பெருமிதப்படுவோம்!
- சுதந்திர இந்திய வரலாற்றின் இன்னொரு மைல்கல்லாக இன்றைய தினம் அமைகிறது. இந்தியா என்கிற பாரதம் ஒரு தேசமாக உருவாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கி 78 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. பிறந்த நாள்கள் என்பது அதுவரை வந்த பாதையில் எதிர்கொண்ட லாப நஷ்டங்களை மட்டுமல்ல, அடுத்து வரப்போகும் ஆண்டுகளில் நமது பாதையை எப்படி தகவமைத்துக் கொள்கிறோம் என்பது குறித்து சிந்திப்பதற்கான நேரமும்கூட...
- 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரிட்டிஷ் காலனிய ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுபட்டபோது எழுந்தது மகிழ்ச்சி ஆரவாரம் மட்டுமல்ல; பிரிவினையால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்த லட்சக்கணக்கானோரின் அவலக் கண்ணீரும், மதக் கலவரத்தால் பெருகி ஓடிய ரத்த ஆறும், அழுகுரல்களும் இதயத்தை உலுக்கின. அந்த பாதிப்பிலிருந்து நம்மால் மீண்டு எழ முடிந்திருக்கிறது. ஆனால், இரு கரங்களை வெட்டியதுபோல ஹிந்துஸ்தானத்திலிருந்து காலனிய ஆட்சி நிகழ்த்திய பிரிவினையின் காரணமாக உருவான பாகிஸ்தானும், இப்போது வங்கதேசமாக மாறியிருக்கும் கிழக்கு பாகிஸ்தானும் கலவர பூமிகளாகத் தொடர்கின்றன.
- 500-க்கும் அதிகமான சமஸ்தானங்களை 1947 சுதந்திரத்தைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து, இந்தியா என்கிற தேசத்தைக் கட்டமைத்த சர்தார் வல்லபபாய் படேலையும், அவருக்கு வலதுகரமாகத் திகழ்ந்த வி.பி. மேனனையும் நாம் மறந்திருக்கலாம். ஆனால், அவர்களது தொலைநோக்கு சிந்தனையும், அயராத உழைப்பும், தன்னம்பிக்கையும்தான் இன்று இந்தியா ஒரு தேசமாக 78-ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
- நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது சாதிக்க வேண்டியவையும், கடக்க வேண்டிய சவால்களும் ஏராளம் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும்கூட மணிப்பூர் போல, ஜம்மு-காஷ்மீர் போல ஆங்காங்கே பிரச்னைகள் எழுவதும், அடங்குவதும், அடக்கப்படுவதும் தொடரத்தான் செய்கின்றன. அவை எந்தவொரு நாட்டுக்கும் தவிர்க்க முடியாத பிரச்னைகள் என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
- எத்தனையோ பிரச்னைகளுக்கு இடையிலும், அச்சுறுத்தல்களுக்கு நடுவிலும், சுற்றி இருக்கும் அண்டை நாடுகளின் தடுமாற்றங்களுக்கு மத்தியிலும் அமைதிப் பூங்காவாக ஜனநாயகம் என்கிற பாதையில் இந்தியா நடைபோடுகிறது என்பதே மிகப் பெரிய வெற்றி என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
- இந்தியாவில் இருந்து பிரிந்த அண்டை நாடான வங்கதேசத்தின் நிலைமையையே எடுத்துக்கொள்வோம். ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான மதக் கலவரத்தில் ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன; சூறையாடப்பட்டிருக்கின்றன; தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. நிலைமை கை மீறிப் போய் அந்த நாட்டின் பிரதமர் இரண்டாவது முறையாக வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் தேடியிருக்கிறார்.
- நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இடைக்கால அரசு போராடிக் கொண்டிருக்கிறது. இப்போது ஷேக் ஹசீனாவை சர்வாதிகாரி என்று பழிக்கும், அதே வங்கதேசம் 40 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் திரும்பி வரமாட்டாரா, வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்ட மாட்டாரா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது. வங்கதேசத்துக்கு விடுதலை பெற்று தந்த "வங்கபந்து' (தேசப்பிதா) என்று போற்றப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் அடுத்த நான்கு ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்ட அவலத்தை என்னவென்று சொல்ல?
- வங்கதேசம் மட்டுமல்ல, இந்தியாவுக்கு வடக்கே இருக்கும் நிலம் சூழ்ந்த இமயமலை நாடான நேபாளத்தை எடுத்துக்கொண்டால் 2008-இல் மன்னராட்சி அகற்றப்பட்டு ஜனநாயகம் உயர்ந்தது. ஆனால், இன்றுவரையில் நிலையான ஆட்சியில்லாமல், வளர்ச்சி காணாமல் நேபாளம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
- வடகிழக்கில் உள்ள மியான்மரில் ராணுவத்தின் அடக்குமுறை தொடர்கிறது. ராணுவத்துக்கெதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறுபான்மை ரோஹிங்கியாக்கள் பெரும்பான்மை பெüத்தர்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.
- இந்தியாவிற்கு கீழே இருக்கும் தீவான இலங்கையின் நிலைமை வித்தியாசமாக இல்லை. சில மாதங்களுக்கு முன்பு இப்போது வங்கதேசத்தில் நடப்பது அங்கே நடந்தது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தாலும் சிறுபான்மை தமிழர்கள் தங்களுக்கான முழு உரிமையும் பெறாமல் தன்னாட்சி அதிகாரத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
- மாலத்தீவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றாலும்கூட, அதன் அதிபர் முகமது மூயிஸுவின் செயல்பாட்டில் சர்வாதிகாரம் உயர்ந்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
- நமக்கு ஒரு நாள் முன்பு விடுதலை பெற்றுவிட்ட பாகிஸ்தானைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசும், ராணுவமும் மத அடிப்படைவாத சக்திகளையும், பயங்கரவாத அமைப்புகளையும் ஆதரிக்கும் விசித்திரத்தை பாகிஸ்தானில் மட்டுமே பார்க்க முடியும். ஆண்டுதோறும் உலக வங்கியோ, சர்வதேச நிதியமோ, அமெரிக்காவோ, ரஷியாவோ, சீனாவோ அந்த நாடு திவாலாகாமல் உதவிக்கரம் நீட்டுவதால், பாகிஸ்தானின் நிர்வாகக் கட்டமைப்பு சிதறிவிடாமல் தொடர்கிறது.
- பாகிஸ்தானோ, வங்கதேசமோ, நேபாளமோ, மியான்மரோ, இலங்கையோ, மாலத்தீவோ அல்ல நமது இந்தியா. 2024 தேர்தல் முடிவுகள் இந்தியாவில் ஜனநாயகம் எந்த அளவுக்கு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதன் அடையாளம்.
- சமயம் என்பது கலாசாரத்தின் ஓர் அங்கம்; கலாசாரம் மதம் சார்ந்தது அல்ல; அதை உணர்ந்திருப்பதால்தான் இந்தியா உயர்ந்து வலிமையுடன் தொடர்கிறது.
நன்றி: தினமணி (15 – 08 – 2024)