- உலக அளவில் நிகழும் பேறுகால மரணங்கள் - பச்சிளங்குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியா முதலிடம் வகிப்பதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரம் பெரும் கவலையளிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், ஐநா மக்கள் நிதியம் ஆகியவை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், தென் ஆப்பிரிக்கத் தலைநகர் கேப் டவுனில் கடந்த வாரம் நடைபெற்ற ‘சர்வதேசப் பச்சிளங்குழந்தைகள் நல மாநாடு 2023’இல் வெளியிடப்பட்டன.
- இதில் உலகம் முழுவதும் நிகழும் பேறுகால மரணங்களில் 60% இறப்புக்குக் காரணமான 10 நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது நம் மருத்துவக் கட்டமைப்பில் உள்ள போதாமையைச் சுட்டிக்காட்டுகிற எச்சரிக்கை மணி.
- 2020-2021 காலகட்டத்தில் மட்டும் உலகம் முழுவதும் பேறுகாலத்தின்போது தாய் இறப்பது, குழந்தை இறந்தே பிறப்பது, பச்சிளங்குழந்தைகள் மரணம் உள்ளிட்ட வகைகளில் 45 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மருத்துவக் கட்டமைப்பில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துவரும் இந்தியாவில், 2020இல் 7,88,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பது அதிர்ச்சியளிக்கிறது.
- இந்தியாவுக்கு அடுத்தபடியாக நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் பேறுகால மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. பேறுகால சுகாதாரம், பச்சிளங்குழந்தைகளின் ஆரோக்கியம் போன்றவற்றுக்குச் சம்பந்தப்பட்ட நாடுகள் போதுமான நிதி ஒதுக்கத் தயங்குவதே, இதுபோன்ற மரணங்களைக் குறைப்பதற்கான உலகளாவிய திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
- 1990இல் இந்தியாவில் பேறுகால மரணங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கு 556 எனும் விகிதத்தில் இருந்தது. அதாவது, போதிய மருத்துவ வசதியின்றி ஆண்டுக்கு 1.38 லட்சம் பேர் (கர்ப்பிணிகள், தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள்) பேறுகாலத்தின்போது இறந்தனர். அப்போதைய உலக சராசரியைவிடவும் (ஒரு லட்சத்துக்கு 385) இது மிக அதிகம்.
- பேறுகால மரணங்களைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. 2020க்குள் ஒரு லட்சம் பிரசவங்களில் நூற்றுக்கும் குறைவான மரணங்கள் என்பதை இலக்காகக் குடும்ப நலக் கொள்கை 2017 நிர்ணயிக்கப்பட்டது.
- 2017–19 நிலவரப்படி உலக சராசரியை (211) விடக் குறைவான பேறுகால மரணங்கள் (103) என்ற நிலையை இந்தியா எட்டியது. இந்த முன்னேற்றத்துக்குப் பிறகும் பேறுகால மரணங்களில் உலக அளவில் இந்தியாவே முன்னிலை வகிப்பது மக்களுக்கும் மருத்துவத்துக்கும் இடையே நிலவும் இடைவெளியைத்தான் உணர்த்துகிறது.
- இந்தியாவில் நிலவும் பாலினப் பாகுபாட்டின் காரணமாகப் பெண்களின் உடல்நலம் இரண்டாம்பட்சமாகக் கருதப்படுகிறது. பெண் குழந்தைப் பிறப்பு குடும்பத்துக்குச் சுமையாகக் கருதப்படுகிறது. இவை பெண்களுக்குப் போதுமான மருத்துவக் கவனிப்பு கிடைப்பதைத் தடுக்கின்றன.
- ஐநாவின் ‘நிலைத்த வளர்ச்சி இலக்கு’களை எட்டும் முயற்சியில் 54 மரணங்களோடு தமிழ்நாடு, இந்திய அளவில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. மகப்பேறு - பச்சிளங்குழந்தைகள் நலன் சார்ந்து மத்திய–மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையிலும் நிகழும் பேறுகால மரணங்கள் அரசு நடவடிக்கைகளின் போதாமையைக் காட்டுகின்றன.
- இது தொடரக் கூடாது. பேறுகாலத்தின்போது மரணம் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வேலைகளை அரசுகள் முடுக்கிவிட வேண்டும்.
நன்றி: தி இந்து (18 – 05 – 2023)