TNPSC Thervupettagam

பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்

June 30 , 2024 3 hrs 0 min 11 0
  • புதிய அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தயார்செய்வதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால், உடனடியாக சரிசெய்ய வேண்டியவை ஏராளம். கடந்த ஆண்டு ஜிடிபி 8.2% என்பது வலிமையானது என்றாலும் அதற்குப் பின்னால் பல உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.
  • மக்களுடைய நுகர்வுச் செலவு மிகவும் குறைவாக இருக்கிறது, பொருளாதாரத்தின் பல அம்சங்கள் கவலைப்படும்படியாகத்தான் இருக்கின்றன. வளர்ச்சிகூட எல்லாத் துறைகளிலும் - எல்லா இடங்களிலும் சமமாக இல்லை. இந்தப் பிறழ்வுகளால்தான் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வருவாய் மற்றும் செல்வ வளத்தில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு ஆகியவை நிலவுகின்றன.
  • மக்களை வெகுவாக பாதிக்கும் இந்த அம்சங்களால்தான் தனிப் பெரும்பான்மையுடன் ஆண்ட கட்சி, இப்போது கூட்டணியாகச் செயல்பட்டாக வேண்டிய நிலைமைக்கு மாறியிருக்கிறது. விழிப்புடன் செயல்படும் அரசியல் கூட்டணியாக இருந்தால் பொருளாதார நடவடிக்கைகளையும் அதற்கேற்ப எடுத்தாக வேண்டும். ஒரு சில அறிகுறிகள் அப்படித் தெரிகின்றன.

மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சி

  • கடந்த 2023 - 2024 நிதியாண்டில் ஏற்பட்ட ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 8.2%, முந்தைய ஆண்டு வளர்ச்சி 7% என்பதைவிட அதிகம் என்றாலும் அரசு அளித்த மானியங்களால்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது, இதை ‘மிகைப்படுத்தப்பட்ட’ வளர்ச்சியாகத்தான் கருத வேண்டும். இந்த அளவானது தேசிய அளவில் வளர்ச்சியைக் கணக்கிடும் இருவேறு முறைகளில் பெரிய வேறுபாட்டையும் புகுத்திவிட்டது.
  • ‘மொத்த மதிப்பு கூட்டப்பட்ட அளவு’ (GAV), ‘மொத்த உற்பத்தி மதிப்பு’ (GDP) என்று இவை இரண்டாகும். மொத்த உற்பத்தி மதிப்பில், மொத்த மதிப்பு கூட்டப்பட்ட அளவுடன் நிகர மறைமுக வரி வருவாயும் சேரும். இவை இரண்டும் ‘கேட்பு’ (Demand) – ‘அளிப்பு’ (Supply) என்ற இரு கரங்களைச் சுட்டுவதாகும். மொத்த மதிப்பு கூட்டலுடன் ஒப்பிட இது 7%, 6.7%தான். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் இதுதான் உண்மையான பொருளாதார வளர்ச்சியின் அளவு என்று கருதுகின்றனர்.
  • உற்பத்தித் துறையில் எங்கெங்கு அழுத்தம் இருந்தன என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. வர்த்தகம், பழுதுபார்க்கும் துறை, விருந்தினர் உபசரிப்பு (ஹோட்டல்கள் – சுற்றுலா), போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள், தகவல்தொடர்பு, ஒலி-ஒளிபரப்பு சேவைகள் ஆகியவற்றில் அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதியளவுக்குத்தான் வளர்ச்சி இருந்தது. அமைப்புரீதியாக திரட்டப்படாத தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதில் இந்தத் துறைகள்தான் பெரும்பங்கு வகிக்கின்றன.
  • விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் இங்குதான் அதிகம். ஓரளவுக்குத் தொழில்திறன் உள்ள அல்லது இனிதான் புதிய தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கும், கிராமங்களிலிருந்து வேலைவாய்ப்பு தேடிவருவோருக்கும் வேலைதரும் துறையும் இதுதான். ‘கோவிட்-19’ பெருந்தொற்றால் முற்றாக முடங்கிய பொருளாதாரத்தால் பெருமளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது இத்துறையில்தான். ஆயிரக்கணக்கான உற்பத்திப் பிரிவுகள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலைவாய்ப்பு இழந்தனர்.
  • எனவே, இந்தத் துறை மீட்சி அடைவது மிகவும் அவசியம். ஆனால், உண்மையில் கிடைக்கும் தரவுகளோ, எச்சரிக்கை அளிக்கும் விதத்தில்தான் இருக்கின்றன. 2019-2020க்குப் பிறகு இந்தத் துறை படிப்படியாக மீட்சி பெற்றாலும் வளர்ச்சி வெறும் 10% ஆகத்தான் இருக்கிறது, அதாவது ஆண்டுக்கு 2.5% மட்டும்தான் வளர்ச்சி!

குறையும் நுகர்வுச் செலவு

  • உண்மையான பொருளாதார நிலையை இதுதான் காட்டுகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யவும் மேலும் வளர்ச்சி பெறவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவல்ல இந்தத் துறைதான் கவனிக்கப்பட வேண்டியது. வழக்கமான அளவைவிட மேலும் பல மடங்குக்கு இது வேலைவாய்ப்புகளை வழங்கியாக வேண்டும்.
  • இந்தியத் தொழிலாளர்களில் 90% அமைப்பு சாராத துறைகளில்தான் வேலை செய்கின்றனர். எனவே, இந்தத் துறையில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டால்தான் பொருளாதாரம் வளரும். பெருந்தொழில் அல்லாத அல்லது தொழிலகம் என்ற வரையறுக்குள் வராத உற்பத்திப் பிரிவுகளின் நிலைமை 2015-2016 முதல் (உயர் பணமதிப்பு நீக்கம்) எப்படி இருக்கிறது என்ற ஆய்வறிக்கை, தொடர் விளைவாக அது மேலும் எப்படி மோசமாகியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இதில் பல பிரிவுகள் 2 அல்லது 3 பேரை வேலைக்கு அமர்த்திக்கொள்பவை. 2022 - 2023இல்கூட இவை மீண்டும் புத்துயிர் பெறவில்லை.
  • நாட்டில் ஒட்டுமொத்தமாக நுகர்வுச் செலவு ஏன் அதிகரிக்காமல் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அதிக விலையுள்ள வீடுகள், வாகனங்கள் விற்பனை அதிகரிப்பது உண்மைதான் என்றாலும் அப்படி வாங்குகிறவர்களுடைய எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான். வசதியுள்ள, நிரந்தர வேலையுள்ள உயர் வருவாய்ப் பிரிவினருடைய நுகர்வு அது. ஆனால், பெரும் எண்ணிக்கையுள்ள நடுத்தர வகுப்பும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள உழைக்கும் மக்களும் தொடர்ந்து அதிக வருவாய் ஈட்டி, தங்களுக்கு வேண்டிய பொருள்களை நுகர முடிந்தால்தான் பொருளாதாரம் மீட்சி அடையும். அப்போதுதான் தொழில் துறையினர் தங்களுடைய உற்பத்திக்கான அலகுகளை விரிவுபடுத்துவார்கள்.
  • இப்போது நுகர்வு குறைவாக இருப்பதால் லாப விகிதத்தை மட்டும் அதிகமாக்கிக்கொண்டு, குறைந்த அளவு தயாரித்து அவற்றை மட்டும் அதிகபட்சம் விற்று லாபம் ஈட்டுவதில் உற்பத்தியாளர்கள் அக்கறை செலுத்துகின்றனர். பாதிக்கப்படாத, உயர் வருவாயுள்ள நுகர்வோர்களுக்கானவை மட்டும் இப்போது தயாரிக்கப்பட்டுச் சந்தையாகிறது. இதுவும் பொருளாதாரத்தின் ஒரு பகுதிதான் என்றாலும் இது மட்டும் துடிப்பாக இருப்பது போதாது.

எப்படிப்பட்ட கொள்கை வேண்டும்!

  • பொருளாதார வளர்ச்சிக்கு ‘அளிப்பு’ தரப்பிலிருந்து பெரிதும் உதவுவது கட்டுமானத் துறையாகும். அரசு தொடர்ந்து இத்துறையில் மூலதனச் செலவுகளை அதிகப்படுத்துவதால் வேலைவாய்ப்பு அதிகரிப்பது உண்மைதான். நெடுஞ்சாலைகள், பாலங்கள் என்று அரசின் முதலீடு அதிகமானதால் இத்துறையில் கடந்த மூன்றாண்டுகளாக சராசரி வளர்ச்சி 13%க்கும் குறையாமல் இருக்கிறது அதேசமயம்.
  • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மக்களுடைய ஒட்டுமொத்த நுகர்வும் தனி நுகர்வும் குறைந்துவிட்டது. 2014 - 2015 முதல் 2018 - 2019 வரையிலான சராசரி விகிதத்தைவிட இது குறைவாக இருக்கிறது. இந்த முதலீட்டில் அல்லது செலவிலும் 60% தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவது போன்றவற்றைக் கழித்துவிட்டால் பொதுப் பொருள்களுக்கான செலவு மிக மிகக் குறைவு.
  • நிதிநிலை அறிக்கை தயாரிப்பவர்கள் முன் உள்ள கேள்வி, நிதிக் கொள்கையைத் திருத்த வேண்டுமா அல்லது ‘அளிப்பு’ துறைக்கு மேலும் அதிக மூலதனத்தைத் திருப்ப வேண்டுமா என்பது. விலைவாசி உயர்வு காரணமாக மக்களுடைய வருமானம் ‘உண்மை மதிப்பில்’ குறைந்துபோகிறது. எனவே. அவசியப் பொருள்களுக்குச் செலவிட்ட பிறகு பிற செலவுகளுக்குப் பணம் இருப்பதில்லை, அல்லது போதுமானதாக இல்லை. விலைவாசி தொடர்ந்த உயர்ந்துவருவதால் இரண்டு ஆண்டுகளாக நுகர்வுச் செலவு அதிகமாகாமல் இருக்கிறது.
  • அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் செலவுசெய்வதை அரசு அதிகப்படுத்தினாலும் தனியார் துறையில் முதலீடு பெருகவில்லை, புதிய வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகவில்லை, ஊதிய உயர்வும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் இல்லை. எனவே, அரசின் நிதிக் கொள்கை புதிதாகவும் மக்களுக்கு நேரடியாகப் பயன்தரும் வகையிலும் இருக்க வேண்டும். பொது விநியோக முறை மூலம் கோதுமை – அரிசி ஆகியவற்றை விலையில்லாமலும் மானிய விலைக்கும் வழங்குவதைத் தொடர வேண்டும், மூலதனச் செலவையும் தொடர்ந்து பராமரித்தாக வேண்டும்.

3 கோடி வீடுகள்

  • அரசு இதை உணர்ந்திருக்கிறது என்பதற்கு ஓரிரு அறிகுறிகள் தெரிகின்றன. புதிய அரசின் முதல் அமைச்சரவை, குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு நாடு முழுவதும் வீடு கட்டித் தரும் திட்டத்தை விரிவுபடுத்தி 3 கோடி கூடுதல் வீடுகளை கிராம – நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டித்தர முடிவுசெய்துள்ளது. குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வருமான வரியில் சலுகைகளை அதிகப்படுத்துவது, சிறு – குறு - நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கும் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் வேலையில் ஈடுபடுத்தும் உற்பத்திப் பிரிவுகளுக்கும் ரொக்க மானியம் வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
  • பொருளாதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதில் ஐயமில்லை. பொருளாதார மீட்சி வலிமையாகவும் முழுமையாகவும் இல்லை என்பதால் அரசு தனது கொள்கைகளைத் திருத்திக் கொள்வது கட்டாயம். மக்கள் நேரடியாக செலவுசெய்வதை அதிகப்படுத்தினால்தான் தொழில் துறையும் முதலீட்டை அதிகப்படுத்தும். அரசின் நிதிநிலை அவ்வளவு நெருக்கடியில் இல்லை.
  • இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய வருமானம் மற்றும் லாபத்திலிருந்து ரூ.2.11 லட்சம் கோடியை அரசுக்குக் கடந்த மாதம் வழங்கியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி வசூல், நேர்முக வரி வசூல் ஆகியவையும் வளமாகவே இருக்கின்றன. ‘இந்தியா’ கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுடைய மனம் கவர பல நேரடி ரொக்க மானிய திட்டங்களை அறிவித்திருந்ததால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். இப்போது அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வரவில்லை என்பது அவர்களுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது.
  • தேஜகூ அரசு நிதி நிர்வாகத்தில் கறாராக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் இது மட்டும் போதாது, மக்களில் பெரும்பாலானவர்கள் அதிக வருமானம் பெறவும் அதிகம் செலவழிக்கவும் தேவையான கொள்கை முடிவுகளை எடுப்பது அதைவிட முக்கியம். பொது நிதிநிலையை அதிகம் பாதிக்காமலேயே இதைச் செய்துவிட முடியும்.

நன்றி: அருஞ்சொல் (30 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்