TNPSC Thervupettagam

பொருளாதாரச் சூழல்

September 23 , 2019 1935 days 892 0
  • கடந்த ஜூலை மாதம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரச் சூழலில் சில எதிர்மறை மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின. அந்த மாதிரி மாற்றங்கள் சார்ந்த நிகழ்வுகளில், வாகன உற்பத்திச் சரிவு தகவல் முதலில் மேற்பரப்புக்கு வந்தது.

பொருளாதாரச் சூழல்

  • வாகன உற்பத்தித் துறை தவிர, கட்டுமானம், ஏற்றுமதி போன்ற பல்லாயிரக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உள்ளடக்கி இயங்கும் துறைகளில் தொடர்ந்து வரும் தொய்வு நிலையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், அண்மையில் வெளியான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீடு (ஜி.டி.பி.), கடந்த ஐந்து ஆண்டுகளில் காணப்படாத வீழ்ச்சியைச் சந்தித்து, 5 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல், பொருளாதார வட்டாரங்களை உலுக்கியது.
  • கடந்த இரு பருவங்களில், இந்த வீழ்ச்சிச்  சக்கரம் தொடர்ந்து கீழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதும், பொருளாதார வல்லுநர்களின் அதிர்ச்சிக் கூட்டலுக்கு காரணமாக அமைந்தது.
  • மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள், நாம் வரும் காலங்களில் சந்திக்கவிருக்கும் சில பொருளாதார இடர்ப்பாடுகளுக்கான அறிகுறிகள். அந்த நிகழ்வுக்கு பெயர் "பொருளாதார தொய்வு நிலை' (ரிசெஷன்) என்பதாகும்.
  • பொருள்களின் தேவை (டிமாண்ட்) குறைவு, அதனால் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள், வேலைவாய்ப்பின்மை அதிகரித்தல் மற்றும் முக்கிய உற்பத்தித் துறைகளில் பணி இழப்புகள், நீண்ட கால வட்டி விகிதத்தைவிட, குறைந்த கால வட்டி விகிதம் சற்று உயர் நிலையில் இருத்தல், மொத்த உள்நாட்டு குறியீட்டில் (ஜி.டி.பி.) தொடர் வீழ்ச்சி ஆகியவைதான், ஏற்கெனவே தொடங்கிவிட்ட பொருளாதார தொய்வு சரிவு நிலைக்கு அடையாளக் காரணிகளாகும்.

பொருளாதார தொய்வு நிலை

  • பொருளாதார தொய்வு நிலைப் பருவத்தில், உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வருமானம் சுருங்கி, அந்த மாதிரி நிதிநிலை, தொழில் துறை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தும். புதிய முதலீடுகள் முடங்கும்.  இந்தச் சூழ்நிலையில், போதிய பொருளாதார வலுவற்ற நிறுவனங்கள் மூடப்படும் வாய்ப்புகள் உருவாகும். அந்த நிறுவனங்களால் திருப்பிச் செலுத்த முடியாத வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக உருவெடுக்கும். 
  • பொருளாதார பருவ சுழற்சியில், சரிவு நிலை என்பது தவிர்க்க முடியாத தீய பருவமாகும். உலகப் பொருளாதார வரலாற்றின் அடிப்படையில், அந்த மாதிரி பருவ காலத்தின் சராசரி ஆயுள் காலம் சுமார் 22 மாதங்கள் வரை நீடிக்க வாய்ப்புண்டு.
  • 1919 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில், ஆறு முறையும், 1945-லிருந்து 2001-ஆம் ஆண்டு வரை பத்து முறையும் இந்த மாதிரி சுழற்சிப் பருவத்தை உலகப் பொருளாதாரம் சந்தித்து, அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறது.

பொருளாதாரச் சரிவின் தாக்கம்

  • 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய பொருளாதார சரிவு நிலை, 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால், அதன் தாக்கம் 2012-ஆம் ஆண்டு வரை நீடித்தது. பொருளாதார சரிவு நிலைகளின் ஆயுள்காலம் குறைந்த அளவுதான் என்றாலும், அதன் எதிர்மறை தாக்கங்கள் நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதுதான் வரலாற்று உண்மை.
  • இந்த மாதிரி விரும்பப்படாத பொருளாதார பருவத்தை தடுத்து நிறுத்த முடியாது என்றாலும் அதன் தீவிரத்தைக் குறைக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, சரியான தருணத்தில் அதற்கான சூத்திரங்களை, சோதனை அடிப்படையில் அமல்படுத்தலாம். சூழ்நிலைக்கேற்ப சூத்திரங்கள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இந்த நடவடிக்கைகள், ஒரு நோயின் தீவிரத்தைக் குறைத்து நோயாளி அனுபவிக்கும் வலிகளின் தாக்கத்தைக் குறைப்பது போன்றதுதான்.
  • நம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல; அந்த நிகழ்வு மற்ற உலக நாடுகளின் பொருளாதார தொய்வு நிலையோடு தொடர்புடையது என்ற வாதம் உண்மை என்றாலும், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற அண்மைக்கால பொருளாதார உள்நாட்டு நடவடிக்கைகளின் தாக்கம், வீழ்ச்சியின் வீரியத்தை வேகப்படுத்திவிடும் ஆபத்து காத்திருக்கிறது.

வர்த்தகப் போர்

  • உலக அளவில் பொருளாதார மந்த நிலைக்கான அடையாளங்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து துளிர ஆரம்பித்துவிட்டன.  அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட வர்த்தகப் போர், மந்த நிலையை துரிதப்படுத்திவிடும் என்ற பீதி உலக அளவில் பரவியது.  2008-ஆம் ஆண்டில் இந்த மாதிரி திடீர் பொருளாதார அதிர்வுகளில் தங்களையும் அறியாமல் சிக்கித் தவித்த பல வளரும் நாடுகள், இந்த முறை முன்கூட்டியே சற்று எச்சரிக்கை அடைந்து, அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கின.
  • தற்காப்பு நடவடிக்கைகளின் முதல் கட்டமாக அமெரிக்கா, ரஷியா, சவூதி அரேபியா, பிரேசில், தாய்லாந்து, பிலிப்பின்ஸ், மெக்ஸிகோ, இந்தியா போன்ற 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகள், வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் நாட்டம் காட்டின. கடன்களுக்கான வட்டி விகிதக் குறைப்பு, தொழில் சார்ந்த முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்கி, பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட செயல்பாடாகக் கருதப்படுகிறது.

வட்டி விகிதக் குறைப்பு

  • இந்திய ரிசர்வ் வங்கியைப் பொருத்தவரை, இந்த ஆண்டு பிப்ரவரி 19-இல் தொடங்கி ஆகஸ்ட் வரை, ரெப்போ  வட்டி விகிதத்தை (ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம்) மொத்தம் 1.10 சதவீத அளவுக்கு தொடர்ந்து  நான்கு முறை குறைத்து, ரெப்போவை 5.4 சதவீத அளவுக்குக் கீழ் இறக்கியுள்ளது.
  • பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த சில மாதங்களாக பல துரித நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  
  • அதன்படி, தளர்வுற்றிருக்கும் கட்டுமானத் துறைக்கு முட்டுக் கொடுக்கும் வகையில், ரூ.10,000 கோடி நிதியத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தத் துறையின் தேக்க நிலைக்கு துறை சார்ந்தவர்களின் பேராசை ஒரு முக்கியக் காரணம். 
  • எந்தவிதமான பொருளாதாரச் சூழ்நிலையிலும் அபரிமிதமான லாபத்தை எதிர்பார்த்து கட்டுமான நிறுவனங்கள் காத்திருப்பதால், பல கட்டடங்கள் விற்கப்படாமலேயே உள்ளன. புதிய கட்டடங்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.-யும் தேக்க நிலைக்கு மற்றொரு காரணமாகும். கடன் வாங்கி கட்டிய வீடுகளை பதிவு செய்யும்போது, வீட்டு உரிமையாளருக்கு பதிவு அலுவலகங்களில் ஏற்படும் "கூடுதல்' செலவுகள்  அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பது அனைவரது ஆதங்கம்.
  • ஏற்றுமதித் துறையை ஊக்கப்படுத்தும் வகையில், அதற்கான முன்னுரிமை கடன் ரூ.60,000  கோடி  வரை கூடுதலாக்கப்படுவதுடன், ஏற்றுமதிக்கான காப்பீட்டுத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.
  • அரிய அந்நியச் செலாவணியை ஈட்டும் ஏற்றுமதித் துறையின் முக்கியத்துவத்தால், இந்தத் திட்டங்கள் தற்காப்புத் திட்டங்களாக  இல்லாமல், நிரந்தரத் தொடர் திட்டங்களாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் எம்.எல்.ஏ. எம்.பி போன்ற அரசியல்வாதிகள்போல் சமூகத்தில் வி.ஐ.பி.-க்களாகக் கருதப்பட்டு, அதற்குரிய முக்கியத்துவம் அவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
  • மேலே குறிப்பிட்ட பரிகார நடவடிக்கைகளுக்கு மகுடம் சூட்டும் வகையில்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.20) அறிவித்த ரூ.1.45 லட்சம் கோடி அளவிலான முற்போக்கு வரி சீர்திருத்த அறிவிப்புகள் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
  • பெருநிறுவனங்களுக்கான அதிகபட்ச வரி விகிதம் 34.94 சதவீதத்திலிருந்து 25.17 சதவீதமாகவும், புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 29.12 சதவீதத்திலிருந்து 17.01 சதவீதமாகவும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.  

உற்பத்தித் துறை

  • மற்ற ஆசிய நாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் பொருளாதார வலிமையை  இந்திய உற்பத்தித் துறைக்கு அளிக்க வல்லதாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. வரிச் சலுகை மூலம் கிடைக்கும் அதிக லாபத்தை தங்கள் உற்பத்திப் பெருக்கத்துக்கும், விரிவாக்கச் செலவினங்களுக்கும் பெருநிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.
  • ஏனெனில், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தச் சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. நாட்டு நலனை முன்னிறுத்தி, மத்திய அரசின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் கடமை பெரு நிறுவனங்களுக்கு உண்டு.
  • இந்தச் சலுகைகள் பொருளாதாரத்தின் "விநியோக' பக்கத்திற்கு (சப்ளை சைட்) ஊக்கமளிக்கும். ஆனால், "தேவை' பக்கத்தை (டிமாண்ட் சைட்) ஊக்கப்படுத்த, மக்களின் வாங்கும் திறன் அதிகப்படுத்தப்பட வேண்டும். அதற்கான ஒரு வழி, தனி நபர் வருமான வரிச் சீர்திருத்தங்கள்தான். அந்த மாதிரி சீர்திருத்த அறிவிப்புகளையும் மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று நம்புவோம்.
  • மந்த நிலை என்ற சீறும் "சிங்கத்தை'ச் சமாளிக்க, பொருளாதாரம் என்ற வயலில் புகுந்திருந்த வரிச் சுமை என்ற "யானை'யை சீர்திருத்தம் என்ற "கும்கி' மூலம் வெளியேற்ற தற்போது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த சேதாரத்துடன் அந்தச் "சிங்கத்திடமிருந்து' தப்பிக்க சில வலுவான அரண்களை மத்திய அரசு எழுப்பி வருகிறது. அதனால், மந்த நிலை என்னும் "சிங்கத்தின்' ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தி, அதை விரைவில் வெளியேற்றும் கடமை நாட்டின் தொழிலதிபர்கள், நிதி மேலாண்மைத் துறையினர் உள்பட அனைவருக்கும் உள்ளது.

நன்றி: தினமணி (23-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்