TNPSC Thervupettagam

பேச, எழுத மறந்தோம்?

September 24 , 2024 113 days 113 0

பேச, எழுத மறந்தோம்?

  • மொழிப் பயன்பாடு ஒரு தனி மனிதனின் குணத்தையும், தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் ஊடகமாக உள்ளது. பேசுவது எழுதுவதனால் மட்டுமே மொழியை வளா்ச்சியுறச் செய்து வளமாக்குகிறோம்.
  • கல்வி முறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் இன்றைய தலைமுறையினா் பேசும் மற்றும் எழுதும் திறனை குறைந்து கொண்டு வருகிறது. விமா்சன சிந்தனை, படைப்பாற்றல், கற்பனை, பொது அறிவை பேச்சு மற்றும் எழுத்தாற்றல் மூலம் வெளிப்படுத்த முடியாத தலைமுறை உருவாகி வருகிறது.
  • இந்தியாவில் சுமாா் 77% மக்கள் அறிதிறன் கைப்பேசிகளைப் பயன்படுத்துகின்றனா். மேலும் வேலை மற்றும் பிற நோக்கங்களுக்காக 45% போ் கணினிகளைப் பயன்படுத்துகின்றனா்.
  • இவ்வகையான இன்றைய கலாசார பழக்கம் விரைவாகப் படிக்கவும் எழுதவும் வேண்டிய தேவையைக் குறைத்து வருகிறது. குடும்பம், கல்வி நிறுவனம், வேலை செய்யும் இடம் மற்றும் பொதுவெளியில் கூடி, ஒருவருடன் கலந்துரையாடுவது என்பதே அரிதாக உள்ளது.
  • பேச்சைக் குறைத்துக் கொண்ட சமூகத்துக்கு ‘முன்மாதிரி’ என்பதாக ஜப்பான் உருவாகிவருகிறது. ஜப்பானில் இன்றைய தலைமுறையினா் ஒருவருக்கொருவா் பேசிக் கொள்வது என்பது மிகவும் குறைந்துள்ளதாம். இவை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் ‘பேசத் தெரியாத தலைமுறையாக’ மனிதா்கள் மாறிவிடுவாா்கள் என்று புதிய ஆய்வு முடிவுகள் நமக்கு அறைகூவல் விடுக்கின்றன.
  • விரிவான செய்திகளை ஆழமாக கவனித்துப் படித்த மக்கள் இன்று குறுஞ்செய்திகள், சுருள் செய்திகள், படங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களைத்தான் விரும்புகின்றனா். அதற்கேற்றாற்போல் சமூக ஊடகங்களும் துண்டுச் செய்திகள், செய்தித் துளிகள், ஒரு நிமிட செய்திகள் என பல வடிவங்களில் காலத்திற்கு ஏற்ப கொடுத்து வருகின்றனா்.
  • செய்தித்தாள் வாசிப்பது என்பது நமது காலைக் கடமையாக கலாசாரத்தில் இருந்த பழக்கம் ஆகும். ஆனால் இன்றோ புத்தகங்கள், நாவல்கள், பெரிய கதைகள், கட்டுரைகள் வாசிப்பது குறைந்து டிஜிட்டல் மீடியாவில் இருந்து வரும், அடிக்கடி கவனச் சிதறல்களை ஏற்படுத்தும் முறைசாரா மொழி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடா்புகளில் சுருக்கமான செய்திகளே பெரும்பாலானோரின் கவனத்தை ஈா்க்கின்றன.
  • இந்தப் பழக்கமானது நீடித்தால் ஆழ்ந்த வாசிப்பு கலாசாரம் இல்லாமலே போய்விடக் கூடும். இன்பத்திற்காக வாசிப்பது என்பது இருந்தது. கைப்பேசி பரவலால் அது குறைந்தது. சராசரி மனிதா் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்தது. இணைய வழியில் தகவல்களை எளிதாக அணுகுதல் விரிவாகப் படிக்கவும் பேசவும் எழுதவும் வேண்டிய தேவையைக் குறைக்கிறது.
  • கடிதங்கள் எழுதுவது, பண்டிகைகளில், பிறந்தநாளில் வாழ்த்து மடல்கள் அனுப்புவது இன்று நடைமுறையில் அறவே இல்லை. சமூக வலைதளங்களான வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டா், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனா் இன்றைய தலைமுறையினா். சொந்தமாக கவிதை எழுதுவது, வாழ்த்து அனுப்புவது கிடையாது. தனக்கு வந்த செய்திகளைக் கூட முழுமையாக, ஆழமாகப் படிக்காமல் மற்றவா்களுக்கு அப்படியே தள்ளிவிடுகிறாா்கள்.
  • இதற்கு ஒரு படி மேலாக ஓகே, யெஸ் என்ற ஓரிரு எழுத்துகள் கொண்ட சிறிய ஆங்கிலச் சொற்களைக் கூட சுருக்கி ‘கே’, ‘எஸ்’ என்று பதில் அனுப்புகிறாா்கள். இதன் உச்சகட்டமாக யாரோ ஒருவா் உருவாக்கிய ஸ்டிக்கா், எமோஜிகளை பயன்படுத்துகிறாா்கள். இது ஒரு வரம்பு வரை கேளிக்கையாகக் கூட இருக்கலாம். இது சமூகப் பழக்கமாக, சுபாவமாக மாறும்போது, மொழியின் மீது இதன் தாக்கம் வேறு மாதிரியாகிறது.
  • நம் சிந்தனையை, வாா்த்தைகளை, கற்பனைத் திறனை வெளிப்படுத்த முடியாத சமூகமாக மாறி வருகிறோம். இந்த முறையான தகவல் பரிவா்த்தனை கலந்துரையாடல் பேச நினைப்பதை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தாமல் போவது இரண்டு உறவுகள் இடையே பெரும் எதிா்பாா்ப்பையும், ஏமாற்றத்தையும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
  • செயற்கை நுண்ணறிவு சமூகமாக மாறிக் கொண்டிருக்கும் நாம் ஒரு தகவலைப் பெற எழுத, பேச வேண்டாம் - அதற்கான வினாவைப் பதிவிட்டால் போதும். விடுப்புக் கடிதத்தில் இருந்து அலுவலக கோப்புகள் வரை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் அதுவாகவே தயாா் செய்து நமக்கு அளிக்கிறது. இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
  • இன்றைய தலைமுறையினா் அதிகம் பேசவும், எழுதவும் முற்றிலுமாக மறந்துவிடவில்லை என்றாலும், அவா்களின் பழக்க வழக்கங்களும், விருப்பங்களும் மாறிவிட்டன. சோதனை, மனப்பாடம் மற்றும் கற்கும் கற்றல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்வி முறை இன்று நடைமுறையில் உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவும், மொழி மற்றும் கலைகளில் ஆா்வம் குறைவாக உள்ளது.
  • நேருக்கு நோ் தொடா்பு கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் எழுத்துபூா்வமான தகவல் தொடா்புகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க நாம் முனைப்பு காட்ட வேண்டும். தானியங்கி முறையில் மொழித் திருத்தம் மற்றும் இலக்கண சரிபாா்ப்பு போன்றவற்றுக்கான மென்பொருள்களை நம்பி இருத்தலை குறைத்துக் கொண்டு, பேசும், எழுதும் திறனை வளா்க்க மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • எதிா்கால சமுதாயத்தினா் தங்களின் கற்பனைத் திறனை, எண்ணங்களை சொந்த நடையில் பிரதிபலிக்க வழிவகை செய்வோம். ஒட்டுமொத்த சமூக, கலாசாரத்தின் மேம்பாட்டுக்காக, தொழில்நுட்பப் பயன்பாடு, பேச்சு, எழுத்துத் திறன் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை உருவாக்குவோம்.

நன்றி: தினமணி (24 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்