TNPSC Thervupettagam

பொன்னியின் செல்வன் எதைத் தவறவிட்டார் மணிரத்னம்

October 25 , 2022 655 days 378 0
  • ஒரு கலைப் படைப்பினைப் புரிந்துகொள்ள அது உருவான காலகட்டத்தை கவனத்தில் கொள்வது அவசியம். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ உருவான காலகட்டம் தமிழக, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம். 

உள்ளுக்குள் ஒரு போராட்டம்

  • இந்திய சுதந்திரத்திற்காக காங்கிரஸ் பேரியக்கம் போராடிக்கொண்டிருக்க, 1930களிலிருந்து சென்னை ராஜாதானி காங்கிரஸ் அமைப்பினுள், மொழிவாரியான கருத்து வேறுபாடுகள், அதிகாரச் சண்டைகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. 1940களில் சூடுபிடித்த இச்சண்டை, சுதந்திர இந்தியாவில் பெரும் போராட்டமாக வெடித்தது.
  • கல்கி, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் புதியதாக உருவாகவிருக்கும் ஆந்திர மாநிலத்துடன் சென்னை, திருப்பதி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை இணைக்க வேண்டும் என்று ‘மதராஸ் மனதே’ என்ற முழக்கத்துடன் தெலுங்கர்கள் போராட ஆரம்பித்தனர். ‘வடக்கே வேங்கடம் முதல் தெற்கே குமரி வரை…’ என்று தொல்கப்பியன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வகுத்த தமிழ் நிலப்பரப்பில் சிலவற்றை சுதந்திர இந்தியாவில் இழக்க நேரிடுமோ என்று தமிழர்கள் அச்சப்பட்ட காலகட்டம் அது.
  • ம.பொ.சிவஞானம் போன்றோர் ‘தலை கொடுத்தேனும் தலைநகரம் காப்போம்’ என்று எதிர்ப் போராட்டத்தில் இறங்கினர். ஒன்றிய அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளையும் வகித்து, 1952 முதல் சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் செயல்பட்ட ராஜாஜியும் சென்னை மாநகரம் தமிழர்களின் தலைநகராக தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
  • தமிழை உயிருக்கு உயிராக நேசித்தவர் கல்கி என்பதோடு, ராஜாஜிக்கும் தீவிரமான ஆதரவாளர். சம்ஸ்கிருதமும், தெலுங்கும் தமிழைப் புறந்தள்ளிவிட்டு அரங்க மேடைகளில் கோலோச்சிய சமயத்தில் தமிழிசைக்காக வாதிட்டு போராடியவர் கல்கி. தான் நம்பும் கொள்கைகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் கருவியே எழுத்து என்று நம்பியவர். தன்னை ஒரு பிரசார எழுத்தாளராகப் பிரகடனப்படுத்திக்கொண்டவர். 
  • இப்படியான காலகட்டத்தின் சூழல் பின்னணியில் பார்க்கும்போதுதான், அந்தப் படைப்பின் நோக்கம் புரியும். அது ஒரு வெறும் கலைப் படைப்பு இல்லை. நீண்ட காலமாக அடிமைபட்டு கிடக்கும் ஒரு சமூகம், அதிலிருந்து மீள, அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றில் இருந்து, சுற்றியுள்ள எதிரிகளை வீழ்த்திய ஒரு மாமன்னனின் கதையை எடுத்து, தனக்கு எதிரான சதிகளை அவன் வழியாக வீழ்த்துவதே கல்கியின் வழியாக ‘பொன்னியின் செல்வன்’ மூலம் நடந்தேறியது.
  • இதற்காக ஏங்கிக்கொண்டிருந்தபோலத் தமிழ்ச் சமூகம் அந்த நாவலை உளப்பூர்வமாகக் கொண்டாடி மகிழ்ந்தது. இன்று ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அத்தகையதுதான். சோழர்களின் வரலாற்றிலிருந்து தன்னுடைய புனைவை கல்கி உருவாக்கினார் என்றாலும், அந்த நாவலில் சோழர் காலகட்டச் சித்திரிப்புகளையும், விவரங்களையும் கொண்டுவர நிறைய மெனக்கெட்டிருப்பார்.

இயக்குநரின் கடமை

  • இன்றைக்கு அந்த நாவலைத் திரைப்படம் ஆக்கியிருக்கும் மணிரத்னம் வணிகரீதியாக ஜெயித்திருக்கிறார். வெகுஜன ஏற்புக்கேற்ற விஷயங்களைக் கலாரீதியாகப் படம் பூர்த்தி செய்திருக்கிறது. என்றாலும், ஓர் இயக்குநராக இத்தகைய படங்களை இயக்குவோருக்குச் சில கடமைகள் உண்டு. படைப்பு எந்தக் காலகட்டத்தைப் பேசுகிறதோ அந்தக் காலகட்டத்தை அப்படியே கொண்டுவர வேண்டியது அத்தகைய கடமைகளில் முக்கியமான ஒன்றாகும்.   
  • இந்த இடத்தில் ஒரு வரலாற்று புதின எழுத்தாளருக்கு இல்லாத சிக்கல்களை, நாவலைத் திரைவடிவமாக மாற்றும்போது இயக்குநர் எதிர்கொள்ள நேரிடும். நாவலில் எழுத்தாளர் வார்த்தைகளில் ஜோடிக்கும் சில காலக் குறியீடுகளை காட்சிப்படுத்துவது அவ்வளவு எளிதன்று. அதேபோல் எழுத்தாளர் வர்ணிக்காமல் கடந்து செல்லும் சில காலக் குறியீடுகளையும்கூட ஒரு திரைப்பட இயக்குநர் காட்சிப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கும். ஆக எழுத்தாளரைவிட, வரலாற்றுக் காலத்துக்கு பார்வையாளனை இட்டுச் செல்ல திரைப்பட இயக்குநர் அதிகம் மெனக்கெட வேண்டும்.

மணிரத்னத்தின் சறுக்கல்

  • இந்த இடத்தில்தான் மணிரத்னம் சறுக்கிவிட்டிருக்கிறார். ‘பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிற்காலச் சோழர் காலத்தை நினைவூட்டக்கூடிய வகையில், காலக்குறியீடுகள் ஏதாவது தென்பட்டதா என்றால், பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
  • திரைப்படத்தில் காட்டப்படும் சோழர்களின் கோட்டையை எடுத்துக்கொள்வோம்.   
  • சமமான நிலப்பரப்பைக் கொண்டது தஞ்சாவூர். திரைப்படத்தில் சோழர்களின் கோட்டை சற்று மேடான மலைக்கோட்டையாகத் தென்படுவது முதல் முரண். கோட்டையின் உள்கட்டமைப்பு முகலாய கட்டிட பாணியைப் பிரதிபலிக்கிறது.
  • சரி, அது போகிறது. கோட்டையினுள் ஆங்காங்கே தென்படும் ஓவியங்கள்? நிச்சயமாக, அவற்றிற்கும் தஞ்சை பெரிய கோயிலினுள் இப்போது உள்ள ராஜராஜன் காலத்து ‘பிரெஸ்கோ’ (Fresco) ஓவியங்களுக்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை. வடக்கே அஜந்தா, எல்லோரா பாணியைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்லவர்களின் பனைமலை, பாண்டியர்களின் சித்தன்னவாசல் என்று பல நூற்றாண்டு ஓவியப் பாரம்பரியத்தைப் பின்பற்றி வரையப்பட்ட ஓவியங்கள்தான் சோழர் காலத்து பெரிய கோயில் ஓவியங்கள்.
  • சோழர்களுக்குப் பின்னர் தஞ்சையை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தில், அவற்றின் மேல் வர்ணம் பூசப்பட்டு, புது ஓவியங்கள் வரையப்பட்டன. பல நூற்றாண்டுகளாக நாயக்கர் ஓவியங்களுக்கு அடியில் மறைக்கப்பட்டிருந்த சோழர் ஓவியங்கள் தற்செயலாக, 1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தராசனால் கண்டறியப்பட்டு, பின்னர் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஓவியங்கள் அரிய கலைப் பொக்கிஷங்கள் மட்டுமல்ல, ராஜராஜன் காலம் குறித்த மிக அருமையான காட்சி ஆவணங்களும்கூட. 

பொருட்படுத்தப்படாத தரவுகள்

  • ராஜராஜன் தன் மனைவியருடன் தில்லையில் வீற்றிருக்கும் நடராஜனை தரிசிப்பது, சுந்தரர் சேரமான் பெருமாளுடன் கையிலாயம் செல்லும் காட்சி போன்ற ஓவியங்களை கூர்ந்து நோக்கினால் ஆடை, அலங்காரத்தோடு, அன்றைய கட்டிடக்கலையும் தென்படும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால், அவை சீரழிந்துவிடுமோ என்ற நியாயமான அச்சம் காரணமாக, அவற்றை இன்று பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால், அவை மிக அழகாக டிஜிட்டலில் பதிவுசெய்யப்பட்டு, பி.எஸ்.ஸ்ரீராமன் விளக்கத்தோடு, பெரிய கோயில் கட்டிய ஆயிரமாவது ஆண்டான 2011இல், ஆங்கிலத்தில் இந்திய தொல்லியல் துறை நூலாக வெளியிட்டது. தஞ்சை பல்கலைக்கழகம் இந்நூலைத் தமிழில் வெளியிட்டது. ராஜராஜன் காலகட்டத்து பாணியை நாம் கற்பனை செய்துகொள்வதற்கு நல்ல கருவி இது. 
  • இந்தச் சிறந்த ஓவியங்களை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில், அந்தப்புரச் சுவர்களிலோ அல்லது வேறு கட்டிடங்களிலோ காணவில்லை. அதேபோல், சோழர் காலத்தின் சிறப்பென அறியப்படும், உலகமே வியக்கும் சோழர் வெண்கலச் சிலைகளையும் கதாபாத்திரங்கள் உலாவும் எந்தவொரு இடத்திலும் காண முடியவில்லை.
  • ஒய்யாரமாக நிற்கும் ரிஷபநாதரும், பிரபஞ்ச நடனத்தில் ஆழ்ந்திருக்கும் நடராஜரும், ராஜராஜன் மிகவும் விரும்பி பெரிய கோயிலின் முதல் தளத்தை முழுக்க அலங்கரித்த திரிபுராந்தகரும், இன்னும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் எண்ணற்ற சோழர் வெண்கலச் சிலைகளுக்கும் (Chola Bronzes) படத்தில் நான் கண்ட வரை எங்கும் இல்லை. 
  • அட, சோழர் காலக் கோட்டை கொத்தளங்களைத்தான் படத்தில் கொண்டுவரப் பெரும் செலவெடுக்கும் என்றால், காட்சிகளினுள் சோழர் ஓவிய மரபையும், கற்சிலைகளையும், வெண்கலச் சிலைகளையும் வைக்க என்ன செலவாகிடும்?
  • பிற்காலச் சோழர்களின் காலத்திற்குச் சில நூற்றாண்டுகள் முன்னதாகவே சிலப்பதிகாரம் வெளிவந்துள்ளது. இயல், இசை, நாடகம் என்று தமிழரின் முத்தமிழையும் சிறப்பிக்கும் நூல். அதன் தொடர்ச்சியைச் சோழர்களின் ஆட்சியிலும் நாம் காண்கிறோம்.
  • பெரிய கோயில் கல்வெட்டில் தேவாரம் பாடும் ‘பிடாரர்கள்’ மற்றும் ‘தளிப்பெண்டிர்’ என்ற ஆடல் மகளிர் குறித்து பதிவுகள் உண்டு. 400 தளிப்பெண்டிர்கள் பெரிய கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அந்தத் தளிப்பெண்டிர் சோழப் பேரரசின் பல பகுதிகளிலிருந்தும் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம்.
  • ஆக, ஆடல் பாடலுக்கு அங்கே அன்று பெரும் முக்கியத்துவம் இருந்திருக்கிறது. ஆனால், படத்தில் நாம் பார்க்கும் ஆடல் பாடல் எதுவுமே நம்மைச் சோழர் காலத்துக்கு இட்டுச் செல்லவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் பல காட்சிகள் வந்து போகின்றன. ஒரு சேடிப்பெண், குஜராத்திபோல சேலை அணிந்திருந்தார்.
  • தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்னர் மூன்று அடுக்கு மட்டுமே இருந்த கோயில் விமானத்தை ஒரேடியாக 13 அடுக்குகளாக உயர்த்தி, ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அச்சாதனை முறியடிக்கப்படாமல் அன்றே பிரமாண்டம் செய்தவன் ராஜராஜன். 
  • பெரிய கோயில் கட்டுவதற்கு தேவையான கருங்கற்கள் இல்லாத, தலைநகரான தஞ்சைக்கு, பல்லாயிரம் டன்கள் எடையுள்ள கருங்கற்களைக் கிட்டத்தட்ட 80 கிமீ தொலைவில் இருந்து கொண்டுவந்துள்ளனர். சிறிய கற்கள் அல்ல. கேரளாந்தகன் திருவாயில் மற்றும் ராஜராஜன் திருவாயிலில் இருக்கும் நான்கு நிலைக் கற்கள் ஒவ்வொன்றும் 40 அடி உயரம். ஒரு கல்லில் இருந்து செதுக்கப்பட்டவை. அதேபோல், ராஜராஜன் திருவாசலில் வாயில் காப்பானாக இருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும், ஒரு கல்லில் இருந்து செதுக்கப்பட்டவை. சிலையின் அளவு 18 அடி நீளம் 6 அடி அகலத்திற்கும் அதிகம்.
  • இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படம் ஆக்கும் ஒருவர், நாவலுக்கு வெளியே உள்ள ராஜராஜனை அணுகுவதும் முக்கியம். 
  • தமிழ்ச் சமூகத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒரு மாபெரும் ஆளுமை ராஜராஜ சோழன். ராஜராஜன் குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும், தமிழரின் கலைகள் பல ராஜராஜன் காலத்தில் உச்சங்களைத் தொட்டிருந்தன. ஆச்சரியம் தரும் வகையில், தன்னுடைய காலத்தை நாம் அணுகுவதற்கு ஏராளமான பதிவுகளையும் விட்டுச்சென்ற மன்னனும் அவன்.
  • திரைப்படக் குழு நினைத்திருந்தால், முயன்றிருந்தால் சோழர் காலகட்டத்தின், தமிழர் கலைகளின், கலைச் செல்வங்களின் சில துளிகளையேனும் இன்றைய சமூகத்துக்குக் கடத்திக் கொண்டுவந்திருக்க முடியும். மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இவற்றுக்கு இடம் இல்லாமல் போனதற்குக் காரணம் அலட்சியமா, அறியாமையா?  

நன்றி: அருஞ்சொல் (23 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்