TNPSC Thervupettagam

போர்நிறுத்தமே அஸர்பெய்ஜானுக்கும் அர்மீனியாவுக்கும் நல்லது!

October 16 , 2020 1556 days 595 0
  • அர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் அஸர்பெய்ஜான் ராணுவத்துக்கும் இடையே கடுமையான சண்டை நடந்துவருகிறது.
  • அஸர்பெய்ஜானுக்குள்ளேயே தன்னை குடியரசுப் பகுதியாக அறிவித்துக்கொண்ட நகோர்னோ-காரபாக் பகுதியில் நடந்துவரும் இந்தச் சண்டை, உள்நாட்டுப் போர் அளவில் பெரியதாக ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது.
  • பல நாட்கள் தொடர்ந்து நடந்த சண்டைக்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில் அர்மீனியாவும் அஸர்பெய்ஜானும் போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன.
  • அதனை அடுத்து ஒருவருக்கொருவர் மாறி மாறிக் குற்றம் சாட்டிக்கொண்டிருந்ததால் போர்நிறுத்தம் முடிவுக்குவந்தது. துருக்கியின் ஆதரவுபெற்ற அஸர்பெய்ஜான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றே தெரிகிறது. நகோர்னோ-காரபாக் தொடர்பான பிரச்சினையானது பல தசாப்தங்களாக நீடிக்கிறது.
  • இப்பகுதியில் பெரிதும் பூர்வகுடி அர்மீனியர்களே வசிக்கிறார்கள். 1988-ல் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரம் வலுவிழந்துகொண்டிருந்தபோது நகோர்னோ-காரபாக்கின் பிராந்திய சட்டமன்றம் அர்மீனியாவுடன் சேர்ந்துகொள்வதாக வாக்களித்தது; இதனால் இனக்குழுக்களிடையே மோதல்கள் ஏற்பட்டன. 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பிறகு இந்தப் பிரதேசத்துக்காக அர்மீனியாவும் அஸர்பெய்ஜானும் போரில் ஈடுபட்டன. அது முதல் அந்த எல்லைப் பகுதி பதற்றம் நிரம்பியதாகவே இருக்கிறது.
  • இந்த மோதல்களை முன்பைவிட ஆபத்தானவையாக ஆக்குவது எதுவென்றால், வெளியிலிருந்து வரும் தலையீடுதான். இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு அர்மீனியா அச்சுறுத்தலாக இருக்கிறது என்று துருக்கி கூறுகிறது; அஸர்பெய்ஜானியர்களும் துருக்கியர்களும் இனரீதியிலும் மொழிரீதியிலும் உறவைக் கொண்டிருக்கின்றனர்.
  • சோவியத் காலகட்டத்துக்கு முந்தைய அஸர்பெய்ஜானானது ஒட்டமன் பேரரசின் கூட்டாளியாக இருந்தது. துருக்கி தற்போதைய அதிபர் தய்யிப் எர்டகனின் தலைமையில் முந்தைய ஒட்டமன் பிரதேசங்களுக்குத் தனது புவியரசியல் செல்வாக்கை நீட்டிக்க விரும்புகிறது.
  • ஏற்கெனவே அர்மீனியாவுடன் மோசமான உறவைக் கொண்டிருக்கிறது துருக்கி. ஆனால், அதற்கு எது பிரச்சினை என்றால், ரஷ்யா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பில் (சி.எஸ்.டி.ஓ.) அர்மீனியாவும் ஒரு உறுப்பினராக இருப்பதுதான். பொருளாதாரரீதியிலும் ராணுவரீதியிலும் அர்மீனியாவுடனும் அஸர்பெய்ஜானுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணிவருகிறது.
  • பிரச்சினை பெரிதாக ஆனால் சி.எஸ்.டி.ஓ. உடன்படிக்கையைப் பயன்படுத்திக்கொள்வதுடன் ரஷ்யாவின் உதவியையும் நாடும். அர்மீனியாவுக்கு ரஷ்யா உதவத் தயாரானால் அது நேட்டோ உறுப்பினராக இருக்கும் துருக்கிக்கு எதிராக ரஷ்யாவை நிறுத்தும். சிரியா, உக்ரைன், லிபியா என்று பல இடங்களில் நடக்கும் போர்களில் ரஷ்யா தலையை நுழைத்திருப்பதால் இந்த விவகாரத்தில் அது ஒதுங்கியிருக்க நினைக்கலாம்.
  • அதனால்தான் அது நடுநிலைமை வகிப்பதுடன் போர்நிறுத்தத்துக்காக மாஸ்கோவில் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது.
  • ஆனால், போர் தீவிரமடைந்தால் ரஷ்யா ஏதாவது ஒரு தரப்பை ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த நிலைமை மேலும் மோசமானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இரண்டு தரப்புகளுமே மோதல் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  • நகோர்னோ-காரபாக் பகுதியில் கடந்த காலத்தில் இனக்குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்கள் நடந்த வரலாறு இருக்கிறது. நிலைமையைப் பிராந்தியப் போரை நோக்கித் தள்ளிவிடாமல் அஸர்பெய்ஜானும் அர்மீனியாவும் நகோர்னோ-காரபாக் தரப்பும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

நன்றி: தி இந்து (16-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்