TNPSC Thervupettagam
September 24 , 2023 418 days 289 0
  • உலகக் கவி என்றதும் ஷேக்ஸ்பியரில் தொடங்கி நினைவுக்கு வரும் பெயர்கள் பலவாக இருக்கலாம். ஆனால், நவ காலத்தில் ஷேக்ஸ்பியர்போல் உலக மொழிகளில் வாசிக்கப்பட்ட ஒரு மாபெரும் கவி, பாப்லோ நெரூதாவாகத்தான் இருக்க முடியும். தினப்பாட்டை, மிமிக்கிரியை, நகைச்சுவைத் துணுக்குகளை எழுதும் துண்டுக் கவிகளுக்கு இடையில் அவர் ஒரு மகாகவி. காதலையும் புரட்சியையும் கவிதையாகத் தொழிற்படச் செய்வது ஒரு பெரும் தொழில்நுட்பம். அது எல்லாக் காலகட்டத்திலும் மகாகவிகளால் மட்டுமே சாத்தியப்பட்டது. நெரூதா, அதில் விசேஷமானவர்.

கவிதையைக் காப்பாற்ற

  • லத்தீன் அமெரிக்க நாடான சீலேயில் பிறந்தவர் நெரூதா. எளிய விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர். ‘கவிதை எழுதி வீணாய்ப் போய்விடுவானோ’ என நெரூதாவின் தந்தை, தன் மகனின் முதல் கவிதையைப் பார்த்துப் பயந்து, அவரிடம் அவநம்பிக்கையை விதைத்துள்ளார். தன் தந்தையிடமிருந்து தன் கவிதையைக் காப்பாற்ற ரெயஸ் பசால்டோ என்கிற தன் பெயருக்கு மாற்றாக, பாப்லோ நெரூதா என்கிற புனைபெயரைத் தேர்ந்து கொண்டார் நெரூதா.
  • கவிதை இயலில் விவாதிக்கப்படும் விஷயமாக நான் கருதுவது, கவிதை எழுதுவதற்கும் கவிஞனாக இருப்பதற்கும் உள்ள வேறுபாடு. டி.எஸ்.எலியட் இந்த விவாதத்தை ஆராய்ந்துள்ளார். ஒரு கவிதைக்குள் கவிஞனுக்கான இடம் என்ன, அப்படி ஒரு இடத்தை அவன் தரத்தான் வேண்டுமா என்கிற பல கேள்விகள் எழும். கவிதைகள் எழுதுவது மிக எளிய காரியம்போல் தோன்றும் சிரமமான காரியம். பலரும் கருதுவதுபோல் அது ஒரு மேசைப் பணியும் கூடத் தான். ஆனால், கவிஞனாக இருப்பது முற்றிலும் வேறானது; வேதனையும் ஆனந்தமும் மிக்கது. நெரூதாவை இந்த விதத்தில் முழுமையான கவிஞன் எனலாம்.
  • நெரூதாவின் கவிதைகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் நெருக்கம்கொண்டவை. சீலேயின் தூதுவராகப் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தபோதும், அவர் கவிஞனாகவே இருந்திருக்கிறார் என்பதை அவரது அக்காலகட்டத்தின் குறிப்புகள் வழி அறிந்து கொள்ள முடிகிறது.

காதல் கவிதைகள்

  • நெரூதாவின் காதல் கவிதைகள் 1924 வாக்கில் வெளிவந்து கவனம்பெற்றன. காதல் உணர்வை, அது தரும் வேதனையை நெரூதாவின் கவிதைகள் அதே வெம்மையுடன் சித்தரித்துள்ளன. பழைய காவியங்களின் தன்மைகொண்டவையாக இருந்தாலும் நெரூதாவின் வரிகள் பிடிக்கும் அபிநயம், இந்தக் காலத்துக்கும் பொருந்தக் கூடியவை. ‘என்னைக் கொன்று விடுவாயோ என்று அஞ்சி/தென்னை மரத்தடியில் புதைத்துவைத்த கத்தியை /ஈரமணலடியிலேயே, செவிட்டு வேர்களுக்கிடையில்/பின்னர் நீ கண்டுபிடிப்பாய்’ (மொழி பெயர்ப்பு: ஆ.இரா.வேங்கடாசலபதி) என்கிற இந்த வரி, கிட்டதட்ட ஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பின்னும் அதே புதுமையுடன் இந்தக் கவிதைக்குள் இருப்பது அந்தத் தன்மைக்கு ஒரு பதம்.
  • காதலி, விட்டுச் சென்றுவிட்டாள். அவள் இனித் திரும்ப வரப்போவதில்லை. இது யதார்த்தம். இதைக் காலம் கடந்துதான் நாம் உணர்வோம். ஆனால், காதலுக்குள் இருக்கும் நம் சஞ்சலமுள்ள மனம் அதை ஒப்புக்கொள்ளாது. மேற்கண்ட இந்தக் கவிதையில் கொலை செய்யக் கூடியவளாக அந்தக் காதலி விட்டுவிட்டுப் போய்விட்டாள். ஆனால், ‘உன்னை மீண்டும் பெறுவதற்காக என் ஆன்மாவின் உள்ள எவ்வளவு நிழலையும்/நான் தருவேன்’ என்றும் ‘என் நெற்றியின்… குருதிப் புறாவையும்/எத்தனை முறை வேண்டுமானாலும் தருவேனே’ என்றும் புலம்பிப் பாடுகிறான் கவிஞன்.
  • ஆண்-பெண் உறவுகளுக்கு இடையிலான உறவுச் சிக்கல்கள் கையாளப்பட்ட விதத்தில் நெரூதாவின் கவிதைகள் மேதமை கொண்டவை. காதல்களால் நிறைந்த அவரது வாழ்க்கையைப் போல், அவரது கவிதைகளில் பேதமைக்கும் இடம் உண்டு. ஜலா நேக்ராவில் வாழ்ந்த கடைசிக் காலத்திலும் மடில்டாவின் காதலில் மூழ்கித் திளைத்துள்ளார் என்பதற்கு இன்று கண்காட்சியகமாகிவிட்ட அந்த வீட்டின் ஒவ்வோர் அறையும் கலைப் பொருள்களும் ஆதாரங்கள்.

அரசியல் கவிதைகள்

  • நெரூதாவின் வாழ்க்கை முறை அவரது இடதுசாரிச் சித்தாந்தத்துடன் இணைத்துப் பார்த்து இன்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், தன் கவிதைகளில் காதலைப் போல் அரசியலுக்கும் உண்மையுடன் அவர் இடம் அளித்தார். ஸ்பெயின் புரட்சியை ஒட்டி அவர் எழுதிய கவிதை அதற்குச் சாட்சி: ‘ஸ்பெயினின் ஒவ்வொரு குழுவிலிருந்து/ஸ்பெயினும்/மாய்ந்த குழந்தை ஒவ்வொன்றிலிருந்தும்/துப்பாக்கியும் எழுகின்றன’. ஆங்கிலேயர்களைப் பிடிக்காது என வெளிப்படையாகக் கவிதையில் அவர் எழுதியுள்ளார். முதலாளித்துவத்துக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றும் எழுதினார் நெரூதா.
  • சீலேயில் அமெரிக்கத் தலையீட்டிற்கு எதிராக எழுதினார். கலகத்தால் சீலேயின் அதிபரும் நெரூதாவின் நண்பருமான சால்வதோர் அயந்தே கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்து கொண்ட சில நாள்களில் நெரூதாவும் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப் பட்டது. ஆனால், அவர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது. நெரூதாவின் இறப்பின் மர்மமும் அவரது கவிதையைப் போல் ஒரு காவியத்தன்மையுடன் இன்றும் இருக்கிறது.
  • செப். 23: பாப்லோ நெரூதா 50ஆவது நினைவு நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்