- இந்தியாவில் 1969-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கிகளின் சேவை கிடைத்தது. மக்களின் சேமிப்பு சமுதாய வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படாமல், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
1951-இலிருந்து 1966 வரை
- 1951-இலிருந்து 1966 வரை பலவீனமாக இருந்த வணிக வங்கித் துறையை செழுமைப்படுத்த வங்கிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. 1951-இல் செயல்பாட்டில் இருந்த 566 வங்கிகள், 1966-இல் 91 வங்கிகளாகக் குறைக்கப்பட்டன. எனினும், 1951-1967 இடைப்பட்ட காலத்தில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 4,151-லிருந்து 7,025-ஆக அதிகரித்தது. ஆனால், பெரு
நகரங்களிலும், நகர்ப்புறங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன; கிராமங்களும், சிறு நகரங்களும் புறக்கணிக்கப்பட்டே வந்தன. இதனால், அந்தப் பகுதிகளின் வாழ்வாதாரமாக விளங்கிய வேளாண்மை மற்றும் சிறு தொழில்களுக்குரிய தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.
- சமுதாய பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளுக்கு கடன் வழங்குவதைத் தவிர்த்து, தங்களது லாபத்தைக் கூட்டுவதற்கான முயற்சியில் மட்டுமே தனியார் வங்கிகள் கவனம் செலுத்துவதை அரசியல் கட்சிகள் உணரத் தொடங்கின. இதே காலகட்டத்தில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் (ஏஐபிஇஏ) வலியுறுத்தியது. வங்கிகளின் உயர் நிலையில் இருந்த நிர்வாகிகளும், பெருமுதலாளிகளும் சேர்ந்து செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டியது.
தேசியமயமாக்கல்
- தவறுகளைத் தவிர்க்க வங்கிகள் அரசுடைமையாக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியதுடன், நாடு தழுவிய இயக்கங்களையும் அது நடத்தியது.
இடைவிடாத இயக்கங்களைத் தொடர்ந்து, வங்கிகள் தேசியமயமாக்க கோரிக்கை நாளாக 1963, பிப்ரவரி 17-ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது. அந்த நாளில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை வங்கி வாரியான சங்க நிர்வாகிகளும், மாநில சம்மேளன நிர்வாகிகளும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
- 1966-ஆம் ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தது. அன்று இருந்த அரசு எடுத்த பொருளாதார முடிவுகள் அனைத்தும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின. சில பெருமுதலாளிகள் பெரும்பாலான மக்களின் நலனுக்கு எதிராக தங்கள் லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வணிக வங்கிகளின் ஆதரவுடன் பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுத்தனர். சிலரிடம் மட்டுமே செல்வத்தைக் குவிக்கும் பணிகளை தனியார் வங்கிகள் துரிதப்படுத்தின.
- எனவே, அந்நியச் செலாவணியில் நடைபெறும் ஊழலைத் தடுக்கவும், வேளாண்மையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை பெருக்கும் தொழிலை வளர்த்தெடுக்கவும், செல்வ வளங்கள் சிலரிடம் மட்டுமே குவிவதைத் தடுக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் (ஏஐபிஇஏ) முன்னிறுத்திப் போராடியது.
- நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் ஒத்துழைப்பதைவிட, தனியார் முதலாளிகளின் செல்வக் குவியலுக்கே வங்கித் துறை பணியாற்றுகிறது என்பதை மத்திய அரசு உணரத் தொடங்கியது.
திவால்
- 1951 முதல் 1966-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆண்டுதோறும் சில வங்கிகள் திவாலாகின. அந்த வங்கிகளில் தங்களது சேமிப்பை வைத்திருந்தவர்கள், தங்கள் பணத்தை இழந்து நிர்க்கதியாயினர். இந்தச் சூழ்நிலையை அரசியல், பொருளாதாரப் பின்னணியில் நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், வங்கிகள் ஏன் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற விவரத்தை உள்ளடக்கிய வங்கிகள் தேசியமயம்-சில சிந்தனைச் சிதறல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சமர்ப்பித்தார். அந்தக் கட்டுரை பெரும்பாலான உறுப்பினர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
- இதைத் தொடர்ந்து 1969 ஜூலை 19-ஆம் தேதி 14 பெரும் தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இரண்டு வாரங்களுக்குள் அந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, ஆகஸ்ட் 9, 1969 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது.
- இதையடுத்து, பெருநிறுவனங்களுக்காகவும் பெருமுதலாளிகளுக்காகவும் மந்த கதியில் நகரங்களில் மட்டுமே செயல்பட்ட வங்கித் துறை, தேசியமயத்துக்குப் பிறகு அசுர வேகத்தில் செயல்படத் தொடங்கியது. கிராமப் பகுதிகளுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்கத் தொடங்கியது. வேளாண்மை, வேலைவாய்ப்பைப் பெருக்கும் தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பல ஆண்டுகள், அதாவது 1991-ஆம் ஆண்டு வரை பொதுத் துறை வங்கிகளின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.
பொருளாதார வளர்ச்சி
- சுமார் 8,000 கிளைகளுடன் இருந்த வங்கித் துறை, சுமார் 80,000 வங்கிக் கிளைகளாகப் பெருகியது. தங்களது சேமிக்குப் பாதுகாப்பான பொதுத் துறை கிடைத்ததை மக்கள் உணரத் தொடங்கி பலன் அடைந்தனர். இன்று வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.128 லட்சம் கோடியை எட்டியுள்ளது; அதே போன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக வங்கிகள் வழங்கியிருக்கும் கடன் ரூ.95 லட்சம் கோடியாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் பொன் விழாவை (ஜூலை 19, 2019) விரைவில் கொண்டாட உள்ள நேரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. 1991-இல் புதிய பொருளாதாரக்கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆரம்பமானது. பொதுத் துறை வங்கிகளும் அதே பாதையில் செலுத்தப்பட்டன.
- மாறி மாறி தொடர்ந்த அரசுகள் தங்களின் திட்டங்களை பொதுத் துறை வங்கிகளின் மூலம் செயல்படுத்தி அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்திக் கொண்டபோதிலும், அவற்றில் சிறிதும் பங்கு பெறாத தனியார் வங்கிகளை ஆதரிக்கவும், புதிதாக உருவாக்கவும் முனைந்தனர். பொதுத் துறை வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற குரல்கள் திட்டமிட்டு தனியார் பெருநிறுவனங்களால் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.
- இன்று வங்கிகள் சந்திக்கும் பெரும் பிரச்னை வாராக் கடன்கள். இதனால், இக்கட்டான சூழ்நிலையில் வங்கிகள் உள்ளன. குறிப்பாக, தாங்கள் வாங்கிய கடன் தொகைகளை பெருநிறுவனங்கள் திரும்பச் செலுத்தாமல் இருப்பதால், ஆண்டுதோறும் வாராக் கடன்களின் அளவு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2017-இல் நாடாளுமன்றத்தில் அரசே ஒப்புக்கொண்டபடி, 9,063 பெருநிறுவன கடனாளிகள் வசதி இருந்தும்கூட வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத கடன் தொகையின் அளவு ரூ.1,10,050 கோடி; ஆனால், கடும் நடவடிக்கைகள் எடுக்காமல் புதிய சட்டம் மூலம் அவர்கள் தப்பித்துச் செல்ல அரசு வழி செய்திருக்கிறது.
- விளைவு, 31-03-2018 அன்று முடிந்த நிதியாண்டில் ரூ.1,50,149 கோடியை மொத்த லாபமாக பொதுத் துறை வங்கிகள் அடைந்தபோதிலும், ரூ.85,370 கோடி நஷ்டக் கணக்கு காண்பிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டன. மேலும், வாராக் கடன்களுக்காக ரூ.2,83,672 கோடியை ஒதுக்கி நிகர நஷ்டம் காண்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவை உள்ளாக்கப்பட்டன.
பெருநிறுவனங்கள்
- பெருநிறுவனங்களால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட, சாதாரண வாடிக்கையாளர்கள் மீது கட்டணங்களை வங்கி நிர்வாகங்கள் விதித்து வருவாயைப் பெருக்குகின்றன. வாங்கிய தொகையைச் செலுத்தாத பெரு நிறுவனங்கள் மீது கருணை காட்டும் வங்கிகள், விவசாயக் கடன்கள்-கல்விக் கடன்கள் பெற்று செலுத்தாதோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது என்ற கொள்கையைக் கொண்டுள்ளன.
இந்த நிலையை மாற்ற தொடர் போராட்டத்தை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) நடத்தி வருகிறது. ஆனால், பொதுத் துறை வங்கிகளை இணைத்து வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.
- வங்கிச் சேவைகளை அனைத்துக் கிராமங்களுக்கும் விரிவாக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ள நேரத்தில், வங்கிகளை இணைத்து கிளைகளை மூடுவதற்கான முயற்சி நடைபெறுகிறது; அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் எந்தத் தனியார் சேமிப்பாளர்களை ஏமாற்றினார்களோ அவர்களுக்கே வங்கி தொடங்குவதற்கான உரிமம் வழங்கி, வரலாற்றை 50 ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு செல்லும் முயற்சியும் நடைபெறுகிறது.
- பொது மக்களின் பணத்துடன் தொடர்புடையவை வங்கிகள். வங்கிகளில் உள்ள பணம் பொது மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்; தனியார் கொள்ளை அடிக்க தாரைவார்க்கப்படக் கூடாது. வங்கி வசதிகள் என்பது அடிப்படை உரிமையாக்கப்படவேண்டும். அனைவரும் விரும்பும் வளமான இந்தியா, வலிமையான பொருளாதார சூழலுக்கு வங்கித் துறையின் பங்கு மிக முக்கியம்; இதற்கு பொதுத் துறையில் வங்கிகள் செயல்படுவது அவசியம். எனவே, பொதுத் துறை வங்கிகளை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.
எனவே, மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தடுமாறிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கிகளைப் பாதுகாப்பதும், தனியார்மயத்தை எதிர்த்துப் போராடுவதும் தேசபக்தர்களின் கடமையாகும்.
நன்றி: தினமணி (25-06-2019)