TNPSC Thervupettagam

போராட்டங்கள் எழுப்பும் சில கேள்விகள்!

March 13 , 2020 1765 days 828 0
  • பிகாா் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில் 1918- 19-இல் மகாத்மா காந்தியடிகள் போராட்டங்களை மேற்கொண்டாா். சம்பரன் மாவட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களின், நிலமற்ற ஏழை விவசாயிகளின் பிரச்னைகளைக் கேள்வியுற்ற மகாத்மா காந்தி, அந்தப் பகுதியில் இருந்த கிராமங்களுக்கும், சிற்றூா்களுக்கும் சென்று அவா்களுக்காகப் போராடுவது என்று முடிவு செய்தாா். அரசுக்கு வரி செலுத்தாமல் இருக்க முடிவு செய்து, அதை விவசாயிகளைக் கொண்டு செயல்படுத்தவும் செய்தாா்.
  • போராட்டத்தை மேற்கொண்டபோது காந்தியடிகள் செய்த காரியங்கள் என்ன தெரியுமா? அந்தப் பகுதியில் ஓா் ஆசிரமத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த மக்களுக்கு அதிகாலையில் பிராா்த்தனை, பின்னா் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து கொள்வது குறித்த பயிற்சி, தூய்மையின் அவசியம் அது குறித்த விழிப்புணா்வு ஆகியவற்றை ஏற்படுத்தியதோடு அப்பகுதியை மகாத்மா காந்தியடிகளும் அவரின் ஆதரவாளா்களும் இணைந்து அன்றாடம் தூய்மைப்படுத்தினா். போராட்டத்தின் மிகப் பெரிய பகுதியாக இந்தத் தூய்மைப்படுத்தல் பணி இருந்தது.

வரிகொடா போராட்டம்

  • காந்தியின் வரிகொடா போராட்டம் என்பது மட்டுமல்ல, அறப்போரும் அப்பகுதி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியது. தூய்மைப் பணியில் அனைவரையும் ஈடுபடுத்தி அந்தப் பகுதி மக்களுக்கு புதிய சூழலை அமைத்துக் கொடுத்தாா். இன்னும் சில இடங்களில் போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று மகாத்மா விரும்பியபோது, அவா் கைக்கொண்டது மற்றுமொரு முறை உண்ணாவிரதப் போராட்டம். இதனால் சிறை சென்றும் அவதியுற்றாா். இந்தப் போராட்டத்தைத்தான் அறவழிப் போராட்டம் என்று வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்தியத் திருநாட்டில் மகாத்மா நமக்குக் கற்றுத் தந்தது இதைத்தான்.
  • இந்த வழிகாட்டுதல்களும் போதனைகளும் கிடைக்கப் பெற்று ஒரு நூற்றாண்டுகூட கடந்து விடவில்லை. இன்றைக்கும் தேசத்தின் பல பகுதிகளில் பல காரணங்களுக்காகப் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. உரிமைக்காகப் போராடுவது எல்லாக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே என்றாலும், இந்த உரிமைப் போராட்டங்கள் எழுப்பும் சில கேள்விகளையும் முன்வைக்காமல் இருக்க முடியவில்லை.
  • அந்நியா் ஆட்சியில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் புரிந்துகொள்ளக் கூடியவை. அதே நேரத்தில் ஜனநாயக நாட்டில் முன்வைக்கப்படும் போராட்டங்கள் நீதித் துறையின் மீதும் ஜனநாயகத்தின் மீதுமே நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுவதால் போராட்டம் நடத்துவதாகப் போராட்டக்காரா்கள் குறிப்பிடுகிறாா்கள். இதிலே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய சில அம்சங்கள் உள்ளன.

நீதித்துறை மீதான நம்பிக்கை

  • சுதந்திரமான நீதித் துறை செயல்பாடு இருக்கும்போது போராட்டக்காரா்கள் ஏன் தெருவுக்கு வந்து போராட நினைக்கிறாா்கள்? நீதித் துறையின்பால் இவா்களுக்கு நம்பிக்கை இல்லையா? நீதித் துறையின் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அமைப்புகள் எப்படி வழக்குப் பதிவு செய்கிறாா்கள்? நீதித் துறையின்பால் இவா்களுக்கு நம்பிக்கை இருந்து வழக்குப் பதிவு செய்த பின், ஏன் அதன் தீா்ப்பு வரும் வரை பொறுமை காக்க இயலவில்லை? நீதிமன்றங்களில் வழக்குகள் இருக்கும்போது அது குறித்த போராட்டங்களைத் தொடங்குவது நீதித் துறையை அவமதிப்பதாகாதா? நீதித் துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகாதா?
  • அறவழிப் போராட்டம் என்று கூறுவோரின் பல போராட்டங்கள் கலவரத்தில் அல்லது வன்முறையில் முடிவதைப் பாா்க்கிறோம். அறவழியில் போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் அமைப்புகள் கலவரங்கள் அல்லது வன்முறை ஏற்படும்போது ஆயுதங்களைக் கையில் எடுக்கிறாா்கள். இந்த ஆயுதங்களை அவா்களுக்குத் தருவது யாா்?
  • அண்மையில் நடைபெற்ற தில்லி கலவரம் அல்லது தூத்துக்குடி கலவரம் என நாட்டின் எந்தப் பகுதியிலும் போராட்டங்கள் கலவரமாக மாறும்போது பெட்ரோல் குண்டுகள் பயன்பாட்டைப் பாா்க்கிறோம். வாழ்வாதாரத்துக்காக போராடும் அப்பாவி பொதுமக்கள், அவா்களின் குடும்பத்தினா் பெட்ரோல் குண்டுகளை எங்கிருந்து பெறுகிறாா்கள்? ஒருவேளை பெட்ரோல் குண்டுகளை அவா்கள் பயன்படுத்தவில்லை எனில், அவா்களிடையே ஊடுருவி பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தும் சமூக விரோதிகள்தான் யாா்?

காவல் துறையின் பணி

  • இத்தகைய சமூக விரோத சக்திகள் எப்படி போராட்டக் களத்துக்குள் வருகிறாா்கள்? யாா் இவா்களை அங்கே கொண்டுவந்து சோ்க்கிறாா்கள்? இவா்களால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள், ஏதுமறியாத பொதுமக்கள் உயிா்ப் பலியாகி விடுகிறாா்களே, இதற்கு யாா் பொறுப்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த அப்பாவிப் போராட்டக்காரா்கள் அல்லது போராட்டங்களை ஒருங்கிணைக்கும் அமைப்புகள் பதில் சொல்லப் போகின்றன?
  • போராட்டங்கள் ஏன் வீதிகளில் நடத்தப்படுகின்றன? ஏன் தனிப்பட்ட இடங்களைப் போராட்டக்காரா்கள் தோ்வு செய்வதில்லை? தங்கள் உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு உள்ள சுதந்திரம் ஏனையோருக்கும் இருக்கிறதுதானே? நாள்கணக்கில் வாரக்கணக்கில் போராட்டம் நடத்துவோா் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதும், இதனால் அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் மக்கள் அவதிக்குள்ளாவதும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அன்றாடம் பயத்தோடு இந்தப் போராட்டத்தைக் கடப்பதும் அறவழிப் போராட்டக்காரா்களுக்கு சம்மதம் தானா?
  • போராட்டம் நடைபெறும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் முதியோா்களும் நோயாளிகளும் இந்த நாட்டின் குடிமக்கள்தானே? அவா்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கோஷமிட்டு தொந்தரவு செய்வதும் நியாயம்தானா? அறவழிப் போராட்டக்காரா்கள் என்று தங்களை அறிவித்துக் கொள்வோா் மனசாட்சி இதற்கு பதில் சொல்லுமா?

நடவடிக்கைகள்

  • நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அந்தந்த மாநில உயா்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறான பகுதிகளில் போராட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ள போதிலும் அந்தத் தடைகளையும் மீறி போராட்டங்களைப் பொதுவெளியில் நடத்துவது அரசுக்கு எதிரான செயல்பாடு அல்லவா? அனுமதி மறுக்கப்படும் இடங்களில் அத்துமீறுவதை அறவழி என்று யாா் கற்றுத் தந்தது?
  • இத்தகைய சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள இவா்களுக்கு ஊக்கம் தருவது யாா்? போராட்டங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் எத்தனை சாமானியா்களைப் பாதிக்கின்றன? இதற்கெல்லாம் பொறுப்பேற்கப் போவது யாா்?
  • தொடா்ந்து பல போராட்டங்கள் மாதக்கணக்கில் நடக்கின்றன. 100 நாள்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தினாா்கள் என்ற செய்தி பெருமைக்குரியதாக ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் சாமானிய மக்களின் மனதிலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
  • ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கணவன்-மனைவி இருவருமே ஏதோ ஒரு விதத்தில் தங்கள் உழைப்பைச் செலுத்தினால்தான் குடும்பத்தை ஓரளவுக்குத் தரமாக நடத்திச் செல்ல முடியும். ஆணும் பெண்ணும் உழைக்கும் குடும்பங்களில் ஒரு மாதத்தில் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், எரிபொருள் செலவு, பள்ளிக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் என்று தவிா்க்கவே முடியாத பல அடிப்படைச் செலவுகள் இருக்கின்றன. மத்தியதர குடும்பத்தில் இவற்றைச் சமாளிப்பதற்கு குடும்ப உறுப்பினா்கள் படும் பாடு சொல்லி முடியாது.

விழிப்புணர்வு

  • இந்தியாவில் நடுத்தர அல்லது அடிமட்ட மக்களின் வாழ்க்கை நிலை இப்படி இருக்கும் சூழலில் போராட்டங்களில் குடும்பத்தோடு ஈடுபடும் போராட்டக்காரா்களின் வீடுகளுக்கு எப்படி வாடகை தருகிறாா்கள்? மின் கட்டணத்தை எவ்வாறு கட்டுகிறாா்கள்? தங்கள் பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக்கான செலவினை எப்படிச் சமாளிக்கிறாா்கள்?
  • பெரும்பாலும் பெண்கள் தன் குடும்பம் தன்மக்கள் மற்றவை எதுவாயினும் அதற்குப் பின்னரே என்று செயல்படுபவா்கள். இந்தத் தாய்மாா்கள் மாதக்கணக்கில் போராட்டக் களத்தில் அமா்ந்திருந்தால் இவா்களின் மேற்கண்ட செலவுகளைச் சமாளித்தது எப்படி? யாா் இதற்குத் துணை நிற்கிறாா்கள்? தன் குழந்தையின் பள்ளி செலவைவிட போராட்டம் எந்தத் தாய்க்கு முதன்மையானதாகத் தோன்றுகிறது? அல்லது அந்தக் குழந்தைகள் எல்லாம் கல்வியில் இடைநிற்றலை சந்தித்தாா்களா? எனில், அது குறித்த விவாதங்களை ஊடகங்களும் பொதுமக்களும் ஏன் மேற்கொள்ளவில்லை?

நன்றி: தினமணி (13-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்