TNPSC Thervupettagam

பெருவெள்ளம்: தவிக்கும் தென் சென்னை

December 14 , 2023 220 days 145 0
  • 2015 பெருவெள்ளத்தால் தென் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளும் விளைவுகளும், 2023 மிக்ஜாம் புயலில் மீண்டும் அரங்கேறியுள்ளன. காலம் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. 2015 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள், 2023 வெள்ளத்துக்கும் இலக்காயின. ஒரு பேரிடர்தந்த படிப்பினையைக் கற்றுக்கொள்ளாததும் வெள்ள நீர் வடிவதில் நீடிக்கும் நிலையும் அரசு இயந்திரம், உள்ளாட்சி அமைப்புகளின் போதாமையை வெளிப்படுத்துகின்றன.

முகம் மாறிய தென் சென்னை

  • தென் சென்னையின் கட்டிடக் காட்டில், இன்று வெள்ளம் சூழும் இடங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு நீர் வழிப் பகுதிகளாக இருந்தன. ஏரிகள், குளங்கள், பள்ளிக்கரணை சதுப்புநிலம் எல்லாம் ஓரளவுக்கு உயிர்ப்புடன் இருந்தன. ஆனால், தென் சென்னையை மையமாகக் கொண்டு உருவான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, தென் சென்னையின் முகத்தை மாற்றியமைத்தது. ஒருபுறம் ரியல் எஸ்டேட்காரர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நீர்நிலைகள், சதுப்புநிலம், நீர் வழிப் பாதைகள் எல்லாம் ஆக்கிர மிக்கப்பட்டன. சென்னை நகரை விரிவாக்கும் அரசின் கொள்கையும் அதற்கு ஒரு காரணம். விளைவு, கடந்த 20 ஆண்டுகளில் தென் சென்னையின் அடையாளமாக வானளாவிய கட்டிடங்கள் மாறியிருக்கின்றன. எங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் முளைத்திருக்கின்றன. இதுபோன்ற அடுக்குமாடிக் குடியிருப்புகள், கட்டிடங்கள் அமையும் பகுதிகளின் வரலாறு தெரியாமல், வீடுகளை வாங்கிய மக்கள், இப்போது வெள்ளத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏரிகளும் சதுப்புநிலமும்

  • தென் சென்னைக்கு இயற்கை கொடுத்த பெருங்கொடை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். அது எவ்வளவு நீரையும் உள்வாங்கிக் கொள்ளும். கட்டுக்கடங்காத நகரமயமாதலின் விளைவால், 1965இல் 5,500 ஹெக்டேராக இருந்த நிலம், 550 ஹெக்டேர் என்ற அளவில் இன்று சுருங்கிவிட்டது. அதேபோல தென் சென்னையில் உள்ள வேளச்சேரி ஏரி, நாராயணபுரம் ஏரி, கல்குட்டை ஏரி, ஜல்லடையான்பேட்டை ஏரி, கீழக்கட்டளை ஏரி, பல்லாவரம் பெரிய ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி போன்றவையும் அதன் வழித்தடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டன; அங்கு கட்டிடங்கள் முளைத்தன. இந்த ஏரிகள் பெரும்பாலும் கடல் மட்டத்திலிருந்து 0 முதல் 17 மீட்டர் உயரத்தில்தான் இருக்கின்றன.
  • குறிப்பாக, நாராயணபுரம் ஏரி 0-1 மீட்டர்தான். இந்த ஏரிகளுக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கும் தொடர்பு உண்டு. ஏரிகள் நிறையும்போது, வழியும் நீர் சதுப்புநிலத்துக்குத்தான் செல்லும். சதுப்புநிலத்திலிருந்து நீர் வெளியேறி காரப்பாக்கம் வழியாகக் கடலுக்குச் செல்லும். இதேபோல சதுப்புநிலத்திலிருந்து நீர் ஒக்கியம் மடுவுக்குச் சென்று முட்டுக்காடு வழியாகவும் கடலில் கலக்கும். இந்த நீர் வழித்தடத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளின் விளைவால், தண்ணீர் செல்லும் சங்கிலித் தொடர்பு அறுந்துபோனது. அதனால்தான், பெருமழையின்போது வெள்ளம் ஏற்படுகிறது. இதை உணர்ந்ததால்தான் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரைக் கால்வாய் மூலம் சதுப்பு நிலத்தைச் சென்றடையும் வகையில் அரசு திட்டங்கள் தீட்டியது. அந்தப் பணிகள் முறையாக நிறைவேற்றப்பட்டனவா என்பது ஆய்வுக்குரியது.

தேவைப்படும் நடவடிக்கைகள்

  • திடப்பொருள் கலப்பால் தண்ணீரை உறிஞ்சும் திறனைச் சதுப்புநிலம் சற்று இழந்திருப்பதுதான் 2023 வெள்ளத்துக்குப் பிறகு நீர் உடனடியாக வடியாமல் போனதற்குக் காரணம் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. குப்பை மலையாக உள்ள சதுப்புநிலம் எப்படி த்தண்ணீரை உள்வாங்கும்? 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 250 ஏக்கர் பரப்பில் குப்பைமேடு குவிந்து கிடக்கிறது. அது தொடர்ந்தால் சதுப்புநிலம் முற்றிலும் அதன் தன்மையை இழக்கும் அபாயமும் உண்டு. குப்பை மேலாண்மைத் திட்டமிடல்கள் மேம்பட வேண்டும். மேலும் ஞெகிழி உள்ளிட்ட கழிவுகள் வீட்டை விட்டுச் சென்றால், அது நம்முடைய பொறுப்பு அல்ல என்று பொதுப் புத்தியில் ஊறியுள்ள சிந்தனையும் மாற வேண்டும்.
  • தென் சென்னையில் வெள்ள நீர் வடிவதற்கான முறையான வடிகால் திட்டங்களை உறுதியாக அரசு திட்டமிட வேண்டும். மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டபோதும் அது ஏன் பலனளிக்கவில்லை என்பது குறித்துத்திறந்த மனதுடன் அரசு ஆராய வேண்டும். குறிப்பாக அரசியல், அதிகாரத் தலையீடின்றி ஆக்கிரமிப்புகள், நீர்வழித் தடங்கள் மீட்கப்பட வேண்டும். ஏரிகள், கால்வாய்கள் குறிப்பிட்ட காலத்தில் தூர்வாரப்பட வேண்டும். வடிகால்கள் அடைப்பு ஏதுமின்றிப் பராமரிக்கப்பட வேண்டும். கடலோர நகரான சென்னையில் மழை, வெள்ளம் ஏற்பட்டால் அந்த நீர் இயல்பாகக் கடலுக்குச் சென்றுசேர வேண்டும். சென்னையில் அப்படி நிகழவில்லையெனில், நதி மூலத்தை ஆராய்வதைத் தவிர வேறு வழியில்லை!

நன்றி: தி இந்து (14 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்