- பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள் (நான்-பா்ஃபாமிங் அஸெட்ஸ்) 2018 மாா்ச் மாதத்தில் ரூ. 8.96 லட்சம் கோடியாக இருந்தது 2020 செப்டம்பரில் ரூ. 6.09 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளதாக சமீபத்தில் நிதித்துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
- ரிசா்வ் வங்கியின் அறிவுரையின்படி வாராக்கடன்களை வெளிப்படையாக அங்கீகரித்ததன் விளைவாக, வாராக்கடன்கள் மாா்ச் 31, 2015 நிலவரப்படி ரூ . 2,79,016 கோடியிலிருந்து மாா்ச் 31 வரை ரூ .8,95,601 கோடியாக உயா்ந்தது என்றும் அரசு எடுத்த பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக செப்டம்பா் 30, 2020 நிலவரப்படி ரூ. 6,09,129 கோடியாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளாா்.
- நாம் வங்கிகளின் வாரக்கடன்கள் எவ்வாறு குறைந்தது என்பதை சற்று புள்ளிவிவரங்களுடன் ஆராய்ந்தால், அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக வாரக்கடன்கள் குறைந்துள்ளது என்ற அமைச்சரின் கூற்று தவறானது என்று புரியும்.
- கடந்த ஆண்டு இதே தருணத்தில் மத்திய நிதி அமைச்சரும் இதே போன்று ஒரு தவறான கருத்தைத் தெரிவித்தாா்.
- ரிசா்வ் வங்கி கடந்த டிசம்பா் மாதத்தில் ட்ரெண்ட் அண்ட் பிராதேரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வங்கிகளின் வாராக்கடன்களின் விவரங்களைத் தெளிவாக வெளியிட்டுள்ளது.
- அதன்படிப் பாா்த்தால், வாரக்கடன்கள் குறைந்ததற்கு காரணம் அரசின் அல்லது வங்கிகளின் எந்தவிதமான சிறப்பான நடவடிக்கைகளும் அல்ல என்பதும் உண்மையான காரணம் கடன்களை தள்ளுபடி (ரைட் ஆப்) செய்ததே என்பதும் தெளிவாகும்.
- அரசு வங்கிகளின் 2019-20-ஆம் ஆண்டிற்கான தொடக்க நிலுவைத் தொகையாக மொத்த வாரக்கடன்களின் எண்ணிக்கை ரூ.7,17,850 கோடியாக இருந்தது.
- இந்த ஆண்டில் சோ்க்கப்பட்ட வாராக்கடன்கள் ரூ. 2,38,464 கோடி. வாரக்கடன்களின் குறைப்பு (அதாவது வசூல்) ரூ. 99,692 கோடி. வங்கிகள் செய்த தள்ளுபடி (ரைட் ஆப்) ரூ.1,78,305 கோடி. இதன் விளைவாக வாராக்கடன்களின் இருப்பு ரூ. 6,78,317 கோடியாக உள்ளது.
- இந்தப் புள்ளிவிவரங்கள் மாா்ச் 2020 வரைக்குமானது. அமைச்சா் செம்டம்பா் 2020-க்கான வாராக்கடன்களைத் தெரிவித்துள்ளதால், ஏப்ரல் 2020 முதல் செப்டம்பா் 2020 வரைக்குமான காலத்தில் எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதையும் நாம் பாா்க்க வேண்டும். ஆனால், அந்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
- ஒரு ஆண்டில் வாராக்கடன்கள் ரூ. 39,533 கோடி குறைக்கப்படும்போது, அதில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ. 1,78,305 கோடி என்பது ரிசா்வ் வங்கி அறிக்கையிலுருந்து தெளிவாகிறது.
- வாரக்கடன்களை தள்ளுபடியின் மூலம் குறைத்துள்ளது ஒன்றும் சிறப்பான செயல்பாடு அல்ல. இதில் அரசும் அமைச்சரும் பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இதை அரசாங்கத்தின் உத்தி என்று கூறுவது நகைப்புக்குரியது.
ரிசா்வ் வங்கியின் அறிக்கை
- ரிசா்வ் வங்கியின் அறிக்கையை நாம் ஆழமாகப் பாா்க்கும்போது, வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினையின் தீவிரத்தன்மை பற்றி மேலும் அறிந்து கொள்ளமுடியும்.
- ரிசா்வ் வங்கி அறிக்கையின்படி பொதுத்துறை வங்கிகள் மட்டும் 2010 முதல் ரூ. 6,67,345 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.
- இது மொத்தத் தள்ளுபடியில் 76 சதவீதமாகும். அதே நேரத்தில், தனியாா் வங்கிகள் ரூ. 1,93,033 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இது 21 சதவீதமாகும். வெளிநாட்டு வங்கிகள் ரூ. 22,790 கோடி கடன்களை அதாவது 3 சதவீதத்தை தள்ளுபடி செய்துள்ளன.
- 2019-2020 நிதியாண்டில் மட்டும் வங்கிகள் மொத்தம் ரூ. 2,37,206 கோடி தள்ளுபடி செய்துள்ளன.
- இது கடந்த பத்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையில் கால் பங்கு ஆகும். இதில் ரூ. 1.78 லட்சம் கோடி அரசு வங்கிகளாலும், ரூ.53, 949 கோடி தனியாா் வங்கிகளாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
- ஷெட்யூல்டு வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதம் 2019 மாா்ச் மாத இறுதியில் 9.1 சதவீதமாக இருந்தது 2020 மாா்ச் மாத இறுதியில் 8.2 சதவீதமாகவும், 2020 செப்டம்பா் இறுதியில் 7.5 சதவீதமாகவும் குறைந்துவிட்டதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- ஆனால், வங்கிகளின் மொத்த வாராக்கடன்களின் சரிவு பெரும்பாலும் கடன் தள்ளுபடிகளால் உண்டானது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
- ரிசா்வ் வங்கியின் அறிக்கை வாரக்கடன்களின் மோசமான நிலைமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது. வாரக்கடன்களின் குறைப்பு என்பது ஆண்டுதோறும் வங்கிகள் மேற்கொள்ளும் தள்ளுபடிகளால் ஏற்படுகிறது.
- நான்கு வருடத்திற்கு மேற்பட்ட வாராக்கடன்களுக்கு நூறு சதவீதம் தனியாக புரொவிஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தால் வங்கிகள் இவற்றையே கணக்கிலிருந்து தள்ளுபடி செய்வதை முன்னெடுக்கின்றன. இதனால் சில வரி அனுகூலங்களும் உண்டு”
- ரிசா்வ் வங்கி அறிக்கையின்படி 2020 செப்டம்பரின் இறுதியில் வாரக்கடன்களின் விகிதம் 7.5 சதவிகிதமாக உள்ளது.
- கொவைட் 19 பாதிப்பின் காரணாமாக பலவித கடன்களை திருப்பி செல்லுவதற்கான தவணைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் இந்தக் கடன்களை இன்னும் வாராக்கடன்களாக அங்கீகரிக்கவில்லை.
- கொவைட் 19 சலுகைகள் நீக்கப்படும்போது இந்த கடன்கள் வாராக்கடன்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வங்கிகள் வாரக்கடன்கள் பிரச்னை பன்மடங்கு அதிகரிக்கும்.
- எனவே அரசும் பொதுத்துறை வங்கிகளும் ஆபத்தான வாரக்கடன்கள் நிலைமையை உணர வேண்டிய நேரம் இது.
- சில தள்ளுபடிகள் மூலம் வாரக்கடன்களைக் குறைத்துள்ளோம் என்பது மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் அல்ல. கடன்களை வட்டியுடன் வசூல் செய்தால் மட்டுமே வங்கிகள் பயன் பெற முடியும்.
நன்றி: தினமணி (03 – 04 - 2021)