எழுதியுள்ளார் (5.1953). இராமநாதனும் செந்தமிழ்ச் செல்வி இதழில் கட்டுரை எழுதியுள்ளார். பெரு நாட்டில் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்து வந்தனர். கடற்கரை ஒட்டிய நாடாக பெரு இருப்பதால், கடல் வழியாக வந்தவர்கள் அங்கு குடியேறியிருப்பார்கள். பண்டைத் தமிழர்கள் நெடுங்கடல் கடந்து சென்றவர்கள் என்பதும் மெக்சிகோ நாட்டு மாயன் இனத்தவர் ஆதி தமிழரின் வழிவந்தவர் என்பதும் நினைவுகூரத்தக்கன.
  • சூரியனின் மகனான மான்கோ, பெரு நாட்டில் பிறந்தான் என்று அந்த நாட்டுத் தொன்மங்கள் தெரிவிக்கின்றன. இவனுடைய வழி வந்தவர்கள் அங்கு ஆட்சி செய்தனர். இவர்களில் வீரகோச்சா என்ற மன்னன் மிகுந்த சிறப்புக்குரியவன். இவன்தான் மச்சு பிச்சுவில்  வாழ்ந்தவன். இவன் தமிழகத்து இராசராசன் போன்ற சிறப்புக்குரியவன்.
  • இவனுடைய மகன் பாச்சாகுட்டி, கி.பி.1438 முதல் 1471 வரை ஆட்சி செய்தான். இன்கா அரசர்களிலேயே இவன் மிகுந்த பெருமைக்குரியவன் என்று வரலாற்றாசிரியர் சர். கிளமெண்ட்ஸ் மார்க்கம் போற்றியுள்ளார்.
  • பெரு நாடு ஸ்பெயின் அரசின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. அதற்குப் பிறகு அது சுதந்திர நாடாகிவிட்டது. பெரு நாட்டை அதுவரை ஆட்சி செய்த அரசர் பரம்பரை ஆயர் இன்கா மரபினர் எனப்பட்டது. (சிலர் இத்தொடரை ஐயர் இன்கா என்று உச்சரித்தனர்).
தமிழ்
  • ஆயர், ஐயர் என்ற சொற்கள் தமிழ் ஒலி பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. மெக்சிகோவில் அஸ்தெக்கரும் தோல் தேக்கரும் பெருவில் இன்காக்களும் வரலாற்று நூல்களில்  பெயரும் புகழும் பெற்ற மக்கள். இந்தப் பண்டை நாகரிகங்களுடன் தமிழ்ப் பண்பு நிலையைப் பிணைத்துப் படித்து ஆராய்ச்சி செய்வதும் தமிழாராய்ச்சியின் புதிய துறையாகும் என்று தனிநாயக அடிகள் அடியெடுத்துக் கொடுத்தார்.
  • மாயா, இன்கா நாகரிகங்கள் இந்தியாவுடன் (தமிழகத்துடன்) தொடர்புடையது என்று சமன்லால் தெரிவித்துள்ளார்.
இன்கா மக்கள்
  • இன்கா மக்கள் சூரியனை வணங்கினர். வீரகோச்சா என்ற கடவுளே இந்த உலகத்தைப் படைத்தார் என்று நம்பினர். இந்தப் பூமி என்ற பெண் கடவுளுக்குப் பச்சை மாமா என்று பெயர் தந்தனர். பச்சையம்மன் என்ற பெயரின் திரிபே பச்சை மாமா என்பது. அவர்கள் பாம்பையும் தொழுதனர்.
  • தமிழகத்தில் பாம்பை வணங்கும் பழக்கம் இன்றுவரை உள்ளது. தமிழகத்தில் அரசனை இறைவனாகப் போற்றும் பழக்கம் இருந்தது.
  • இன்கா மக்களும் மன்னனை இறைவனாக வணங்கினர். இன்கா மக்களின் கொச்சாவா மொழியில் ரே என்றால் இறைவன் என்பது பொருள். மூன்று உலகங்கள் உள்ளன என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது. இதே நம்பிக்கை இன்கா மக்களிடமும் உள்ளது. காஞ்சி, திருப்பதி முதலிய நகரங்களை புனிதத் தலங்களாக இங்குள்ள தமிழ் மக்கள் நினைக்கின்றனர். இத்தகைய நம்பிக்கை அங்கும் வாழ்கிறது.
  • தமிழகத்தில் கிராம வாழ்க்கையே ஓங்கியுள்ளது. பெரு நாட்டிலும் இதே நிலைமை இருக்கிறது. இங்கிருப்பது போன்று அங்கும் கிராமத்துப் பெண்கள் வயலில் வேலை செய்கின்றனர்.
  • பழந்தமிழர் நிலவின் அடிப்படையில் மாதம் வகுத்தனர். இன்காவினரிடமும் இந்த முறை இருந்தது.  சமுதாயத்தில் சிறப்பாக வாழ்ந்த ஒருவனைப் பற்றி நாட்டுப்புறப் பாட்டு எழுதிப் பாடி மகிழும் பாங்கு தமிழ் மண்ணில் உள்ளது. மதுரை வீரன் கதை அண்ணன்மார் கதை. இத்தகைய மரபு பெரு நாட்டிலும் வாழ்கிறது. பிரமிடு எனப்படும் கூர்முனைக் கட்டடம் எகிப்தில் உள்ளது. ஆதி தமிழரான மாயன் மக்களும் கூர்முனை வழிபாட்டுக் கட்டடங்கள் அமைத்தனர்.
சான்றுகள்
  • தமிழகத்துக் கோபுரங்களும் ஏறத்தாழ பிரமிடு வடிவம் உடையவை. கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில் கோபுரம் இதற்குச் சரியான சான்றாகும். பெரு நாட்டிலும் 10 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.மு.200 வரை இருக்கலாம். பெரு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் சிறப்பு, உயர்வு என்பது பொருள். பெரு என்ற அடைமொழி அமைந்த ஊர்ப் பெயர்களும் மனிதரின் பெயர்களும் தமிழ்நாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டு: பெருங்களத்தூர், பெருவழுதி. பெரு என்ற நாட்டின் பெயர், உயர்வு என்ற பொருளில் அமைந்திருக்கக்கூடும்.
  • ஏனெனில், இந்த நாடு 15,000 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இந்த நாட்டின் சில மாநிலங்களின் பெயர்கள் தமிழை நினைவூட்டுகின்றன. சிரிப்பா, ஊரு ஆகிய பெயர்கள் கொண்ட மாநிலங்கள் இங்குள்ளன. வாரி என்றால் மதில் சுற்று என்பது பொருள். வாரி என்ற பெயரிலும் அங்கு ஓரிடம் இருக்கிறது. சில்லம் என்றால் சிறு துண்டு. சில்லன் என்ற பெயரில் அங்கு ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. மச்சு என்பது மாடியைக் குறிக்கும். அங்கு ஆண்டீஸ் மலைமேட்டுப் பகுதியில் புகழ்பெற்ற மச்சு பிச்சு என்ற வாழிடம் அமைந்துள்ளது.
  • 12,000 ஆண்டுகளுக்குப் பின் இன்கா மக்களின் கொச்சுவா மொழியில் கோன், மாய, ஆசா, மந்திர முதலிய தமிழ்ச்சொற்கள் இன்றும் வாழ்கின்றன. திரிபுற்ற நிலையிலும் பல தமிழ்ச் சொற்கள் வழக்கத்தில் உள்ளன. அவை சாக் (நாக்கு), சியானோ (சிறியன்), கஸ்கோ (கிழக்கு- இதன் பெயரில் பெரு நாட்டில் நகரம் ஒன்று உள்ளது.), உவாரி (வாரி - மதில் சுவர்), அடி - (அப்பன்) முதலியவை.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்