TNPSC Thervupettagam

பொய்க்காமல் பெய்யும் மழை

July 21 , 2022 749 days 419 0
  • இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பருவமழையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் சொல்லி மாளாது. அடைமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், வாழ்வாதார இழப்புகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தடம்புரளச் செய்திருக்கின்றன.
  • மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். குஜராத்தில் அடைமழை தொடர்பான பிரச்னைகளால் சுமார் 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கச் - செளராஷ்டிர பகுதிகளில் 50,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • மத்திய பிரதேசமும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அஸ்ஸாம் குறித்து கூறவே வேண்டாம். ஆண்டுதோறும் உயிரிழப்பும் பொருளிழப்பும் அஸ்ஸாமுக்கு வழக்கமாகிவிட்டன. வடமாநிலங்கள் மட்டுமல்ல, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலங்களும் பருவமழையின் தாக்கத்தால் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
  • இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட ஒருவாரம் முன்னதாகவே தொடங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை ஐந்து முறைதான் தென்மேற்கு பருவமழை முன்னதாக தனது பொழிவை ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் பருவமழைப் பொழிவின் பெரும்பகுதி தென்மேற்கு பருவமழையால் பெறப்படுகிறது என்பதால் இந்திய விவசாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் அது மிகவும் முக்கியமானது. தென்மேற்கு பருவமழைக்கு மூன்று முக்கியத்துவங்கள் உண்டு.
  • முதலாவது, கரீஃப் பயிர்களின் மகசூலுக்கு, குறிப்பாக நெல் பயிருக்கு, போதுமான பருவமழை அவசியம். அதன்மூலம்தான் உணவுப் பொருள்களின் விலை மட்டுப்படும் என்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பும் உறுதிப்படும். கடந்த மார்ச் மாதத்தில் காணப்பட்ட வெப்ப அலையால் கோதுமை விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்போதைய பருவமழையின் மூலம் குளிர்கால கோதுமை மகசூல் உறுதிப்படக்கூடும்.
  • இரண்டாவது, கொள்ளை நோய்த்தொற்று இந்தியப் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டபோது பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பையும், இந்தியாவின் உணவுத் தேவையையும் வழங்கியது விவசாயம்தான். ஊரகப்புற பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயம் எனும் நிலையில், பருவமழைப் பொழிவில் ஏற்படும் குறைவு உணவுப் பொருள் உற்பத்தியை பாதிப்பது மட்டுமல்லாமல், ஊரகப்புற வருமானத்தையும் பாதிக்கும். அதனால், தென்மேற்கு பருவமழை எப்போதுமே எதிர்பார்க்கப்படுகிறது.
  • மூன்றாவது, உலக அளவில் உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. உக்ரைன் பிரச்னை உணவு உற்பத்தியை மட்டுமல்ல, உணவுத் தேவையையும் பாதித்திருக்கிறது. பல நாடுகளில் அடிப்படைத் தேவைக்கான அரிசி, கோதுமை, பார்லி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உணவுப் பொருள்களின் விலையைக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழையால் உணவு உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே நம்மால் நிலைமையை சமாளிக்க முடியும்.
  • இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தென்மேற்கு பருவமழையால் நன்மைகள் ஏற்பட்டிருப்பது போலவே, கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. நகரங்களையும், நதியோரப் பகுதிகளையும் மழைப் பொழிவால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கடும் சேதத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் உயிரிழந்ததும், ஹிமாசல பிரதேசத்தில் திடீர் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், மும்பை, தில்லி, சண்டீகர், மொகாலி நகரங்கள் வெள்ளக்காடாக மாறியிருப்பதும் பருவமழையின் கோர முகங்கள்.
  • விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று செய்திகள் வருகின்றன. மகிழ்ச்சி. அதேநேரத்தில், நகரங்கள் வெள்ளக்காடுகளாக மாறியிருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது, தவறு பருவமழையுடையது அல்ல, அதை முறையாக எதிர்கொள்ளத் தவறிய நிர்வாகத்துடையது என்றுதான் கூறத் தோன்றுகிறது.
  • ஆண்டுதோறும் பருவமழைக் காலம் எப்போது தொடங்கும் என்று நிர்வாகத்துக்கு நன்றாகவே தெரியும் என்றாலும்கூட, மீண்டும் மீண்டும் அதை எதிர்கொள்ள தவறுவது மன்னிக்கக்கூடியதாக இல்லை. பருவமழைப் பொழிவின் பாதிப்புகளை மாநகராட்சி நிர்வாகங்களும், ஆட்சியாளர்களும் சுயஆதாயமாக்க விரும்புவது பின்னணியாக இருக்குமோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. நகர்ப்புற கட்டமைப்பு முறையாக செயல்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது பருவமழை பாதிப்புகள்.
  • மக்களவையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சில தகவல்களை தெரிவித்தது. பல்வேறு மாநிலங்களிலும், ஒன்றியப் பிரதேசங்களிலும் "அம்ருத்' திட்டத்தின் கீழ் ரூ.1,180 கோடி செலவில் 633 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் தண்ணீர் தேங்கும் 2,300 அடைப்புகள் அகற்றப்பட்டிருக்கின்றன. 500 நகரங்களும், பெருநகரங்களும் இதனால் மழைவெள்ள பாதிப்பிலிருந்து முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • திட்ட ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன. அதற்குப் பிறகும் பருவமழை வந்தால் பெருநகரங்கள் வெள்ளக் காடாக மாறுகின்றன. அதிகாரிகளும், நிர்வாகமும் இதற்கு பொறுப்பேற்காத வரை, ஆண்டுதோறும் தொடரும் அவலத்துக்கு முடிவு ஏற்படாது.
  • பருவமழை கைவிடவில்லை; நிர்வாகம்தான் செயல்படவில்லை!

                                                                                                                                                                                                                                                              நன்றி: தினமணி (21 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்