TNPSC Thervupettagam

பொதுத் தேர்வல்ல, கற்றல் நடவடிக்கையே முக்கியம்!

June 7 , 2024 24 days 81 0
  • ‘11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேவைதானா?’ என்கிற அழுத்தமான வினாவை எழுப்பி, உரையாடலைத் தொடங்கிவைத்துள்ளது 23.05.2024 அன்று வெளியான ‘இந்து தமிழ் திசை’ தலையங்கம். அத்துடன் மேலதிக விஷயங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.
  • 11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வேண்டும் என வலியுறுத்தியவர்கள் முன்வைத்த காரணங்களில் முதன்மையானது, பெரும்பாலான பள்ளிகள் 11ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமலேயே 12ஆம் வகுப்புப் பாடங்களுக்குத் தாவிவிடுகின்றன என்பதே.
  • அது ஓரளவு உண்மைதான். ஓராண்டு படிக்க வேண்டிய 12ஆம் வகுப்பு பாடத்தை 11ஆம் வகுப்பிலேயே முடித்துவிட்டு, 12ஆம் வகுப்பு முழுக்கத் தேர்வு என்கிற ஒன்றையே குறியாக வைத்துப் பல பள்ளிகள் செயல்படுகின்றன.
  • உயர் கல்வி பயில்வதற்கு 11ஆம் வகுப்பு பாடத்திட்டம் அவசியம்; அதைத் தவிர்த்ததால் கல்லூரி செல்லும் மாணவர்களின் கற்றலில் பெரும்தேக்கம் ஏற்பட்டது. ஆனால், 11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுவிட்டதா?

வாதப் பிரதிவாதங்கள்:

  • 11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் இந்தக் காலத்திலும் பல நூறு பள்ளிகளில் அவ்வகுப்புக்கான பாடங்கள் முழுமையாக நடத்தப்படுவதில்லை. அதேவேளையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுவதில்லை என்கிற வாதம் வைக்கப்படுகிறது. சமீப காலத்தில் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 11ஆம் வகுப்பு பாடம் நடத்தப்படுவதில்லை என்னும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
  • 12ஆம் வகுப்பு முடித்த பிறகு நுழைவுத் தேர்வின் வழியாகவே உயர் கல்விக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால், 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் தேவை இரண்டாம்பட்சமாகக் கருதப்படுகின்ற இக்காலகட்டத்தில், 11ஆம் வகுப்புக்கு ஏன் பொதுத் தேர்வு எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
  • இது சரியான பார்வை அல்ல. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வருகின்ற பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழகங்கள், கலை - அறிவியல் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இன்றும் பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களும் இங்குதான் அதிகமாகப் பயில்கின்றனர்.
  • இன்னொரு பக்கம், 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முன்பைவிடக் குறைந்துவிட்டது என்னும் வாதம் முன்வைக்கப்படுகிறது. அதுவும் சரியான வாதம் அல்ல. 11ஆம் வகுப்புக்கு மாவட்ட அளவில் தேர்வு நடைபெற்ற காலத்தில், எவ்வளவு தேர்ச்சி விகிதம் மாவட்ட அளவிலேயே இருந்தது என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்று தெரியவில்லை.
  • அந்தக் காலக்கட்டத்தில் 11ஆம் வகுப்புப் பாடத்தைக் குறைந்தபட்ச நாள்கள் நடத்தி, அதற்கான செயல்முறை வகுப்புகளைக் கடைசி 15 நாள்கள் மட்டும் நடத்தி, தேர்வுக்குத் தயார்செய்து அனுப்பினார்கள். அதில் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்தது. வெற்றி பெற்றவர்கள் குறைந்த அளவே மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், அதே மாணவர்கள் 12ஆம் வகுப்பில் அதிகமான மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார்கள். அந்தக் காலகட்டத்தினுடைய மதிப்பெண் தரவுகளை அந்தந்த மாவட்டங்களில் இருந்து பெற்றுப் பகுப்பாய்வு செய்தால் இந்த உண்மை தெளிவாகத் தெரியவரும்.

தேர்வு தரும் அழுத்தங்கள்:

  • 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வு நடத்தப்படுவது எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை. மாணவர்களுக்குத் தேர்வு அழுத்தம் தரக் கூடாது என்பதுதான் சிறந்த கல்வியாளர்கள், அறிஞர்கள் பகிரும் கருத்து. பொதுத் தேர்வுகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் குடும்ப, சமூகச் சூழலையே பாதிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படித் தொடர்ந்து தேர்வு நடத்துவது என்பது கல்வித் துறைக்கும் தேவையற்ற அழுத்தம்தான்.
  • காலணி, இடுப்புப் பட்டை அணியக் கூடாது, கைக்குட்டை வைத்துக்கொள்ளக் கூடாது என நீட் தேர்வில் நடைமுறைப்படுத்தப்படுகிற கட்டுப்பாடுகள் அரசுப் பொதுத்தேர்விலும் அமல்படுத்தப்படுகின்றன. இவை குழந்தைகள் உரிமைக்கு முற்றிலும் எதிரானவை.
  • சுதந்திர உணர்வோடு தேர்வை அணுகுவதற்கான வாய்ப்பே குழந்தைகளுக்கு இல்லை. அப்படி அணுகுவதற்குக் கற்றுத்தர ஆசிரியர்களுக்கும் போதுமான பயிற்சி இல்லை. தேர்வு முடிவு வெளியிடும் நாளில் ஊடகங்கள் ஏற்படுத்துகிற பீதியூட்டும் பரபரப்புகள் வேறு. அவை தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் அனைவரையும் வாழ்வின் விரக்தியான சூழலுக்குத் துரத்தியடிக்கின்றன.

என்னதான் தீர்வு?

  • 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வே வேண்டாம் என்பதுகூட சரியான பார்வையாக இருக்கும். மாணவர்களை மதிப்பீடு செய்கிற முறையிலே தேர்வுக்கு மாற்றாகச் செயல் திட்டம் வேண்டும் என்றுதான் கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.
  • ஆயினும் யதார்த்தத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு அவசியமாக உள்ளது. மேற்படிப்பைத் தொடர்வதற்கு அவசியமான ஒரு படிக்கல்லாக இருக்கிறது என்கிற அடிப்படையில் இந்தத் தேர்வுகள் அவசியம்தான்.
  • மறுபுறம், 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் மூன்று ஆண்டுகள் தொடர் மனச்சுமை, பணிச்சுமையுடன் இருக்க வேண்டுமா என்கிற கேள்வி மிகச் சரியானது. அதற்குத் தீர்வாக 11ஆம் வகுப்புத் தேர்வை நீக்குவது சரியானதுதானா என்ற கேள்வியும் எழுகிறது.
  • பிளஸ் டூ முறை என்பது இரண்டு ஆண்டு காலப் படிப்பு என்றே அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டப்படிப்பைப் பொறுத்தவரை மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களைக் கூட்டி அதனுடைய கூட்டுத்தொகையே டிகிரியாக தரப்படுகிறது. அதுபோலவே 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு என இரண்டு ஆண்டுகளின் மொத்த மதிப்பெண்களையே சேர்த்து மதிப்பெண் பட்டியல் தர வேண்டும்.
  • 11ஆம் வகுப்பினுடைய ஆண்டு பொதுத் தேர்வு மதிப்பெண், 12ஆம் வகுப்பினுடைய ஆண்டு பொதுத் தேர்வு இரண்டையும் சேர்த்துவரும் கூட்டுத்தொகையான ஒட்டுமொத்த மதிப்பெண் (Cumulative Mark) அல்லது அதற்கான சதவீதம்தான் மாணவர்களுக்கான இறுதித் தேர்ச்சி அறிக்கையாக இருக்க வேண்டும்.
  • அப்போதுதான் மேல்நிலைப் பள்ளிப் படிப்பு சரியானதாக இருக்கும். பட்டப்படிப்புபோல நான்கு பருவத் தேர்வுகளாக அதை நடத்தி, ஒட்டுமொத்த மதிப்பெண்ணை வழங்கலாம். பொதுத் தேர்வு என்கிற அடிப்படையிலே இல்லாமல் மாவட்ட நிர்வாகமேகூட இதைச் சிறப்பாக நடத்த முடியும். அதற்கான திட்டமிடல் சரியாக இருந்தால் போதுமானது. அல்லது மண்டலங்களாகப் பிரித்து நான்கு மண்டலங்களுக்குமாக இந்தத் தேர்வை நடத்தலாம்.
  • 11 - 12ஆம் வகுப்பு ஆகிய இரண்டையும் சேர்ந்து படித்து அதனால் வருகிற கற்றல் நடவடிக்கையே உயர் கல்விக்குச் செல்வதற்கான சரியான வழிமுறையாக இருக்கும். இப்படியான யோசனைகளைத்தான் அரசுக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர, 11ஆம் வகுப்புக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் யோசனைகள் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

சாத்தியம் தானா?

  • 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வையொட்டிய தேர்வு நடைமுறைகள் ஒரு பழக்கமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. இதனால், இந்த அறிவிப்புகளை அதிகாரிகளும் பின்பற்றுகிறார்கள். மற்றபடி இது ஒன்றும் சட்ட நடைமுறைகள் அல்ல.
  • ஒரு சுற்றறிக்கையில், ஒரு கையெழுத்தில் இதை மாற்றிவிட முடியும். இதற்குத் தொலைநோக்கு கொண்ட ஓர் உயரதிகாரியின் கையெழுத்து மட்டும் போதுமானது. இப்படித்தானே தரவரிசை முறை (Rank System) ஒரே ஒரு கையெழுத்தில் மாறிப்போனது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் யாருக்காவது தெரியுமா? எவ்விதப் பரபரப்பும் ஏற்படுகிறதா?
  • சொல்லப்போனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகூடத் தேவையில்லை. உயர் கல்விக்குச் செல்ல பதினொன்று, பன்னிரண்டின் கூட்டு மதிப்பெண் போதுமானது. தொழிற்கல்வி படிக்கச் செல்கிறவர்களுக்குப் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்கிற வாதம் எழும். அதனால் என்ன...? பத்தாம் வகுப்புக்குப் பள்ளியில் நடைபெறும் தேர்வு மதிப்பெண்ணே போதுமானது.
  • கற்றல் நடவடிக்கைகளே நமக்கான முன்னுரிமை. சிந்திக்கத் தூண்டுவதும் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதுமே நமது முதன்மை நோக்கம்; தேர்வுகளல்ல!

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்