TNPSC Thervupettagam

பெருந்தொற்றுக் காலத்தில் 69 சதவிகிதம் விசாரணைக் கைதிகள் சிறையில் இருப்பது நியாயமா

May 17 , 2021 1349 days 531 0
  • நாடு முழுவதும் சிறைகள் நிரம்பி வழிவது நீண்ட காலப் பிரச்சினை என்ற போதும், பெருந்தொற்றுக் காலத்தில் இது மிகவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது.
  • சமீபத்தில், கரோனாவை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைவாசிகளைத் தற்காலிகமாக விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட கால அளவுக்குப் பிணை அல்லது சிறைவிடுப்பில் யாரை விடுவிக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு உயர் அதிகாரம் பெற்ற குழுக்களை நிர்மாணிக்குமாறு கேட்டிருந்தது.
  • கடந்த வாரத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில், விடுவிப்பதற்கு இன்னும் அதிக அளவிலான சிறைவாசிகளை அடையாளம் காணுமாறும், அதிக அளவில் சிறைவிடுப்புகளை அனுமதிக்குமாறும் கூறியுள்ளது.
  • கட்டற்றுப் பெருகிவரும் எந்தவொரு தொற்றையும் நெரிசல் மிக்க சிறைகளுக்குள் பரவாமல் தடுக்கும் வகையில், விசாரணைக் கைதிகளைக் காவல் நீட்டிப்புக்காகவும் விசாரணைகளுக்காகவும் வாகனங்களில் நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்லும் வழக்கங்களை நிறுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
  • சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பது, சிறைவாசிகளின் உயிரையும் அவர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது. 2019-ல் மட்டும் சிறைவாசிகளின் விகிதாச்சாரம் 118.5% ஆக அதிகரித்துள்ளது.
  • தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக விவரங்களின்படி 2019-ல் 18,86,092 பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,30,487 பேர் விசாரணைக் கைதிகள். தவிர, மொத்த சிறைவாசிகளில் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 69.5%. மேலும், சிறைத் துறைக்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையும் அதிகம் (ரூ.6,818.1 கோடி).
  • சிறையில் கட்டாயம் வைத்தே ஆக வேண்டும் என்று வரிசைப்படுத்த வேண்டிய குற்றங்களையும், சிறையில் ஒருவரை வைத்திருப்பதற்கான காலகட்டத்தையும் அரசுகள் மறுவரையறுக்க வேண்டிய தருணம் என்றும்கூட இதைச் சொல்லலாம்.
  • வன்செயலுடன் எந்தவொரு நேரடித் தொடர்பும் இல்லாமல் பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்களைப் போன்ற அரசியல் கைதிகளுக்கும் கூடத் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டுவருகிறது.
  • அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தவிர்த்து இதற்கு வேறு காரணங்கள் இல்லை.
  • டெல்லியைச் சேர்ந்த சில அரசியல் செயற்பாட்டாளர்கள், கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த கலவரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
  • இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலாவது, இத்தகைய வழக்குகளின் விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதோடு, நிரந்தரமாகவே இதற்கெல்லாம் ஒரு தீர்வு காணவும் நாம் முற்பட வேண்டும்.
  • சிறைகளின் நெரிசலைக் குறைப்பது குறித்துப் பேசுகிறபோது, அது சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக மட்டுமின்றி, சிறை ஊழியர்கள் நிலையையும், சிறைச் சூழலையும்கூட கணக்கில் கொள்வதாகவும் அது இருக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்