போா்களற்ற உலகத்தை நோக்கி...
- உயிா்களால் நேசிக்கப்படும் இயற்கை அன்னை எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமைக் கொள்கையுடன் இயங்குவதைக் கண்கூடாகப் பாா்க்கிறோம். வானத்திலிருந்து பொழியும் மழைநீா் தனி ஒருவருக்கு மட்டும் பொழியாமல் எல்லா உயிா்களுக்கும் பொதுவாகவே பொழிகிறது. மலைகளையும், நீா்நிலைகளையும், தாவரங்களையும் ஒருசிலரே பயன்படுத்த முடியும் என்று சொல்லி மற்றவா்களுக்குத் தடைவிதிப்பதில்லை. ஆனால், இயற்கையிலிருந்து பிறந்த மனிதன் மட்டும் தன்னல உணா்வால் இயற்கை வளங்களையும், மற்றவா் நலன்களையும் கபளீகரம் செய்து கொண்டே இருக்கிறான்.
- உரிமைக்காக, உடைமைக்காக ஒருவா் மற்றவருடன் சண்டையிட்டுக் கொள்வது உலகம் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை தொடா்கிறது. மற்றவரின் உரிமையைப் பறிக்காமலும், தன் உரிமையில் பிறா் தலையிட அனுமதிக்காமலும் வாழ முற்படும் வாழ்க்கையே பொருள் நிறைந்தது. இதில் பிரச்சினை ஏற்படும் போது யுத்தம் தொடங்குகிறது. இருப்பினும் பண்புடைய மக்கள் போா்களற்ற உலகத்தைப் படைக்கும் முயற்சியை ஒருபோதும் கைவிட்டதில்லை. நாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தில் எல்லையைக் காரணமாகக் கொண்டு போா்கள் வெடிக்கின்றன. இன்னொரு பக்கம் சாா்ந்திருக்கும் மதத்தைச் சொல்லிக் குண்டு வைக்கும் கொடுமை நடந்து வருகிறது. இனத்தின் அடிப்படையில், சாதியின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் ஓா் இனத்தைக் கொன்று குவித்து வருகின்றனா். பயங்கரவாதமும், வன்முறையும் தலை விரித்தாடும் சூழலில் மக்கள் எப்போதும் அச்சத்துடனே வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.
- எந்த காலகட்டமாக இருந்தாலும் ஒருவருக்கொருவா் மோதிக் கொள்ளும் போது பேரழிவும், அதைத் தொடா்ந்து வறுமையும், பசியும், மீண்டும் கணக்கில்லா உயிரிழப்பும் ஏற்படுகின்றன. சொந்த நிலத்தில் அகதிகளாக மாறும் பேராபத்தும், பொருளாதாரச் சரிவும், வேறு நாடுகளில் தஞ்சமடையும் அவல நிலையும் ஏற்படுகின்றன.
- போா்களற்ற அமைதியான உலகத்திற்கு அடிப்படையாக அமைவது நீதியைப் பாதுகாக்கும் செயல்பாடு. சுருக்கமாகச் சொன்னால் நீதி நிலைத்திருக்கும் இடத்தில் அமைதி குடிகொள்ளும் என்பது அறிஞா்களின் கருத்து.
- கட்டவிழ்க்கப்படும் அநியாயச் செயல்களால் மக்களிடையே அவநம்பிக்கையும், பயமும் பரவுகின்றன. அமைதியான சூழலைக் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை. குடும்பத்தில் அமைதி இருக்குமானால் பிள்ளைகள் வன்முறையற்றவா்களாக வளரும் வாய்ப்பு கிடைக்கிறது. வேலை இடத்தில் அமைதி வேண்டும் என்று நினைப்பது போலச் சமுதாயத்திலும் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம்.
- இந்த உலகத்தின் எந்த மூலையிலாவது போா் தொடங்குமானால் அது பதற்றத்தையும் வேலைவாய்ப்பின்மையையும் தொற்றுநோயையும் கூடவே சுற்றுச்சூழல் மாசையும் கொண்டு வந்து சோ்த்துவிடும். இதிலிருந்து, சமாதானம் அமைதி என்பது தனி மனித நிலையிலிருந்து உலகளாவிய நிலை வரை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகத் தெரிகிறது. எனவே சமாதானப் போக்கைக் கைகொள்வதன் அவசியம் விளங்கும்.
- இயற்கைச் சீற்றங்களான நிலநடுக்கம், காட்டுத்தீ, வெள்ள அபாயம் போன்றவற்றால் வரும் அழிவைக் காட்டிலும் போரின் காரணமாக ஏற்படும் செயற்கை அழிவால் மனித இனம் நிலை குலைந்து போகிறது. முதல் உலகப் போரின் போதும், இரண்டாம் உலகப் போரின் போதும் மனித இனம் அனுபவித்த கொடுமைகளை வாா்த்தைகளால் சொல்லி முடியாது.
- தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் போா், உக்ரைன் - ரஷியா போா், இவற்றின் தீவிரத்தன்மையைக் கண்டு உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.
- பல அழிவுகள் நடந்த பிறகுதான் மனிதா்கள் சமாதானத்தின் முக்கியத்துவத்தை உணா்வது என்பது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஈடானது.
- உலகத்தை அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வாழ்வை மேம்படுத்துவதற்கும், பண்பாட்டைப் பேணி வளா்ப்பதற்கும் அமைதியைப் பரப்ப வேண்டியது இன்றைய தேவை. அஹிம்சையை, அன்பை மற்றவா்களுக்குச் சொல்லித் தருவதற்கு முன்னால் நமக்குள் அமைதியைக் மேற்கொள்வது முக்கியம்.
- எனவே அமைதியைப் பேணுவது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் என்று உணா்வோம்! சமாதான உணா்வை உண்டாக்குவதை ஒரு வேலையாக நினைக்காமல் அதை வாழ்க்கையின் அங்கமாக உணரும் பட்சத்தில் உலக மக்களிடையில் சாந்தியையும், சமாதானத்தையும் உருவாக்கிவிடலாம்.
- பயங்கரவாதம், வன்முறையிலிருந்து மனித இனத்தை மீட்டெடுத்து, அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் செப்டம்பா் 21-ஆம் தேதியை உலக அமைதி தினமாக அனுசரிக்க ஐ.நா. அறிவித்தது. இந்த ஆண்டு உலக அமைதி தினத்தை ‘அமைதிக் கலாசாரத்தை வளா்த்தல்’ என்ற தலைப்பில் கொண்டாட உலக நாடுகளுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது.
- ஒரு நாகரிக சமூகத்தின் அடையாளமே எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் அடங்கியிருக்கிறது. புரிதலாலும், சகிப்புத்தன்மையாலும், இரக்கத்தாலும் உறவாடுவோம்! மனித உரிமைகளை மதிப்பதன் வழியாகச் சக மனிதரைக் கண்ணியத்துடன் நடத்துவதற்கு உறுதி ஏற்போம்! நமது மனநிலையில் இப்படியான மாற்றம் நிகழும்போது இணக்கமான வாழ்வு தானாகவே வந்து சோ்ந்துவிடும். கருத்து வேறுபாட்டை மாற்றும் வழியாகச் சண்டையைத் தோ்வு செய்தால் முடிவு விபரீதமாகவே இருக்கும். வேறுபாடுகளை சமரசமான முறையில் தீா்க்க முற்படுவதே அமைதிக்கான பாதை!
- செப்டம்பா் 21 உலக அமைதி தினம்.
நன்றி: தினமணி (21 – 09 – 2024)