- யானை – குழந்தைகள் ஆச்சரியத்துடனும் ஆர்வக் குறு குறுப்புடனும் பார்க்கும் விஷயங்களில் ஒன்று. ஆனால், மேற்கு மலைத் தொடரின் அடிவாரங்கள், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்பவர்களை நிறுத்திக் கேட்டால் யானைகளைப் பற்றிய எதிர்மறை பிம்பத்தையோ, யானைகளை வெறுக்கக்கூடிய பேச்சையோ கேட்க முடியும். காரணம், நம்மால் யானைகளும் யானைகளால் நாமும் இன்றைக்கு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன் நிலைமை இவ்வளவு மோசமாக இல்லை.
- ஒருபுறம் யானைகளை வழிபடுகிறோம், ‘எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்றோர் ஆவணப் படம் ஆஸ்கர் விருது வாங்கினால் கொண் டாடித் தீர்க்கிறோம். ஆனால், நாமேதான் மறுபுறம் யானைகளை வெறுக்கவும் செய்கிறோம். வழக்கம் போலவே, மனித மையப் பார்வையுடன் யானைகள்தாம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிற தவறான பார்வை இன்றைக்கும்கூட நம்மிடையே தீவிரமாக இருக்கிறது.
உறுத்தும் நிஜம்
- காட்டைப் பிளந்தும் வகுந்தும் குறுக்கு நெடுக்காக எத்தனையோ சாலைகள் போடப்பட்டுள்ளன; எத்தனையோ ரயில் தண்டவாளங்கள் நிறுவப்பட்டுள்ளன; எத்தனையோ சிற்றணைகள், பேரணைகள் கட்டப்பட்டுள்ளன; மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. தேயிலை, காப்பித் தோட்டங்கள் பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் உள்ளன; சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன; சுற்றுலா தலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; வயல்களில் பயிரிடப்பட்டுள்ளன இப்படியாக மனிதர்களுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகள், தேவைகளுக்காக யானைகளின் வீடுகளான காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
- ஆனால், நாம் என்ன சொல்கிறோம்? நம் சொல்லாடல்களில் யானை எப்படி இடம்பெறுகிறது? ‘யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம், அதகளம்’; ‘யானை மிதித்து சாவு’, ‘யானையால் பயிர் அழிவு’…
- ஒரு நிலத்தின் உரிமையாளர் யாராக இருக்க முடியும்? அதை ஆதி காலத்திலிருந்து பயன்படுத்தியும் செழுமைப்படுத்தியும் வருபவர்தானே. யானைப் பேரினம் தோன்றி 50 லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆசிய யானைகள் 9 அடி உயரம் இருந்தாலும் 4,700 கிலோ எடையுடன் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் என்ன பயன்? நம்மைப் போல் தங்கள் கட்டுப்பாட்டில் எல்லாவற்றையும் மாற்றி வைத்திருக்கத் தெரியாத காட்டு உயிரினங்கள்தாமே. அதனால்தான் நாம் உருவாக்கிய சாலைகளிலும் தண்டவாளங்களிலும் வந்து அடிப்பட்டுச் சாகின்றன. அவுட்டுக்காயைக் கடித்து வாய் வெடித்து இறந்து போகின்றன. மின் வேலிகளில் உடல் பட்டு மின் அதிர்ச்சியால் பட்டென்று உயிரை விடுகின்றன.
அறிவியல்பூர்வப் பார்வை
- ‘மனதில் காடுள்ள விலங்கைப் பழக்க முடியாது’ என்றார் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன். ஆனால், ஒற்றைச் சங்கிலியில் கட்டி யானைகளை வணங்கச் சொல்லி காசு கேட்க வைக்கும் காரியத்தை நாம்தான் காலம்காலமாகச் செய்துவருகிறோம். இன்றைக்கோ தங்கள் கடைசிப் புகலிடங்களான காடுகளில் இரை தேட முடியாமலும், தாகத்தைத் தணித்துக்கொள்ள தண்ணீர் குடிக்க வழியில்லாமலும் திசை தெரியாமல் யானைகள் சிதறி ஓடுகின்றன. யானைகளைப் பார்த்து நாம் ஓடிக்கொண்டிருந்த காலம் வேகமாக மறைந்துவருகிறது. ஒரு வித ஆக்ரோஷம், வெறுப்புடன் யானைகளை மனிதர்கள் பார்க்கத் தொடங்கிவிட்ட காலம் நம் கண் முன்னாலேயே வேகமாக விரிந்துவருகிறது. இது யானைகளுக்கும் நமக்கும் ஆபத்தையே கொண்டுவரும்.
- யானைகளைக் குறைந்தபட்சமாகப் புரிந்துகொள்வதற்கு, அவற்றைக் குறித்து அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ளத் தொடங்க வேண்டும். தமிழில் யானைகள் பற்றி வெளியான குறிப்பிடத்தக்க நூல் ச.முகமது அலி எழுதிய ‘யானைகள்: அழியும் பேருயிர்’ (இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை வெளியீடு). அதற்குப் பிறகு யானைகள் குறித்துப் பல்வேறு நூல்கள், எழுத்து வெளியாகியிருக்கின்றன. இன்றைக்கு யானைகள் குறித்து எழுதப் படும் பல நூல்கள், கட்டுரைகள் மிக மேம்போக்காகவும், அறிவியல் பார்வை இன்றியும் எழுதப்படுகின்றன.
என்ன தேவை?
- அதேபோல் யானை குறித்து இன்றைக்கு ‘அக்கறை‘யுடன் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்கள், கரிசனங்களில் அவற்றைக் குறித்த ஒருவிதப் பரிதாபப் பார்வை இருப்பதைப் பார்க்க முடிகிறது. நம்முடைய தவறுகளால் யானைகள் பலியாகும்போது, அவற்றை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்துகிறோம், அஞ்சலி செலுத்து கிறோம். இவற்றில் எல்லாம் அறிவியல்பூர்வ பார்வை அடிபட்டுப் போகிறது.
- யானைகளைக் காப்பாற்ற வேண்டு மானால், அவற்றுடன் நமது வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் பரிதாபமாகப் பார்ப்பதோ, கண்ணீர் சிந்துவதோ, வழிபடுவதோ நிச்சயமாக உதவாது. அவற்றை ஓர் உயிரின மாக மதிக்க வேண்டும். அதுவே அவற்றைப் புரிந்துகொள்வதற்கான முதல் அடிப்படைத் தேவை. அதன் பிறகு யானைகள் குறித்து துறைசார் நிபுணர்களும், துறைசார் எழுத்தும் என்ன சொல்கின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். அவற்றின் வழியாக நாம் பெறும் அறிவியல்பூர்வ புரிதலும் செயல்திட்டங்களுமே யானைகளுடன் இணக்கமான வாழ்க்கைக்கு உதவும். புரிந்துகொள்ளத் தொடங்குவோம்.
நன்றி: தி இந்து (14 – 08 – 2023)