TNPSC Thervupettagam

பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள்: அவசியமான முன்னெடுப்பு

June 21 , 2023 383 days 237 0
  • இயற்கை நிகழ்வுகள், மனிதத் தவறுகளால் நிகழும் அசம்பாவிதங்கள் ஆகியவற்றால் நிகழும் பேரிடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பேரிடர் மேலாண்மைத் திட்டங்களுக்குக் கூடுதல் கவனம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில், டெல்லியில் ஜூன் 14 அன்று நடைபெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைக்கான அமைச்சர்களின் கூட்டத்தில், சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான மூன்று பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
  • அந்த வகையில், அனைத்து மாநிலங்களிலும் தீயணைப்புத் துறையை விரிவுபடுத்தி நவீனப்படுத்த ரூ.5,000 கோடி, மக்கள்தொகை அதிகமுள்ள மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புணே ஆகிய 7 நகரங்களில் வெள்ளப் பாதிப்பைக் குறைக்க ரூ.2,500 கோடி, 17 மாநிலங்களில் நிலச்சரிவைத் தடுக்கத் தேசிய நிலச்சரிவு ஆபத்துத் தடுப்புத் திட்டத்துக்கு ரூ.825 கோடி என மூன்று முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலப் பேரிடர் மீட்புப் படைக்கு (SDRF) அனுப்பப்படும் தொகை ஏறக்குறைய மூன்று மடங்கு (ரூ.1,04,704 கோடி) அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
  • புயல், வெள்ளம் போன்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையும் தீவிரமும் இன்று அதிகரித்துவருகின்றன. மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் கணிப்பில் தவறுவதும், கணிக்கவே இயலாததுமான இயற்கைப் பேரிடர்கள் இன்றைக்குத் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. எனினும், குஜராத்-ராஜஸ்தான் பகுதியில் சமீபத்தில் வீசிய பிபர்ஜோய் புயலும், அரசு அதை எதிர்கொண்ட விதமும் பேரிடர் மேலாண்மையில் முக்கியப் பாடங்களாக அமைந்திருக்கின்றன. இந்திய வானிலை ஆய்வு மையம், ஜூன் 8அன்றே புயலின் பாதை பற்றிய அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியதால், கடலோரங்களில் வாழும் சுமார் ஒரு லட்சம் பேரை அங்கிருந்துவெளியேற்றி, மத்திய-மாநிலப் பேரிடர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்குப் போதுமான கால அவகாசம் இருந்தது; அதனால், பெரிய அளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன. பதிவான உயிரிழப்புகள் வெறும் இரண்டுதான்.
  • 2000 முதல் 2019 வரை பதிவான இயற்கைப் பேரிடர்களில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்தவைதான் மிகப் பெரிய பொருளாதார அழிவையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியவை என ஐ.நா-வின்பேரிடர் ஆபத்துக் குறைப்பு (UNDRR) அமைப்பின் ‘பேரிடர்களுக்குத் தரப்படும் மனித விலை’ (2020) அறிக்கை கூறுகிறது. இந்நிலையில், மழை, வெள்ளம் பற்றிய கணிப்புகளை முன்பெல்லாம் மூன்று நாள்களுக்கு முன்னதாக வெளியிட்டுவந்த இந்திய வானிலை ஆய்வு மையம், தற்போது ஐந்து நாள்களுக்கு முன்னதாகவே வெளியிடத் தொடங்கியிருக்கிறது. விரைவில் இது ஏழு நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும்முன் காக்கும் நடவடிக்கையில் இது மிகப் பெரிய முன்னகர்வாக அமையும். உயிர்ச் சேதங்களையும் பொருள் சேதங்களையும் பெருமளவில் தவிர்க்க முடியும்.
  • இயற்கைப் பேரிடர்களின் காலத்தில், வலுவான பேரிடர் மேலாண்மைக் கொள்கையும் அத்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடும் அவசியமானது. இதெற்கெல்லாம் மேலாக, அதை முறையாக நடைமுறைப்படுத்துவதில்தான் அரசின் நோக்கம் நிறைவேறும்!

நன்றி: தி இந்து (21  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்