TNPSC Thervupettagam

போராட்டங்கள் தொடர வேண்டும்

July 30 , 2023 344 days 219 0
  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு இனக்குழுக்களுக்கு இடையேயான மோதல் பெரும் வன்முறையாக மாறிக் கடந்த மூன்று மாதங்களாகப் பற்றி எரிகிறது. மனதைப் பதறவைக்கும் வன்முறை வெறியாட்டங்களுக்குப் பெண்கள் இரையாகிவருகின்றனர். மே 4ஆம் தேதி குகி பழங்குடிப் பெண்கள் இருவரை மெய்தேய் இனத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற காட்சி சமூக ஊடகங்களில் 70 நாள்களுக்குப் பிறகு வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உலக அரங்கில் நம் நாட்டையே தலைகுனிய வைத்துள்ளது.
  • அதே நாளில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கார் சுத்தம் செய்யும் கடை யொன்றில் பணியாற்றிய குகி இனத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாகப் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், பெண்கள் இயக்கங்கள், வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளிட்டவை தன்னிச்சையான போராட்டங்களை முன்னெடுத்தன.
  • பல்வேறு இடங்களில் போரட்டங்கள் தொடர்ந்துவருகின்றன. இப்போரட்டங்கள் மூலம் இவ்வமைப்புகள் பாதிக்கப்பட்டவர் சார்பாக நாங்கள் நிற்கிறோம் என்பதை அறிவிக்கின்றன. மேலும் நடந்த வன்கொடுமை நிகழ்வுகளைக் கண்டிப்பது, நியாயம் கோருவது, அரசின் செயலற்ற நிலையைக் கேள்வி கேட்பது, அதன் நடவடிக்கைகளைத் துரிதமாக்குவது போன்ற பல்வேறு நோக்கங்களும் இப்போராட்டங்களுக்கு உண்டு.
  • ஆனால், இது போன்ற போராட்டங்கள் ஒரு நாளோடு முடிந்துபோவதால் அவற்றால் பெரும் பயன் எதுவும் இல்லை என்பதே உண்மை. அன்றாட வாழ்வில் நாம் எதிர் கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இது போன்ற நிகழ்வுகளை எளிதில் மறந்து போகக்கூடும். தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் நம் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டேயிருப்பதும், நியாயம் கிடைக்கும் வரை போராடுவதும் அவசியமாகிறது.

நாடு தழுவிய போராட்டம்

  • 2012, டிசம்பர் 12ஆம் தேதி ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் இளம் மாணவி நிர்பயாவைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி மிகக் கொடூரமாகக் கொலை செய்தது. இந்நிகழ்வு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் தன்னிச்சையாகத் திரண்டு வந்து தெருக்களில் போராடினர். நிர்பயாவின் உயிரைக் காப்பாற்ற அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் பலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
  • மக்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக அன்றைய அரசு டிசம்பர் 23இல், அதாவது பத்தே நாள்களில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் மூவர் கொண்ட குழு ஒன்றை அமைத்து விசாரணையைத் தொடர்ந்தது. நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு ஒரே மாதத்தில் விசாரணையை முடித்து 2013, ஜனவரி 23இல் அறிக்கையைச் சமர்ப்பித்தது.
  • இவ்வறிக்கை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான விரிவான விசாரணை, மேம்பட்ட தண்டனைகளை வழங்குவதற்காகக் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைத்தது. அதன் பல்வேறு பரிந்துரைகளில் ஒன்று மோதல் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங் களைக் கண்காணித்து வழக்குத் தொடர சிறப்பு ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • ஆயுதம் ஏந்திய பணியாளர்கள் இது தொடர்பான உத்தரவு களைக் கடைபிடிப்பதை வலியுறுத்தும் வகையில் அவர்களுக்கான பயிற்சிகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பன அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை. ஆனால், மணிப்பூரில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்பட வில்லை என்பதை அங்கே பெண்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு வன்முறைகளில் இருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இத்தைகைய சூழலில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்வதைத் தடுக்க, குற்றம் இழைத்தோருக்குத் தண்டனையைப் பெற்றுத்தர, பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதியும் நிவாரணமும் பெற்றுத்தர பல்வேறு வழிகளில் நாம் போராட்டங்களைத் தொடர்வது அவசியமாகிறது.

தேவை தொடர் போராட்டங்கள்

  • பல்வேறு அமைப்புகள் போராடிவரும் நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுப் பதற்கு மாறாக அரசு பாதிக்கப்பட்டோர் மேல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவருகிறது. அரசின் இந்தத் திசைதிருப்பும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
  • தொடர் எதிர்ப்பினைத் தெரிவிக்க பிரதமர், உள் துறை அமைச்சர், மணிப்பூர் முதல்வர் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவது, தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, இணையம் மூலம் தொடர் பரப்புரைகளைச் செய்வது, மணிப்பூர் வன்கொடுமை குறித்த அரசின் அன்றாட நடவடிக்கைகளைச் சேகரித்துப் பொது வெளியில் அம்பலப்படுத்துவது, உண்மை அறியும் குழுக்களோடு இணைந்து ஆதாரங்களைத் திரட்டுவது, அவற்றை ஆவணப்படுத்துவது, அதை மக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவது, வன்முறைக்குப் பின்னே உள்ள அரசியல், கும்பல் வன்முறைக் கலாச்சாரத்துக்குப் பின்னே உள்ள உளவியல் குறித்து அந்தந்த அமைப்புகளில் விவாதங்களை நடத்துவது போன்ற செயல்களில் நாம் ஈடுபட வேண்டும்.
  • ‘தனிப்பட்ட முறையில் கும்பல் வன்முறைகளில் ஒரு நாளும் ஈடுபட மாட்டோம், பெண்களைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஒரு நாளும் ஆளாக்கமாட்டோம்’ என்கிற உறுதியையும் நாம் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.
  • சாதிச் சண்டைகள், கலவரங்கள், நாடுகளி டையே நடக்கும் போர்கள், இன அழிப்பு போன்ற எல்லா நிகழ்வுகளிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பாரபட்சமின்றி அனைவரும் கொல்லப்படுகின்றனர். ஆனால், பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது அதுவும் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொல்வது, உடலைச் சிதைப்பது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடுகின்றனர்? ஒருவரது உடைமைகளான வீடு, நிலம் எல்லா வற்றையும் அழித்த பின்பும் தீராத வெறி, பெண்ணைச் சிதைப்பதால் அடங்குவது ஏன்?
  • காரணம், காலம் காலமாக எல்லாச் சமூகங்களும் பெண்ணின் கற்பே இனத் தூய்மையின் அடையாளம் எனக் கொண்டாடிவருகின்றன.
  • இதனால், ஓர் இனத்தின் தூய்மையை அழிக்கும் செயலாகவே வன்புணர்வுகள் நிகழ்கின்றன. மேலும், பெண் என்பவள் எப்போதுமே ஆணின் உடைமை, அதுவும் கற்புள்ள பெண், ஆணின் பெருமை. பெண்ணின் மாண்பை அவளது குடும்பம் மற்றும் இனத்தின் முன்பே சிதைப்பதன் மூலம் ஓர் ஆணின் பெருமையையும் அவன் சார்ந்த இனத்தின் பெருமையையும் ஒருசேர அழித்துவிடலாம் என ஆண்கள் பலர் நம்புகின்றனர். பழிவாங்கும் செயல்களின் உச்சம் பாலியல் வன்கொடுமை என்பதால் ஒரு தனிமனிதனை, ஒரு குழுவைப் பழிவாங்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
  • பெண்ணை உடலாக, உடைமையாகப் பார்க்கும் நிலை மாறும் வரை, பெண்ணின் கற்பே பெருமை அது உயிரினும் மேலானது என்கிற நம்பிக்கை தொடரும் வரை இத்தகைய போக்கே நீடிக்கும்.
  • வன்முறைகளுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களை நம் நாட்டின் விடுதலைக்காக முன்னெடுத்தவர்கள் நாம் என்கிற பெருமை உலக அரங்கில் நமக்கு உண்டு. ஆனால், ஒருநாள் போராட்டத்தில் நாம் சுதந்திரம் பெற்றுவிடவில்லை என்பதையும் நன்கு அறிவோம். எனவே நாம் போராட்டங்களைத் தொடர வேண்டும். இல்லையெனில் நிர்பயாவை மறந்ததுபோல் மணிப்பூரின் மகள்களையும் நாம் மறந்துபோவோம்!

நன்றி: தி இந்து (30 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்