TNPSC Thervupettagam

மகளிர் விடுதிகள்: தேவை கண்காணிப்பு

June 14 , 2019 2038 days 990 0
  • சென்னை நகரில் நூற்றுக்கணக்கான  மகளிர் தங்கும் விடுதிகள் இயங்கிவருகின்றன.  அவற்றுள் சுமார் 227 உரிய அனுமதி பெறாமல் இயங்குவதாகவும், அவற்றுக்கான மின்சாரம் மற்றும் குடிதண்ணீர் இணைப்புகள் விரைவில் துண்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. மேலும், புகாருக்குள்ளான ஏழு மகளிர் விடுதிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்ற போதிலும், இது ஒரு காலம் தாழ்ந்த செயல்பாடு என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும்.  வெளிமாவட்டங்களிலிருந்து வந்து சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான இளம் பெண்கள் விடுதிகளில் தங்கும் நிலை உள்ளது; இதே போன்று பொறியியல் படிப்பு உள்பட கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவிகள், கல்லூரிகளின் விடுதியில் அறை கிடைக்காத நிலையில் இத்தகைய தங்கும் விடுதிகளையே நம்பியிருக்கும் நிலை  உள்ளது.
பிரச்னைகள்
  • இடநெருக்கடி, சுகாதாரமற்ற சூழல், தரமற்ற சாப்பாடு, தண்ணீர் வசதியின்மை போன்ற பல பிரச்னைகள் இருப்பினும் தத்தமது குடும்ப நலன் கருதி இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டுதான் இளம் பெண்கள் அனைவரும் இவற்றில் தங்குகின்றனர். இதேபோன்று எந்தவித வசதிகளுமற்ற விடுதிகளிலும், மேன்ஷன்களிலும் நெருக்கடி மிகுந்த அறைகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்கள் காலம் காலமாகத் தங்கிவருகின்றனர் என்பதும் உண்மைதான்.
  • ஆனால், விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்களின் பிரச்னைகள் பிரத்யேகமானவை. இந்தப் பெண்களது பாதுகாப்பைப் பற்றி, வெளியூர்களிலிருக்கும் அவர்களது குடும்பத்தினர்கள் எவ்வளவு கவலைப்படுகின்றார்களோ, அதே அளவு கவலையையும் அக்கறையையும் இந்த விடுதிகளை நடத்துபவர்களும் கொண்டிருக்க வேண்டும்.
  • துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மகளிர் விடுதிகள் பணம் சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையைத் தங்களை நம்பித் தங்கி இருக்கின்ற மகளிரின் பாதுகாப்பில் காட்டுவதில்லை.
சென்னை
  • சென்னையில் உள்ள பல மகளிர் தங்கும் விடுதிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, ஒரு நாளிதழில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது. அப்போது முதலே உரிய அரசுத் துறையினர் ஆய்வுகளை நடத்தியிருந்தால் பல முறைகேடுகளை இந்நேரம் களைந்திருக்க முடியும். ஆனால், கடந்த டிசம்பரில் சென்னையில் உள்ள  ஒரு மகளிர் விடுதியில் ரகசிய கேமராவைப் பொருத்தி அதன் உரிமையாளரே அத்துமீறியதாகப் புகார் கிளம்பிய பிறகுதான் நடவடிக்கைகள் வேகம் பெற்றன. மேலும், இன்னொரு மகளிர் விடுதியை நடத்திய பெண், அந்த விடுதியில் தங்கியிருந்த பெண்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் ஒரு செய்தி பரவியதில் விஷயம் விறுவிறுப்படையத் தொடங்கியது.
  • பரவலான ஆய்வுகளை நடத்தியதில் பெரும்பாலான மகளிர் விடுதிகள் உரிய துறைகளின் அனுமதிகள் மற்றும் விடுதி நடத்துவதற்கான உரிமம் (லைசென்ஸ்) ஆகியவற்றைப் பெறாமலேயே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதி உரிமையாளர்கள் உரிமம் கோரி விண்ணப்பிக்கத் தொடங்கினர்.
நடவடிக்கைகள்
  • இத்தனைக்குப் பிறகும், மேற்கண்ட 227 விடுதிகள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வருவதாகக் கணக்கிடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் அந்த விடுதிகளின் மீதான நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இனியாவது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், விடுதி உரிமையாளர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை காரணமாக, அந்த விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.
  • ஏனெனில், அந்தப் பெண்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் அல்லது படிக்கும் கல்லூரி ஆகியவற்றின் அருகில் உள்ள விடுதிகளில் தங்குவதைத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கும் உகந்ததாகும். பணி அல்லது படிப்பு முடிந்ததும் எவ்வளவு விரைவில் விடுதிக்குத் திரும்ப முடியுமோ அவ்வளவு விரைவில் திரும்பிவர முயற்சிப்பார்கள்.
  • அனுமதியில்லாத மேற்படி மகளிர் விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்கள் அனைவருக்கும் அருகில் உள்ள வேறு சில மகளிர் விடுதிகள் இடம் கொடுக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், பேராசை மிகுந்த விடுதி உரிமையாளர்களை தண்டிக்கப்போய் அது அப்பாவி மகளிரைக் கஷ்டப்படுத்துவதாக முடிந்துவிடக் கூடாது.
  • கூடிய மட்டும், அந்தந்த விடுதி உரிமையாளர்களே விரைவில் உரிமம் பெற்று முறையாக அந்த விடுதிகளைத் தொடர்ந்து நடத்துமாறு அறிவுறுத்த வேண்டும். அது மட்டுமின்றி, சென்னை நகரில் மகளிர் விடுதிகள் இயங்கும் பகுதிகளில், குறிப்பாக இரவு நேரங்களில் கூடுதலாகக் காவல் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
மற்ற பகுதிகளில் 
  • மேலும், மாநிலத் தலைநகரமானசென்னை மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள மாவட்டத் தலைநகரங்கள் உள்ளிட்ட பல ஊர்களிலும் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் உரிய கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதுடன், அவற்றில் தங்குகின்ற பெண்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களிலாவது, பெண்கள் பாதிக்கப்பட்டதாக புகார் வந்த பிறகே நடவடிக்கை எடுப்பது என்ற நிலைமை மாறி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மகளிர் விடுதிகளிலும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு, அவை அனைத்தையும் உரிய அரசுத் துறைகளின் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது மிக மிக அவசியம்.

நன்றி: தினமணி (14-06-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்