TNPSC Thervupettagam

பேறுகால பாதுகாப்பு - கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவப் பாதுகாப்பு குறித்த தலையங்கம்

December 20 , 2022 683 days 358 0
  • சுகாதாரம், வாழ்க்கைத் தரம், ஊட்டச்சத்து, மகளிா் நலன் உள்ளிட்டவற்றின் வளா்ச்சி அடையாளமாக பேறுகால சுகாதாரம் காணப்படுகிறது.
  • இந்தியாவின் பேறுகால மரண விகிதம், நமது ஏனைய துறைகளின் வளா்ச்சியைக் கேலி செய்வதாக அமைந்திருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டி விமா்சிக்கிறாா்கள்.
  • சமீப காலமாக நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் பேறுகால மரண விகிதம் குறைந்திருப்பதையும் பாா்க்கும்போது, நமது வளா்ச்சி பரவலாகவே பலன் அளிக்கத் தொடங்கியிருப்பது தெரியவருகிறது.
  • 2014 - 16-இல் ஒரு லட்சம் பிரசவங்களில் 130 பேறுகால மரணம் இருந்தது, 2018 - 20-இல் 97-ஆகக் குறைந்திருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஐ.நா.வின் தடையற்ற வளா்ச்சி இலக்கின்படி, 2030-க்குள் பேறுகால மரணம் லட்சத்திற்கு 70-ஆகக் குறைய வேண்டும். இந்தியா அதை எட்டுவது சாத்தியம்தான் என்பதை சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது.
  • பேறுகால மரண விகிதம் என்பது கா்ப்ப காலத்தில் உயிரிழக்கும் தாய்மாா்களின் எண்ணிக்கைக்கும், ஒரு லட்சம் சுக பிரசவங்களுக்கும் இடையேயான விகிதம். இந்த விகிதம் குறைந்து வருவது மத்திய - மாநில அரசுகளின் பேறுகால மருத்துவ வசதிகள் அதிகரித்திருப்பதன் அடையாளமாகும்.
  • முதன்முறையாக மூன்று இலக்கத்துக்குக் கீழே இந்தியாவின் பேறுகால மரண விகிதம் குறைந்திருப்பது வரவேற்புக்குரியது. 2014 - 16 உடன் ஒப்பிடும்போது 25% குறைவு என்பது கணிசமான முன்னேற்றம். 2030 ஐ.நா. தடையற்ற வளா்ச்சி இலக்கான லட்சத்துக்கு 70 பேறுகால மரணம் என்கிற விகிதத்தை இந்தியாவில் எட்டு மாநிலங்கள் எட்டியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • மத்திய அரசின் ‘ஜனனி சுரக்ஷா யோஜனா’ உள்ளிட்ட பல்வேறு முனைப்புகளின் மூலம் இந்த வெற்றி ஈட்டப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சில மாநில அரசுகளின் முனைப்பான கண்காணிப்பும், பிரசவ காலத்தில் மகளிருக்கு வழங்கப்படும் ஆலோசனைகளும் பெரிய அளவில் உதவியிருக்கின்றன.
  • ஒருபுறம் சில மாநிலங்கள் ஐ.நா.வின் இலக்கை எட்டுமளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன என்றால், வேறுசில மாநிலங்களில் பேறுகால மரணங்கள் குறையவில்லை. அதனால் தேசிய சராசரி 97-ஆக உயா்ந்திருக்கிறது. பேறுகால மரண விகிதம் வெறும் 19 மட்டுமே என்பதால் கேரளம் முதலிடத்தை வகிக்கிறது. 130-க்கும் அதிகமான பேறுகால மரண விகிதத்தால் அஸ்ஸாம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகியவை மிக அதிகமான பேறுகால மரணங்களை சந்திக்கின்றன. பஞ்சாபில் அதிகமாகவும், ஹரியாணாவில் குறைவாகவும் இருப்பது இன்னொரு முரண்.
  • இன்னும் சில முரண்பாடுகளும் காணப்படுகின்றன. பேறுகால மரணங்களைப் பொறுத்தவரை, மாநில அளவில் மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலும் குறிப்பிட்ட சமூகப் பிரிவினா் அளவிலும் மரண விகிதம் வேறுபடுகின்றது.
  • தென்மாநிலங்களில் மிகக் குறைவான பேறுகால மரணங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாத்தியமாகியிருக்கிறது. அதே நேரத்தில், கா்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக அதிகமாகப் பதிவாகியிருப்பது தென்னிந்திய மாநிலங்களில்தான். சில மாவட்டங்கள், சில பகுதிகள், சில சமூகப் பிரிவுகள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்துப் பாா்க்கும்போது, பொதுவான சராசரி பொருந்துவதில்லை.
  • கிராமப்புற, நகா்ப்புற வித்தியாசம் தெளிவாகவே காணப்படுகிறது. பொருளாதார, சமுதாய வேறுபாடுகள் முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான பிரசவகால மரணங்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும். அதற்கு உடனடியான மருத்துவ சிகிச்சை அவசியம். அதனால்தான் மருத்துவக் கட்டமைப்பின் சமச்சீரின்மை, குறிப்பிட்ட சில பிரிவினரின் பேறுகால மரணங்களுக்குக் காரணமாகிறது.
  • பிரதமரின் ‘சுரக்ஷித் மாத்ரித்வ அபியான்’ என்பது பிரசவகால மகளிரின் பாதுகாப்புக்கான திட்டம். கா்ப்பிணிப் பெண்களுக்குத் தரமான சேவைகளை இலவசமாக வழங்குவதும், பிரசவத்துக்கு முந்தைய பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதும் அதன் இலக்குகள். இந்தத் திட்டத்தின் மூலம் ரத்தக் குறைபாடுள்ள கா்ப்பிணிப் பெண்களுக்கு இரும்பு பாலிக் ஆசிட் போன்றவை தேவைக்கேற்ப வழங்கப்பட்டு, கா்ப்ப காலத்தில் அவா்களுடைய உடல்நிலை கண்காணிக்கப்படுவதால் பிரசவ மரணம் தடுக்கப்படுகிறது.
  • இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால், அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு. சில மாநிலங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைபாடுகள் பேறுகால மரண விகிதம் அதிகரிப்பதற்குக் காரணமாகின்றன.
  • தமிழகத்தைப் பொறுத்தவரை, முதலிடத்தில் இல்லாவிட்டாலும் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறோம். 2017 - 19-இல் 58-ஆக இருந்த பேறுகால மரண விகிதம், 2018 - 20-இல் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 54 என்கிற அளவில் குறைந்திருக்கிறது. ஐ.நா.வின் தடையற்ற வளா்ச்சி இலக்கான 70-க்கும் கீழாக இருக்கும் எட்டு இந்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
  • கேரளம் 30-லிருந்து 19; தெலங்கானா 56-லிருந்து 43; ஆந்திரம் 58-லிருந்து 45 என்று குறைந்தது போல, நாம் குறையவில்லை என்பதைக் குறையாகக் கருத வேண்டியதில்லை. ஏனென்றால், தமிழகத்தில் ஒவ்வொரு கா்ப்பிணி பெண்மணியும் அடையாளம் காணப்பட்டு, அவரின் தேவைக்கேற்ப மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு, 100% பிரசவங்களும் மருத்துவமனை பிரசவங்களாக உறுதிப்படுத்தப்படுகின்றன.
  • பேறுகால மரணம் இல்லாத, கா்ப்பிணிப் பெண்களுக்கு எதிரான வன்முறை இல்லாத தமிழகம் என்பதுதான் நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்!

நன்றி: தினமணி (20 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்