ரிசர்வ் வங்கி, 2018-19-ல் பொருளாதார வளர்ச்சி வீதம் 4% ஆக இருக்கும் என்று ஊகிக்கிறது. இப்போதைக்கு இதைப்பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியாது. குறைவதற்கும் வாய்ப்பு அதிகம். 2019-ல் கணிசமாக உயர்ந்துவிடாது.
ஜிஎஸ்டி நடைமுறை நிலைப்பட்டுவிட்டாலும் முதலீடு அதிகரித்தால்தான் வளர்ச்சியும் பெருகும். நம்முடைய வெளிநாட்டு வர்த்தகம் அதிகமாவதற்கு ஏற்ப சர்வதேசச் சூழல் இல்லை. எனவே ஏற்றுமதியும் வளர்ச்சியும் பாதிக்கப்படும். வளர்ச்சி வீதமும் 2% முதல் 7.5%-க்குள் இருக்கும். நமக்குக் கவலை தரும் அம்சங்கள் இவை:
முதலீட்டு விகிதம்
பொருளாதார வளர்ச்சியானது மூலதன முதலீட்டையும், மூலதனத்தின் உற்பத்தித் திறனையும் பொருத்தது. முதலீடு அதிகமாகும் அளவுக்கேற்ப உற்பத்தியும் பெருக வேண்டும்.
தொழில் பயிற்சியும் அனுபவமும் மிக்க தொழிலாளர்களும் நவீனத் தொழில்நுட்பமும் இணைந்தால் உற்பத்தி அதிகரிக்கும். இவையெல்லாம் தொடர்ந்து மாறுவன. 2007-08-ல் 8% ஆக இருந்த நிரந்தர முதலீட்டு விகிதம் 2017-18-ல் 28.5% ஆகக் குறைந்துவிட்டது.
முதலீட்டு விகிதத்தை உயர்த்துவது எளிதல்ல. அசுர பலம் வேண்டும். சலசலப்பற்ற அரசியல், பொருளாதார சூழலும் முக்கியம்.
வங்கிக் கட்டமைப்பு
பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் முக்கிய அம்சமாக வங்கிக் கட்டமைப்பு இருக்கிறது. 2018 மார்ச் நிலவரப்படி அரசுத்துறை வங்கிகள் தந்த மொத்தக் கடனில் வாராக் கடன்களின் பங்கு 7%.
இதனால் அரசுத்துறையின் 11 வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ‘உடனடி திருத்த நடவடிக்கை’யின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வங்கிகள் விரும்பியபடி, விரும்பிய மனுதாரர்களுக்குக் கடன்களை வழங்க முடியாது. வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கிவிட்டன. அவை கொடுத்த கடன்களும் திரும்ப வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.
வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (என்பிஎஃப்சி) தங்களுக்குத் தேவைப்படும் தொகையை, வங்கிகளிடமிருந்துதான் பெறுகின்றன. வங்கிகளுக்கு மறு முதலீடு அளிப்பதால் பிரச்சினை ஓரளவுக்குத் தீரும். கடன் தரும் திறனைக் கூட்ட இது எந்த அளவுக்கு உதவும் என்று தெளிவாகத் தெரியவில்லை.
வங்கிகள் இன்றைக்கு குறுகிய கால, நீண்ட கால கடன்களுக்குப் பொறுப்பானவையாக இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் நடைமுறை மூலதனம், மூலதனச் செலவு ஆகிய இரண்டுக்குமே பணம் தர முடியாத நிலையில் பல வங்கிகள் உள்ளன. அரசுத்துறை வங்கிகளுக்கு மூலதனத்தை மேலும் வழங்குவதை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வங்கித்துறை பழைய நிலைக்குத் திரும்புவதற்கேற்பதான் தொழில்துறையில் வளர்ச்சி ஏற்படும்.
வேலைவாய்ப்பு வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி வீதம் 7% என்றால் அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் ஏன் அதிகமாகவில்லை என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. இரண்டு அம்சங்களை மனதில் வைக்க வேண்டும்.
முதலீட்டை அதிகரிப்பதாலும் வளர்ச்சி ஏற்படும், ஏற்கெனவே உள்ள உற்பத்திக் கொள்ளளவை திறமையாகப் பயன்படுத்தினாலும் வளர்ச்சி ஏற்படும். புதிய முதலீட்டால் வளர்ச்சி ஏற்படும்போதுதான் வேலைவாய்ப்பு அதிகமாகும்.
இப்போதுள்ள மூலதனத்தையே திறமையாகப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, மூலதனத்தையும் உற்பத்திக் கொள்ளளவையும் திறமையாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, 2004-05 முதல் 2009-10 வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்ததற்கு முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நிதித்துறையிலும் ஏற்பட்ட விரைவான வளர்ச்சிகள்.
இப்போது தகவல் தொழில்நுட்பத் துறை மந்த கதியை அடைந்துவிட்டது. நிதித்துறை, ‘வாராக் கடன்’ போன்றவற்றால் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. 2004 முதல் 2010 வரையில் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நிதித்துறையிலும் படித்தவர்கள் ஏராளமாக நுழைந்து வேலைவாய்ப்பு பெற்றனர்.
தகவல் தொழில்நுட்பத்துறை இப்போது கட்டமைப்பு மாறுதல்களுக்கு உள்ளாகி வருவதால் இப்போதைக்கு அதிக வேலைவாய்ப்புக்கு வாய்ப்பில்லை. வங்கியமைப்பு புத்துயிர் பெறுவது பல அம்சங்களைப் பொறுத்திருக்கிறது. வேலைவாய்ப்புக்கு மற்றொரு முக்கிய அம்சம், முதலீடு அதிகம் வேண்டும் என்பதுதான்.
உலகின் பிற பகுதிகளுடன் வெளி வர்த்தகத்துறை நன்கு பிணைக்கப்பட்டிருக்கிறது. சரக்கு, சேவைகளில் இந்தியாவின் வர்த்தகம் மொத்த ஜிடிபியுடன் ஒப்பிடும்போது 42% ஆக இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் ஏற்படும் வர்த்தக நிகழ்வுகள் இந்தியாவையும் பாதிக்கின்றன. தாராளமயக் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு இந்தியாவின் வர்த்தக பற்று-வரவு வசதியான நிலைக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் திடீரென உயர்ந்ததாலும், ரூபாயின் மாற்று மதிப்பு அதையொட்டி சரிந்ததாலும் சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவில் போட்ட முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெறத் தொடங்கினர்.
ரிசர்வ் வங்கி தலையிட்டதாலும் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை சரியத் தொடங்கியதாலும் ரூபாயின் மாற்று மதிப்பு மேலும் சரியாமல் தப்பியது. 2018 ஏப்ரல்-நவம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி 6% ஆக உயர்ந்தது. 2016-17-ல் இது 5.2% ஆகவும் 2017-18-ல் 9.8% ஆகவும் இருந்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் ஏற்றுமதி வளர்ச்சி வலுவாக இருக்க வேண்டும்.
உலக வர்த்தகம் எப்படி இருக்கும் என்ற அனுமானங்கள் நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன், நம்முடைய இறக்குமதிகளையும் கட்டுப்படுத்தியாக வேண்டும். பொருளாதார வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பராமரிக்க நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பது மிக மிக அவசியம்.
வேளாண் துறைத் துயரம்
வேளாண் துறையின் செயல்பாட்டைப் பொறுத்தே பொருளாதார வளர்ச்சி இருக்கும். நாடு முழுவதும் வேளாண் துறை ஒவ்வொருவிதமான பிரச்சினையில் ஆழ்ந்திருக்கிறது. விவசாய உற்பத்தி அதிகரிக்கும்போது விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகிறது என்பது முரண். விலை வீழ்ச்சி அடையும்போது அரசு தலையிட்டு தானே நேரடியாகக் கொள்முதல் செய்து விவசாயிக்கு இழப்பு நேராமல் தடுக்க வேண்டும். பிறகு சந்தையே தன்னை திருத்திக்கொண்டு, சரியான விலைக்கு தேவைகள் எழும்.
இப்படி திடீரென சந்தையில் நுழைந்து விளைபொருள்களை ரொக்கம் கொடுத்து வாங்கும் திறனுடன், வாங்கிய விளைபொருளைக் கெடாமல் கையிருப்பில் வைத்துக்கொள்ள போதிய கிடங்கு வசதியும் அரசுக்கு வேண்டும். விளைச்சல் குறைவாக இருக்கும் பருவத்திலோ, தேவை அதிகமாகும் நேரத்திலோ கையிருப்பிலிருப்பதை சந்தையில் அரசு விற்கலாம்.
காய்கறிகள் போன்ற அதிக விலை கிடைக்கும், மதிப்பு கூட்டப்பட்ட பயிர்களைச் சாகுபடி செய்வது குறித்து சிறு விவசாயிகள் சிந்திக்க வேண்டும். விளைச்சலைப் பெருக்குவது, சிறு நிலங்களை இணைத்து பெரும் பரப்பாக்குவது, சந்தைப்படுத்துவதைச் சிறப்பாகச் செய்வது ஆகியவற்றின் மூலம்தான் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும்.