TNPSC Thervupettagam

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு விடிவு எப்போது?

January 2 , 2025 8 days 29 0

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு விடிவு எப்போது?

  • அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள், சில நாள்களுக்கு முன்பு கோட்ட, மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முன்பாகத் தமிழ்நாடு முழுவதும் வாயில் கறுப்புத் துணி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அவ்வப்போது இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுப்பதும், அந்தப் போராட்டங்களுக்கு அரசிடமிருந்து சாதகமான பலன் கிடைக்காமல் போவதும் துரதிர்ஷ்டவசமானது.
  • பொதுவாக, அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்கப்பட்டுவிட வேண்டும். ஆனால், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இந்தப் பணப்பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்கிற குறைபாடு நீண்ட காலமாகவே நிலவிவருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பணப்பலன்களை வழங்க 2023இல் ரூ.1,030 கோடியை அரசு ஒதுக்கியது.
  • இப்படித்தான் காலதாமதமாகப் பணப்பலன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 21 மாதங்களாகப் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படாததைக் கண்டித்து ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் காலதாமதத்துக்குப் போக்குவரத்துக் கழகங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதைக் காரணமாகச் சொல்வதாகவும் ஓய்வூதியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
  • இது ஒரு பிரச்சினை என்றால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 2016 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படாமல் இருப்பதும் வியப்பளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தி வழங்கப்படாத அகவிலைப்படியால், சுமார் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அகவிலைப்படி என்பது பணவீக்கத்தின் தாக்கத்தைத் தணிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ்.
  • இந்தச் சலுகையை அரசின் பிற துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் அனுபவிக்கும்போது, போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு எனத் தொடங்கப்பட்ட ‘ஓய்வூதிய நம்பகம்’ என்கிற திட்டம்தான் காரணம் எனில், அத்திட்டம் தேவையில்லை என்று 2008இல் அமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டச் சீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
  • அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, மறுசீராய்வு மனு எனத் தொடர்ந்து மாநில அரசு மனுக்களைத் தாக்கல் செய்வது ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்குவதில் அரசுக்கு உடன்பாடு இல்லையோ என்கிற கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. போக்குவரத்துக் கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஓய்வூதியர்கள் பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதியை உரிய நேரத்தில் பெற உரிமை பெற்றவர்கள்.
  • இவை அவர்களுடைய பணம். எனவே, இவற்றை உரிய நேரத்தில் வழங்க வேண்டியது அரசின் கடமை. அவர்களுடைய பணத்தை வழங்காமல் இருக்கக் காரணங்களைத் தேடக் கூடாது. மற்ற துறை ஓய்வூதியர்கள்போல போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களும் நிம்மதியாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல 2016இலிருந்து வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகையுடன் சேர்த்து அகவிலைப்படியை வழங்க அரசு முன்வர வேண்டும். இனியும் இவ்விஷயத்தில் காலதாமதம் கூடாது!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்