- "மதம், மொழி, இனம், கலாச்சாரம், மரபு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மனிதம் என்ற ஒற்றை இலக்கின் அடிப்படையில், ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்தியன் என்ற அடையாளத்தின் அடிப்படையில், ஒவ்வொரு இந்தியனின் உடலிலும் ஓடுகின்ற ரத்தம் ஒரே நிறத்தை உடையது என்ற மனப்பான்மையை உருவாக்க முடிந்தால் அந்த சமயத்தில் பொது சிவில் சட்டம் வருவது பொருத்தமாக இருக்கும்" என்கிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விமலா.
- இந்தியா மனித இனத்தின் தொட்டில், மனித பேச்சின் பிறப்பிடம், வரலாற்றின் தாய், புராணத்தின் பாட்டி மற்றும் பாரம்பரியத்தின் பெரிய தாயார். மனித வரலாற்றில் நமது மிகவும் மதிப்புமிக்க மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான பொருட்கள் இந்தியாவில் மட்டுமே பொக்கிஷமாக உள்ளன"- மார்க் ட்வைன்
சட்டம் என்பது என்ன?
- சட்டம் என்பது எதற்காக ? சட்டம் என்பது யாருக்காக ? பொது என்ற வார்த்தையின் பொருள் என்ன? பொது சட்டம் என்றால் என்ன? பொது சட்டம் என்பதை எப்படி புரிந்து கொள்வது? சிவில் என்ற வார்த்தையின் பொருள் என்ன? பொது சிவில் சட்டத்தின் வரையறை என்ன? யாருக்கெல்லாம் இது பொதுவான சிவில் சட்டம்? எந்த வகையான உரிமைகளுக்கெல்லாம் இது பொது சிவில் சட்டம்? இந்தக் கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனதில் சுற்றுலா சென்றுகொண்டிருக்கிறது.
- "பொது சிவில் சட்டம்" என்ற வாக்கியத்தை கேட்டவுடன் உலகம் இந்தியாவைப் பற்றி புரிந்து கொண்டுள்ள கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் பன்முகத்தன்மை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றின் மீது இந்தியா அமைந்துள்ளது என்ற கருத்தினை பொது சிவில் சட்டம் பாதுகாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அமெரிக்க நீதிபதி பெஞ்சமின் கார்டோசா, சட்டத்தைப் பற்றி சொல்லும் பொழுது, "சட்டத்தின் இறுதி காரணம் சமூகத்தின் நலனே" என்று கூறினார். அப்படியானால் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப சட்டமும் மாறிக்கொண்டு தானே இருக்க வேண்டும்? சட்டம் மாறாமல் இருக்க முடியாது.
- ஆனால், மாறப்போகும்போது பொது சிவில் சட்டம் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டிருக்குமா? பொது சிவில் சட்டம் சமூக நலனை முன்னிறுத்துமா? சமூக நல்லிணக்கத்தை பிரதிபலிக்குமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை வேண்டும். சட்டம் என்பது சமூகத்தில் மாற்றம் உண்டாக்குவதற்கான கருவி என்றார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர். சாமானியரின் மொழியில், சட்டம் என்பது சமூகத்தில் வாழும் மக்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்கும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்துவதற்கும் ஏற்ப விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பாகும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல், பொருளாதார, சமூக நீதியை மக்கள் மக்களுக்கே வழங்கிக் கொள்வதாய் பறைசாற்றியது. நமது அரசியலமைப்பு உலகின் பெரும்பாலான முக்கிய அரசியலமைப்புகளின் சிறந்த அம்சங்களை நாட்டின் தேவைக்கேற்ப ஏற்றுக்கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல அரசியலமைப்புகளிலிருந்து கடன் வாங்கப்பட்டாலும், இந்திய அரசியலமைப்பு மற்ற நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து வேறுபடும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
- நமது மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியை வழங்குவதற்காக நமது அரசியலமைப்பில் வழிகாட்டுதல் / கோட்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 44 இல் இந்தியா முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டம் கிடைக்க அரசு பாடுபட வேண்டும் என்ற வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் / கோட்பாடுகள் என்பது சில குறிப்பிட்ட லட்சியங்களையும் நோக்கங்களையும் அடைவதற்காக அரசாங்கத்துக்கு உதவும் விதமாக கொடுக்கப்பட்டவை. அதே அரசியல் சட்டத்தின் 25 வது பிரிவு மக்களின் மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது; பிரிவு 15, மதம் இனம் ஜாதி பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லை என்று பேசுகிறது; 42 வது அரசியல் அமைப்பு சட்ட திருத்தத்தில் இந்தியா மதசார்பின்மையை பின்பற்றும் நாடு என்ற அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் சேர்க்கப்பட்டது.
- இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது இந்தியா எந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டி இருந்தது? அந்த சமயத்தில் மக்களுக்கான தேவைகள் என்னவாக இருந்தன? இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது உள்ள இந்தியாவின் இலக்குகள் என்ன? இப்பொழுது உள்ள இந்தியாவின் தேவைகள் என்ன? இந்தியா நிலவில்; நிலவில் இந்தியா; விரைவில் சூரியனிலும் இந்தியா என்ற பெருமையோடு உலகில் நட(ன)மாடிக் கொண்டிருக்கிறான் இந்தியன். அதேசமயம் எனக்கு பசிக்கிறது; சுதந்திரம் எனக்கு சோறு போடவில்லை என்ற குரலும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
- நம் நாட்டில் ஹிந்து மதத்தினர் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் சிறுபான்மையாகவும் உள்ளனர். திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு தொடர்பான எல்லாம், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக உள்ளன. ஒரு மதத்தில் பின்பற்றப்படுகின்ற மரபு இன்னொரு மதத்தில் பின்பற்றப்படுவது இல்லை. ஒரே மதத்தில் கூட பல்வேறு உட்பிரிவுகள். ஒரு பிரிவினர் பின்பற்றும் கலாச்சாரம் மற்றொரு பிரிவால் பின்பற்றப்படுவது இல்லை. உதாரணமாக இந்து மதத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட உறவுமுறை முஸ்லிம் மதத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்து கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு முஸ்லிம் மதத்தில் இல்லை. இந்த சூழ்நிலையில் எல்லா மதத்தினரும் ஒப்புக்கொள்ளும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான விஷயம். அந்த சட்டங்களை நிறைவேற்றுவது அதைவிட கடினமான விஷயம்.
- இந்தியாவில் பல மாநிலங்களில், பல துறைகளில், பற்பல நிர்வாகங்களில் எழுதப்பட்ட சட்டத்தை விட எழுதப்படாத சட்டங்களே ஆட்சி செய்கின்றன அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பல குடும்பங்களில் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் சட்டத்தை மீறும் வகையிலே செயல்படுத்தப்படுகின்றன. ஒரே குடும்பமாக இருந்தாலும், தந்தையும் மகளும் என்ற ஒரே ரத்த உறவு இருந்தாலும், தன்னுடைய மகளுக்கு அரசியல் அமைப்பு சட்டம் தந்த அடிப்படை உரிமைகள் இருந்தாலும், மதம் மாறி தன் மகள் திருமணம் செய்து கொண்டு விட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக ஆணவக் கொலைகள் செய்யும் தந்தைமார்களை இந்தியா வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.
- வரதட்சணை தடுப்புச் சட்டம் அமலில் இருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்பட முடியாத சட்டமாகவே இருந்து வருகிறது. நிறைவேற்றுதலில் சிக்கல் என்பதற்காக புதிய சட்டத்தை தேவைப்படும் பட்சத்தில் கொண்டு வருவதை வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே சமயத்தில் இருக்கின்ற சட்டங்களை வைத்தே நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் புதிய சட்டங்கள் தேவை இல்லை. ஏற்கனவே அமலில் உள்ள சட்டங்களை திருத்துவதன் மூலமாகக் கூட தேவையான இலக்குகளை அடைந்து விட முடியும்.
- தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லைகளை தகர்த்து சென்று கொண்டிருக்கிறது. உலகம் கிராமமாக சுருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை ஒட்டி சட்டத்தின் வளர்ச்சியும் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அத்தகைய சட்டங்களின் தேவை குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த இலக்குகளை அடைவதற்கான சட்டங்களையும் கொண்டு வந்தாக வேண்டிய அவசியம் உள்ளது.
- பொது சிவில் சட்டத்தை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகள் இருந்து அப்படியே அது உருவானாலும் கூட, அதன் செல்லும் தன்மை குறித்தும், அதனுடைய பொருள் விளக்கம் குறித்தும், அதை நிறைவேற்றுதல் குறித்தும் வரக்கூடிய வழக்குகளை தீர்க்க இனி வரப்போகும் ஒரு நூற்றாண்டு கூட போதாது. மதம், மொழி, இனம், கலாச்சாரம், மரபு ஆகிய எல்லாவற்றையும் கடந்து மனிதம் என்ற ஒற்றை இலக்கின் அடிப்படையில், ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்தியன் என்ற அடையாளத்தின் அடிப்படையில், ஒவ்வொரு இந்தியனின் உடலிலும் ஓடுகின்ற ரத்தம் ஒரே நிறத்தை உடையது என்ற மனப்பான்மையை உருவாக்க முடிந்தால் அந்த சமயத்தில் பொது சிவில் சட்டம் வருவது பொருத்தமாக இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 09 – 2023)