TNPSC Thervupettagam

பெர்ட்ரண்ட் ரஸல்

May 23 , 2021 1343 days 562 0
  • தத்துவ அறிஞர், தர்க்கவியலாளர், கணிதவியலாளர், கல்வியாளர், அரசியலர், பொருளியலாளர், எழுத்தாளர் என்று தனது பன்முக ஆளுமையால் 20-ம் நூற்றாண்டில் அறிவுத் துறைகள் பலவற்றிலும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரஸல் (1872-1970).
  • அவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வாக்கியங்கள் இன்றளவும் தொடர்ந்து மேற்கோள்காட்டப்படுகின்றன.
  • அவர் எழுதிய ‘மேலைநாட்டுத் தத்துவ வரலாறு’ தத்துவ மாணவர்களின் முதன்மையான பாடநூல்களில் ஒன்று. அவர் கையாண்ட பகுப்பாய்வு முறைகள் இன்றைய ஆய்வுலகத்தை வழி நடத்துகின்றன.
  • சமயத்திலிருந்து தத்துவத்தை விடுவித்த நவீனச் சிந்தனையாளர்களில் ரஸலும் ஒருவர். நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களில்கூட தர்க்க அறிவு பயன்படும் என்று கருதுவது பெரும் பிழை என்று சுட்டிக்காட்டியவர். சமயத் தலைவர்களின் அதிகார வேட்கையைக் கேள்விக்கு உட்படுத்தியவர்.
  • ரஸலின் குடும்பத்தினர் பிரிட்டனில் முற்போக்குச் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்டவர்கள். அவரின் பாட்டனார் ஏர்ல் ரஸல் பிரிட்டிஷ் அமைச்சரவையில் அங்கம் வகித்த போது 1832-ல் கொண்டுவந்த தேர்தல் சீர்திருத்தச் சட்ட முன்வடிவுதான் அனைவருக்கும் வாக்குரிமை என்ற இயக்கத்துக்கான முதல் புள்ளி. பின்பு, அவர் இரண்டு முறை பிரிட்டிஷ் பிரதமராகவும் பதவி வகித்தார்.
  • ரஸலின் பெற்றோர்கள் பெண்ணுரிமைக்காகவும் குழந்தைக் கட்டுப்பாட்டு உரிமைக்காகவும் போராடியவர்கள். ஆனால், ரஸல் நான்கு வயதை அடைவதற்கு முன்பே அவர்கள் இருவரும் காலமாகிவிட்டனர்.
  • பாட்டியின் பராமரிப்பில்தான் வளர்ந்தார் ரஸல். பெற்றோர்களின் சிந்தனைகள் எதுவும் குழந்தைக்கு வந்துவிடக் கூடாது என்று கவனமாக இருந்த பாட்டிக்கு, பேரனையும் தாத்தாவைப் போல பிரிட்டிஷ் பிரதமராக்கிவிட வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது.
  • ஆனால், பதின்பருவத்திலேயே ஜான் ஸ்டூவர்ட் மில்லைப் படித்து முடித்துவிட்ட ரஸல், ஒரு கலகக்காரராகத்தான் உருவெடுத்தார்.

இலக்கிய நோபல் பரிசு

  • 1950-ல் ரஸலுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதநேயக் கருத்துகளையும் சுதந்திரச் சிந்தனைகளையும் கொண்ட பல்துறை சார்ந்த குறிப்பிடத்தக்க எழுத்துப் பணிகளைப் பாராட்டி அந்தப் பரிசு வழங்கப்பட்டது.
  • ஏறக்குறைய இதே காலகட்டத்தில் பிபிசியில் தொடர்ந்து வெளிவந்த வானொலிப் பேட்டிகள் அவரை மென்மேலும் பிரபலமாக்கின. ஆனால், இந்த உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதற்குள் அவர் தனது வாழ்க்கையில் படாதபாடு பட வேண்டியிருந்தது.
  • உலகின் முக்கியப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் விரிவுரையாற்றும் வாய்ப்புகளைப் பெற்றவர் என்றபோதும் ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்புகளுக்காக அவர் அலைக்கழியவும் நேர்ந்தது.
  • கல்லூரிப் படிப்பில் கணிதமும் தத்துவமும் அவரது பாடங்களாக இருந்தன. ஆய்வுப் படிப்பில் தனது சக மாணவரும் தன்னைவிடவும் ஐந்து வயது மூத்தவருமான ஆலீஸைக் காதலித்து 21 வயதில் மணந்துகொண்டார்.
  • இருவரும் தேனிலவு முடிந்தவுடன் பொருளாதாரத்தில் ஒரு ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க பெர்லின் பல்கலைக்கழகத்தின் விரிவுரை வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஜெர்மனி சமுதாய ஜனநாயகக் கட்சியிலும் சேர்ந்து செயல்பட்டனர்.
  • ஐரோப்பாவிலேயே மிகவும் புரட்சிகரமானவர்களாகக் கருதப்பட்ட அந்த அமைப்பினரோடு மற்றவர்கள் நெருங்கிப் பழக அஞ்சிய காலம் அது.
  • 1917-ல் ரஷ்யப் புரட்சியைப் பாராட்டி வரவேற்ற ரஸல் அடுத்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்குப் புறப்பட்டார். ஆனால், அவரது அனுபவங்கள் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை.
  • ஜாரின் கொடுங்கோலாட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ ஆட்சியைச் சிறந்ததாகக் கருதினார் என்றாலும் கம்யூனிஸ அமைப்பின் பெயரில் நிலவும் சர்வாதிகாரத்தின் அபாயங்களை எச்சரித்துத் தனிப் புத்தகம் எழுதிய முதல் இடதுசாரியும் அவர்தான்.
  • அரசு அதிகாரத்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஜனநாயக சோசலிஸத்தையே அவர் விரும்பினார்.
  • சீனாவிலும் சில காலம் தத்துவத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

மாற்றுக் கல்வி முறை

  • இயற்பியல், கல்வி, சமயம், குடும்ப அமைப்பு, நீதிமுறை என்று பல துறைகள் சார்ந்தும் குறிப்பிடத் தக்க நூல்களை ரஸல் எழுதியிருக்கிறார்.
  • இரண்டு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் புத்தகங்கள் எழுதி அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தையே அவர் பெரிதும் சார்ந்திருந்தார் என்பதால் தொடர்ந்து எழுதிக் குவித்தார்.
  • ஒவ்வொரு புத்தகமும் தொடர்புடைய துறைகளில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சின.
  • புதிய கல்வி முறையானது குழந்தைகளைச் சகிப்புத்தன்மை உள்ளவர்களாகவும் சுதந்திரச் சிந்தனையாளர்களாகவும் சமூகப் பொறுப்பு கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்று கனவுகண்டார்.
  • குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி அளிக்க வேண்டியதைப் பற்றித் தீவிரமாகப் பேசிய முன்னோடியும்கூட. டோராவுடன் இணைந்து பீகன் குன்றில் அவரே ஒரு பரிசோதனைப் பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். அந்த முயற்சி தொடரவில்லை.
  • பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிக்குச் செல்வதற்குக் கடும் முயற்சிகள் எடுத்துக்கொண்டார் என்றாலும் அது ரஸலுக்கு எளிதாக அமையவில்லை. சர்ச்சைக்குரிய கருத்தாளராக அவர் பிரபலமாகிவிட்டிருந்ததே அவரது கல்வித் துறை வாய்ப்புகளையும் தாமதப்படுத்தியது.
  • 1930-களின் இறுதியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றும் வாய்ப்பைப் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகும் வாய்ப்பு கிடைத்ததும் அமெரிக்காவுக்குக் குடும்பத்துடன் புறப்பட்டார்.
  • தொடர்ந்து வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய நிலையில் இரண்டாவது உலகப் போர் தொடங்கியது. வேலைவாய்ப்புகளை இழந்து நாடு திரும்பவும்கூடக் கையில் பணமின்றித் தவித்த நாட்கள் அவை. போர் ஓய்ந்து இங்கிலாந்து திரும்பியபோது, ட்ரினிட்டி கல்லூரி அவரை ஆதரித்தது.
  • பிரிட்டனில் தொழிலாளர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்ததும் ஒரு காரணம். ஏற்கெனவே அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த வரலாறும் அவருக்கு உண்டு.
  • சமய நம்பிக்கைகளைக் குறித்த கடுமையான விமர்சகராக இருந்தார் பெர்ட்ரண்ட் ரஸல்.
  • பொதுக் கருத்துக்கு எதிரானவையாகவே அவரது விமர்சனங்கள் அமைந்திருந்தன. மதங்கள் பொய்யாக மட்டுமின்றி, ஆபத்துகளையும் விளைவிக்கக்கூடியவையாக இருக்கின்றன என்பது அவரது பார்வை.
  • ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல?’ என்ற அவரது புத்தகம் மிகவும் பிரபலமானது. தமிழில் குத்தூசி குருசாமி மொழிபெயர்ப்பில் அந்நூல் அறிமுகமானது.
  • காஞ்சா அய்லய்யா, இபின் வாரக், இவான் தாம்ப்சன், வந்தனா சோல்கர், சசி தரூர் என்று பலரும் இந்தத் தலைப்பைத் தழுவி தங்களது புத்தகங்களுக்கான தலைப்பை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
  • ரஸலின் கல்விச் சிந்தனைகள் தமிழகத்தின் இடதுசாரி மாணவர்கள் அமைப்புகளால் இன்றும் குறுநூல்களாக வெளியிடப்பட்டுவருகின்றன.
  • அறிவை மட்டுமே துதிக்கும் அறிஞர்களுக்கு மத்தியில் ‘அறிவோடு அன்பும் சேர்ந்த உலகில்தான் நாகரிகம் தழைத்தோங்கும்’ என்றவர் ரஸல்.
  • பனிப்போருக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைக் கைவிடக் கோரியும் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் அந்த உணர்வுதான் அவரைப் போராட வைத்தது.
  • இரு உலகப் போர்களுக்குப் பின்பும் வெடிமருந்துகளின் நெடி வீசிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் ரஸலின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டட்டும்.
  • மே 18: பெர்ட்ரண்ட் ரஸல் 150-வது ஆண்டு தொடக்கம்

நன்றி: இந்து தமிழ் திசை (23 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்