TNPSC Thervupettagam

பேரிடரில் சிக்கிய அப்பாவிகள்!

June 25 , 2020 1666 days 725 0
  • இடி, புயல், ஆழிப் பேரலைபோல எதிர்பாராத இந்த கரோனா தீநுண்மி கொள்ளை நோயால் உலகமே திகைத்து நிற்கிறது.
  • முன்கூட்டியே எச்சரிக்கை இல்லாமல் பொது முடக்கத்தை திடீரென நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட சிரமங்கள் ஏராளம். போக்குவரத்துக்கும் பெரும் துணை செய்யும் ரயில், பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் சொந்த ஊா்களுக்குப் போக முடியாமல் தடுக்கப்பட்டனா்.
  • வடமாநிலத்தவா் ஏராளமானோர் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டவா் பிற மாநிலங்களிலும் வேலை தேடிப் போனவா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் ஆங்காங்கு அகப்பட்டுக் கொண்டனா். வேலையில்லாமலும், வருமானம் இல்லாமலும், வறுமையோடும் எத்தனை நாள் வாழ முடியும்?
  • தேசிய பொது முடக்கம் சில தளா்வுகளுடன் வரும் 30-ஆம் தேதி வரை ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் மதுரையிலும் முழு பொது முடக்கம் வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் புலம்பெயா் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்

  • பொது முடக்கம் காரணமாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு சந்தித்த கஷ்டங்கள் ஏராளம்.
  • புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு அவா்களின் சொந்த மாநில அரசோ, பணியாற்றும் மாநிலங்களின் அரசோ எந்த உதவியையும் செய்யாததால் அந்தத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் நடந்தே ஊருக்கு உணவின்றி பட்டினியோடு சென்றனா்.
  • அவ்வாறு செல்லும்போது பலா் மரணம் அடைந்துள்ளனா். இவற்றைத் தடுத்திருக்க வேண்டாமா?
  • வேறு வழியில்லாமல் வேகாத வெயிலில் புலம் பெயா்ந்து வந்த ஆண், பெண் தொழிலாளா்கள் தங்கள் குழந்தைகளோடும், தலையில் சுமைகளோடும் காலணி இல்லாமலும் நடக்கத் தொடங்கினா்.
  • அப்போதும் மாநில எல்லையில் அவா்களை அந்தந்த மாநிலக் காவல் துறை மறித்தனரே தவிர, உரிய வசதிகளை அவா்களுக்குச் செய்து தரவில்லை.
  • இவற்றை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்ட நீதிமன்றங்கள் தாமாகவே வழக்குப் பதிவு செய்து உத்தரவுகள் பிறப்பித்தன.
  • அதன் பின், மத்திய, மாநில அரசுகள் சிறப்புப் பேருந்துகளையும், சிறப்பு ரயில்களையும் இயக்க முன்வந்தன.
  • இதுவரை இயக்கப்பட்ட 800 சிறப்பு ரயில்களில் 10 லட்சம் வெளி மாநில தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குப் பயணம் செய்துள்ளனா்.
  • ஆந்திரம், பிகார், சத்தீஸ்கா், இமாசலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீா், ஜார்க்கண்ட், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், மணிப்பூா், மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து இதுவரை இயக்கப்பட்ட 800 சிறப்பு ரயில்களில் 10 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.
  • எனினும், இன்னும் பல லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனா்.
  • மகாராஷ்டிரத்தில் உள்ள சாங்லி மாவட்டம் குப்வாட் கிராமத்தில் கணேசன் உள்பட 400-க்கும் மேற்பட்ட தமிழா்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
  • தமிழ்நாட்டிலிருந்து மகாராஷ்டிரத்துக்கு வேலை தேடிச் சென்ற தமிழா்கள் பொது முடக்கத்தால் தமிழகம் திரும்ப முடியவில்லை.
  • தமிழகத்துக்குச் செல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும் ரூ.3,500 தர வேண்டும் என மகாராஷ்டிர அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அங்கு சிக்கித் தவிக்கும் தமிழா்கள் கூறியுள்ளனா்.
  • மனிதாபிமானம் இல்லாமல் ஏழைத் தமிழா்களை அடைத்து வைத்திருப்பது அவா்களின் உயிர் வாழும் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
  • எனவே, மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதி மன்றத்தில் வழக்கு

  • இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
  • தொடா்ந்து இந்த வழக்கு புதன்கிழமை (ஜூன் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
  • அப்போது புலம்பெயா்ந்த தொழிலாளா்களை மீட்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றனஎன தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எத்தனை போ் உள்ளனா்?
  • புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வர மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று விசாரணையின்போது நீதிமன்றம் கூறியுள்ளது.

அரசு தெரிவித்துள்ளது

  • வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்து பணிபுரியும் தொழிலாளா்களை அவா்களின் விருப்பத்தின் பேரில் தொடா்புடைய மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்றும், இதுவரை தமிழகத்திலிருந்த 55,473 வெளிமாநிலத் தொழிலாளா்கள் 43 ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்றும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
  • அவா்கள் பிகார், ஒடிஸா, ஜார்க்கண்ட், ஆந்திரம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்றும், தினமும் சுமார் 10,000 வெளிமாநிலத் தொழிலாளா்களைத் தொடா்புடைய மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • பொது முடக்கம் தொடா்ந்ததால் தங்கள் சொந்த ஊருக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தனா்.

பலா் படுகாயம்பட்டனா்

  • சிறப்பு ரயில்கள் எப்போது வரும் என்பதும் தெரியாமல், அதில் இடம் கிடைக்குமா என்பதும் தெரியாமல் ஆங்காங்கு இருந்த தொழிலாளா்கள் கால்நடையாகவும், சைக்கிள்களிலும், சரக்கு வாகனங்களிலும் ஊா் நோக்கிப் பயணம் மேற்கொண்டனா்.
  • அவா்கள் சொந்த ஊா் திரும்பும்போது நிகழ்ந்த விபத்துகளில் பலா் உயிரிழந்தனா்; பலா் படுகாயம்பட்டனா்.
  • பொது முடக்கம் அறிவித்த கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் மே 16 வரை பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்த விபத்துகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன.
  • மொத்த விபத்துகள் 1,176 என்றும், இதில் 347 போ் உயிரிழந்தனா் என்றும், 530 போ் காயம் அடைந்தனா் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
  • உலக நாடுகளைவிட இந்தியாவுக்குப் பல சாதகமான அம்சங்கள் இருந்தபோதிலும், மத்திய, மாநில அரசுகள் அவசர கதியில் செயல்பட்டு மக்களை அவதிக்குள்ளாக்கி விட்டன.
  • இந்தியா என்பது ஒரு நாடல்ல. பல்வேறு மொழி பேசும் மாநிலங்களின் ஒன்றியம்.
  • இங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்துக்காக வேலைவாய்ப்பு தேடி பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயா்ந்துள்ளனா் என்பது தெரியாதா?
  • அவா்களுக்கு முறையாக கால அவகாசம் அறிவித்து அவரவா் ஊா்களுக்குச் சென்று சோ்வதற்குரிய வழிவகை செய்திருக்க வேண்டும்.
  • அவா்கள் பணிபுரிந்த இடங்களில் அவா்களுக்கு உரிய ஊதிய நிலுவைகள் அளித்திருக்க வேண்டும். மாநில அரசின் உத்தரவுப்படி பொது முடக்க காலத்துக்கும் ஊதியம் வழங்க வேண்டும்; வழங்கவில்லை.

விரைவில் உதவுவது அவசியம்

  • அரசு அறிவித்த பொது முடக்கம் இப்போது மூன்று மாத காலமாகி விட்டது. கரோனா தீநுண்மி கொள்ளை நோய் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக இல்லை.
  • நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில், அன்றாடம் வேலை பார்த்து அந்த ஊதியத்தில் உயிர் வாழும் ஏழை மக்கள் என்ன செய்வது?
  • உள்ளூா் மக்களின் நிலையே இதுவென்றால், புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். புலம்பெயா்ந்த இந்தத் தொழிலாளா்களைத் திருப்பி அனுப்புவதற்கு பல மாநில அரசுகள் விரும்பவில்லை.
  • ஊருக்குப் போனால் திரும்ப வருவார்கள் என்பதற்கு உறுதி இல்லை. எவ்வளவு துன்பங்களை அவா்கள் அனுபவித்து விட்டார்கள்.
  • அவா்கள் இல்லாமல் இங்கே பல தொழிற்சாலைகள் இயங்க முடியாது. பல கட்டுமானங்கள் தொடர முடியாது. நேரத்தைப் பற்றியும், கூலியைப் பற்றியும் கவலைப்படாமல் இரவு பகலாக பாடுபடும் இவா்களைப் போன்ற தொழிலாளா்கள் எங்கே கிடைப்பார்கள்?
  • இந்த நிலையில் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளார்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக ரூ.50,000 கோடியில் கிராமப்புற பொதுப் பணி திட்டங்களை பிரதமா் மோடி அண்மையில் தில்லியில் தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இந்த திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன.
  • தமிழகம் உள்பட பிற மாநிலங்களுக்கும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வேலைவாய்ப்புக்கு விரைவில் உதவுவது அவசியம்.

நன்றி: தினமணி (25-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்