TNPSC Thervupettagam

பொதுப் பெயர் மருந்துகள் மக்களின் நம்பிக்கையை ஏன் பெறவில்லை?

December 19 , 2019 1851 days 779 0
  • உறவினர் ஒருவர் இதய நோய் சிகிச்சைக்காக கார்ப்பரேட் மருத்துவமனைக்குச் சென்றுவந்தார். அப்போது அவர் வழக்கமாகச் சாப்பிட்டுவரும் ‘பொதுப் பெயர் மருந்து’களை (ஜெனரிக் மெடிஸின்) அந்த மருத்துவரிடம் காட்டியிருக்கிறார்.
  • மலிவு விலையிலான அந்த மருந்துகளைப் பார்த்த மருத்துவர் அவற்றைச் சாப்பிட வேண்டாம் என்றும், அவர் பரிந்துரைக்கும் ‘நிறுவன மருந்து’களையே (பிராண்டட் மெடிஸின்) சாப்பிட வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு நண்பரின் பொருளாதாரம் வசதிப்படாது என்று சொல்ல, “அப்படியானால் உங்களுக்கு நான் தரும் சிகிச்சை வெற்றி பெறும் என்று உறுதிகூற முடியாது” என்றிருக்கிறார். என்னிடம் இதைச் சொன்னபோது, “சாதாரண நோய்களுக்கு பொதுப் பெயர் மருந்துகளுக்கு முன்னுரிமை தரலாம்; அதேசமயம், சில தீவிரமான நோய்களுக்கு புதிதாகக் கண்டறியப்பட்ட மருந்துகள் பலன் அளிக்கக் கூடும்;
  • அவை உடனடியாக பொதுப் பெயர் மருந்துப் பட்டியலில் இடம்பெறுவதில்லை; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அந்த மருந்தைக் கண்டறிவதற்காகவும் அதற்கான ஆய்வுக்காகவும் செலவிட்ட தொகையெல்லாமும் சேர்த்துதான் இந்த மருந்துகள் விலையில் வைக்கும்;
  • ஆக, உங்களுடைய மருத்துவர் நம்பகமானவர் எனும்போது அவர் அனுபவரீதியாகப் பரிந்துரைக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது” என்று ஆலோசனை சொன்னேன். இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினைதான்.
  • இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை சாமானிய மக்களுக்கு எட்டாத உயரத்துக்குச் சென்றுவிட்டது.

வாழ்க்கை முறை

  • அதேநேரம் இன்றைய வாழ்க்கைமுறை மாற்றங்களால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இவர்களுக்கு ஆயுள் வரைக்கும் மாத்திரை, மருந்துகள் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. தங்கள் வருமானத்தில் கணிசமான பங்கை மருந்துகளுக்காக ஒதுக்கினால் மட்டுமே இந்த நோய்களைச் சமாளிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு பொதுப் பெயர் மருந்தகங்களைத் தொடங்கியுள்ளது மத்திய அரசு. ஆனால், அந்த மருந்துகளின் மீது மக்களுக்கும் மருத்துவர்களுக்கும் இன்னமும் முழு நம்பிக்கை பிறக்கவில்லை. அதனால், அரசின் நல்லதொரு கொள்கை முடிவு மக்களுக்கு முழுமையாகப் பலன் தராமல் சவலை நிலையில் உள்ளது.

பொதுப் பெயர் மருந்துகளின் நிலைமை

  • பொதுப் பெயரில் விற்கப்படும் மலிவு விலை மருந்துகளின் தயாரிப்புக்கு ஆராய்ச்சி செலவு, விற்பனைப் பிரதிநிதிகள் நியமனச் செலவு, விளம்பரச் செலவு இவற்றையெல்லாம் கடந்துவிட்டவை என்பதால், அவற்றின் விலை நிறுவன மருந்துகளைவிட 60-80% வரை குறைவாக இருக்கிறது. ஆனால், ஒரு நோய்க்குப் புதிதாகக் கண்டறியப்படும் மருந்து பெரும்பாலும் இந்தப் பட்டியலில் இடம்பெறுவதில்லை. அத்தகைய மருந்துகளைக் கூடுதல் விலைக்குத்தான் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.
  • இதுபோக இன்னொரு பிரச்சினை. ஒரே மருந்து நிறுவன மருந்தாகவும், பொதுப் பெயர் மருந்தாகவும் தயாரிக்கப்படுவதும் நடக்கிறது. இரண்டுமே ஒரே தரமாகத்தான் இருக்க வேண்டும். பொதுப் பெயர் மருந்தின் அடிப்படை மூலப்பொருள் சிறிதளவு குறைவாக இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்ளாது. மருந்து நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுவதில் தொடங்கி நிறுவனத்தின் உரிமையைப் பறிப்பது, சிறை தண்டனை தருவது வரை பல நடவடிக்கைகளுக்கு நம்மிடம் சட்டங்கள் உள்ளன. ஆனால், நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள் எல்லாமே தொடர்ந்து தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுவதில்லை என்பது இன்னொரு பிரச்சினை. இதை மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது; கள ஆய்வுகளுக்காகவும் புகார் வரும்போதும் மட்டுமே மருந்துத் தரப்பரிசோதனையை அரசு மேற்கொள்கிறது. இதைப் பயன்படுத்தி சில ‘கறுப்பு ஆடு’ நிறுவனங்கள் லாப நோக்கில் மருந்தின் தரத்தைக் குறைத்துவிடுகின்றன.
  • உலகில் மிக அதிகமாக மருந்து விற்பனை ஆகும் நாடுகளில் பத்தாவது இடத்தில் உள்ளது இந்தியா. தொடர்ந்து மருந்து வாங்கும் நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் இங்குதான் அதிகம். அதேநேரம், நூற்றுக்கு நூறு தரமான மருந்துகளுக்கு இங்கு உத்தரவாதம் இல்லை என்கிறது அமெரிக்காவின் எஃப்டிஏ அமைப்பு.
  • அண்மையில் அந்த அமைப்புக்கு வந்த 38 சர்வதேச புகார்களில் 13 புகார்கள் இந்தியாவில் விற்கப்படும் மருந்துகள் தொடர்பானவை. நாட்டில் 2018-ல் நடந்த ஓர் ஆய்வு, மத்திய அரசின் திட்டத்தில் வழங்கப்பட்ட பொதுப் பெயர் மருந்துகளில் 18 நிறுவனங்கள் தயாரித்த 25 தொகுதி மருந்துகளும், இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட மருந்துகளில் 32%-மும் தரம் குறைந்தவை என்று சொல்கிறது. ஆண்டுதோறும் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வணிகமுள்ள பொதுப் பெயர் மருந்துகளின் தரம் நாட்டில் கேள்விக்குறியாகும்போது இதய நோய், நீரிழிவு நோய், நுரையீரல் நோய், சிறுநீரக நோய், வலிப்பு நோய், மூளை நோய், புற்று நோய் போன்ற முக்கிய நோய்களுக்குத் தரப்படும் மருந்துகளின் தரம் குறைவாக இருந்தால், அவை பயனாளியின் உயிரைக் காக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதுவும் மக்களையும் மருத்துவர்களையும் யோசிக்க வைக்கிறது.
  • மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கென்று நிறைய தரக்கட்டுப்பாடுகளும் மருந்து ஆய்வு முறைகளும் இந்தியாவில் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில்தான் அரசு இயந்திரங்கள் பின்தங்கியுள்ளன. என்ன காரணம்? எல்லா மருந்துகளின் தரத்தையும் தொடர்ந்து கண்காணிக்கவோ, போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தவோ போதிய அளவுக்கு ஆய்வுக்கூட வசதிகளும் ஆய்வாளர்களும் இங்கு இல்லை. டாக்டர் மஷெல்கர் கமிட்டியின் பரிந்துரைப்படி 50 மருந்து நிறுவனங்களுக்கு ஒருவர்; 200 மருந்துக் கடைகளுக்கு ஒருவர் என மருந்து ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியில்லை.

பணி இடங்கள்

  • இந்தப் பணி இடங்கள் பல மாநிலங்களில் காலியாகவே இருக்கின்றன. தற்போது இருப்பவர்களால் எல்லா மருந்துகளையும் ஆய்வுசெய்ய முடியாது. அவர்கள் சந்தேகப்படும் சில மருந்துகளை மட்டும் ஆய்வுக்கு அனுப்பிவைக்கின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் தெரிய பல மாதங்கள் வரை ஆகும்.
  • அதற்குள் அந்த மருந்துகள் விற்கப்பட்டுவிடும். அல்லது மறைக்கப்பட்டுவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு கோடிக்கணக்கான பண மதிப்பில் போலி மருந்துகள் பிடிபட்டது தலைப்புச் செய்தி ஆனது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நம் அரசாங்கங்கள் இந்தப் பிரச்சினையை எவ்வளவு அலட்சியமாகக் கையாள்கின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம்.
  • இந்த மாதிரியான அலட்சியங்கள் மலிவு விலை மருந்துகளின் நம்பகத்தன்மையைத் தகர்க்கின்றன.

வெளிநாடுகளில் தரக்கட்டுப்பாடு

  • இந்த இடத்தில், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘ஜெனரிக்’ மருந்துகளைத்தானே மருத்துவர்கள் எழுதுகிறார்கள்” என்று கேட்கலாம். அங்கெல்லாம் ‘பயோஈக்குவலென்ஸ்’ என்னும் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வுமுறை நடைமுறையில் உள்ளது. அதாவது, குறிப்பிட்ட மருந்தின் ‘பிராண்டட்’ மூலக்கூறும் அதே மருந்தின் ‘ஜெனரிக்’ மூலக்கூறும் அளவு, தரம், வீரியம், செயல்பாடு, பாதுகாப்பு போன்றவற்றில் ஒரே மாதிரியாக உள்ளதா என்று பரிசோதிக்கும் துல்லியமான முறை இது.
  • அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் எல்லா மருந்துகளும் இந்தப் பரிசோதனைக்கு உட்பட்ட பிறகே சந்தைக்கு வருகின்றன. அது மட்டுமல்லாமல் தொடர் கண்காணிப்புகளும் அங்கு நடக்கின்றன. இவற்றின் தரக் கட்டுப்பாட்டின் முடிவுகள் இணையத்தில் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் விவரங்கள் மருந்துப் பெட்டிகளில் தெரிவிக்கப்படுகின்றன.
  • தரம் குறைந்த மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
  • இப்படி வெளிப்படையான நடைமுறைகள் நம் நாட்டிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். நாட்டில் தேவையான மருந்து ஆய்வாளர்களை நியமித்து எல்லா மருந்துகளின் தரத்துக்கும் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் பொதுப் பெயர் மருந்துகளின் மீது நம்பிக்கை பிறக்கும். சாமானியர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த மருந்துகளுக்கு முழு பலன் கிடைக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்