எல்லைப் பிரச்சினை ஏன் ஏற்பட்டது?
- கர்நாடகம், மகாராஷ்டிரம் என்ற மாநிலங்கள் உருவாவதற்கு முன்னால் மைசூரு மாகாணத்தின் (இப்போதுள்ள கர்நாடகத்தின்) ஒரு பகுதி மதறாஸ் மாகாணத்துடனும், ஒரு பகுதி பம்பாய் மாகாணத்துடனும் இருந்தன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த பிறகு பெரும்பாலான மக்கள் பேசும் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்படிப் பிரிக்கப்பட்டபோது பக்கத்து மாநிலத்தின் மொழியைப் பேசுவார் கணிசமான எண்ணிக்கையில் ஆங்காங்கே குடியிருந்தனர். இந்த நிலைமை அனைத்து மாநிலங்களிலும் உண்டு என்றாலும் கர்நாடகம், மகாராஷ்டிரம் இடையில் இது பெரிய அளவில் இருக்கிறது.
- மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கும் மறுசீரமைப்புச் சட்டம் 1956இன்படி கர்நாடகமும் மகாராஷ்டிரமும் 1960 மே 1 அன்று பிரிக்கப்பட்டன. அது முதற்கொண்டு பெல்காம், கார்வார், நிப்பானி ஆகியவற்றுடன் மராத்தி பேசுவோர் அதிகம் வாழும் 865 எல்லையோர கிராமங்களும் தங்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரம் வலியுறுத்திவருகிறது. ஆனால், கர்நாடகம் அந்தக் கிராமங்களைத் தர மறுக்கிறது.
மகாஜன் ஆணையம்
- இதையடுத்து ஒன்றிய அரசு, மகாராஷ்டிரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து பரிந்துரைக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த மெஹர்சந்த் மகாஜன் தலைமையில் ஆணையம் ஒன்றை 1966 அக்டோபர் 25இல் நியமித்தது. பெலகாவி (பெல்காம்) மீது மகாராஷ்டிரம் உரிமை கோர முடியாது என்று கூறிய மகாஜன் ஆணையம், 247 கிராமங்கள் – குடியிருப்புகளைக் கர்நாடகத்துடன் சேர்க்கலாம் என்று பரிந்துரைத்தது. அதில் ஜாட், அக்கல்கோட், சோலாபூர் ஆகியவையும் அடக்கம். நிப்பானி, கானாபூர், நந்தகாட் உள்பட 264 கிராமங்களையும் – குடியிருப்புகளையும் மகாராஷ்டிரத்துடன் சேர்க்கலாம் என்றது.
- இந்தப் பரிந்துரைகளை ஏற்கவே முடியாது என்று மகாராஷ்டிரம் நிராகரித்துவிட்டது.
- தங்களுடைய கோரிக்கைகளை ஆணையம் சரியாகப் பரிசீலிக்கவில்லை என்று மகாராஷ்டிரம் கருதுகிறது. அடுத்தடுத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சிக்கு வந்தவர்களும் மகாஜன் ஆணையப் பரிந்துரையை நிராகரிக்கின்றனர். ஆனால், கர்நாடகமோ மகாஜன் அறிக்கை தங்களுக்கு சாதகமாகவே இருப்பதாகக் கருதுகிறது.
- அதற்குப் பிறகு இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவை தோற்றன. 2004இல் மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. கர்நாடகத்தில் இருக்கும், மராட்டி மொழி பேசுவோர் வாழும் கிராமங்களைத் தங்களுடன் இணைக்க வேண்டும் என்று மனுவில் கோரியது. கர்நாடகம் அந்தக் கோரிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்தது. உள்ளூர் மக்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொண்ட கர்நாடக அரசு, பெல்காம் என்ற மராட்டியப் பெயரை, ‘பெலகாவி’ என்று கன்னடத்துக்கு மாற்றிவிட்டது. அத்துடன் அதை மாநிலத்தின் இரண்டாவது தலைநகரம் என்றும் அறிவித்தது.
இப்போது என்ன நிலை?
- இந்த மோதல்கள் மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பு காலத்திலிருந்து தொடர்கதையாகவே இருக்கின்றன.
- இதில் மாநிலக் கட்சிகள் மட்டுமல்ல; தேசியக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபடுகின்றன. மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதாக காட்டிக்கொள்ள, இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுமே குறுகிய அரசியல் நோக்கில்தான் செயல்படுகின்றன.
- இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது எளிதல்ல, நிலைமை சிக்கலாகிவிட்டது, எனவே சட்டப்படியான தீர்வுதான் காண வேண்டும் என்று மகாராஷ்டிரம், கர்நாடகம் இரண்டுமே கருதுகின்றன. இந்த எல்லைப் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திடம் 2004 முதல் விசாரணைக்காக காத்திருக்கிறது. இரு மாநிலங்களுமே தங்களுடைய நிலையிலிருந்து இறங்கிவர விரும்பவில்லை. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசுகளும் வேடிக்கை பார்க்கின்றன; இதில் தலையிட்டால் மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் அரசியல் ஆதரவு குறைந்துவிடும் என்பதால் தீர்வு காணத் தீவிரம் காட்டாமல் ஒதுங்குகின்றன.
- ஒன்றிய அரசு 2010இல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மைசூரு மாநிலத்துக்கு (இப்போது கர்நாடகம்) சில பிரதேசங்களை அளித்தது தவறோ, தன்னிச்சையானதோ அல்ல என்று தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கான எல்லைகளைத் தீர்மானிக்கும்போது மாநில மறுசீரமைப்பு மசோதா- 1956, பம்பாய் மறுசீரமைப்பு மசோதா - 1960 ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் நாடாளுமன்றமும் ஒன்றிய அரசும் வெகு கவனமாக பரிசீலித்த பிறகே முடிவுசெய்தன என்றும் அந்த மனுவில் தெளிவுபடுத்தி இருக்கிறது.
அரசியல்ரீதியிலான விளைவுகள் என்ன?
- தேர்தல் வரும்போதெல்லாம் மகாராஷ்டிர, கர்நாடக அரசியலர்கள் உள்ளூர் மக்களுடைய வாக்குகளைப் பெறவும், அவர்களுடைய மாநில உணர்வைத் தூண்டவும் இந்த எல்லைப் பிரச்சினையைத்தான் பயன்படுத்துகின்றனர். மகாராஷ்டிரத்தில் எல்லா அரசியல் கட்சிகளுமே தேர்தல் அறிக்கையில் இந்தப் பிரச்சினையை, ‘மகாராஷ்டிரத்துக்கு சாதகமாகத் தீர்ப்போம்’ என்றே நிரந்தரமாக சேர்த்துக்கொள்கின்றன. மகாராஷ்டிர சட்ட மன்றம், சட்ட மேலவை ஆகியவற்றின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் வாசிக்கும் உரைகளில்கூட இது சேர்க்கப்படுவது வழக்கமாகிவிட்டது.
- மகாராஷ்டிரத்தில் உள்ள தேசிய, மாநிலக் கட்சிகளுக்கிடையே அரசியல் கொள்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மராட்டிய மொழி பேசும் மக்கள் வசிக்கும் கிராமங்களும் நகரங்களும் மகாராஷ்டிரத்துடன்தான் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை காணப்படுகிறது. பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை என்று அனைத்துமே ஓரணியில் நிற்கின்றன.
பிரச்சினை மீண்டும் எப்படிக் கிளம்பியது?
- இரண்டு வாரங்களுக்கு முன்னால் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்த எல்லைப் பிரச்சினை குறித்து பரிசீலிக்க கூட்டம் நடத்தினார். சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இதற்குத் தீர்வு காணுமாறு சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் என்ற இரண்டு மூத்த அமைச்சர்களைப் பணித்தார். பெலகாவியில் வாழும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், மராட்டி பேசும் கர்நாடகப் பகுதிகளில் வாழும் தியாகிகளுக்கும் மகாராஷ்டிர அரசு இனி ஓய்வூதியம் அளிக்கும், ஜோதிபாய் புலே ஜன ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சேவைகளையும் வழங்கும் என்று அறிவித்தார்.
- அடுத்த நாளே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிரத்தில் உள்ள கன்னட மொழிப் பள்ளிக்கூடங்களுக்கு மானிய உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அத்துடன் சாங்லி மாவட்டத்தின் ஜாட் வட்டத்தில் உள்ள கன்னடம் பேசுவோர் கணிசமாக வாழும் 40 கிராமங்களைத் தருமாறு உரிமை கோரப்படும் என்றார்.
- இதற்குப் பதிலடியாக மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்நவீஸ், “ஒரு கிராமத்தைக்கூட கர்நாடகத்துக்கு விட்டுத்தர மாட்டோம்” என்று அறிவித்தார். அதேசமயம் பெலகாவி, நிப்பானி, கார்வார் உள்பட 865 கிராமங்கள் மீது உரிமை கோருவோம் என்றார். சந்திரகாந்த் பாட்டீலையும் தேசாயையும் டிசம்பர் 6இல் கர்நாடகத்தில் உள்ள மராட்டிய கிராமங்களுக்கு அனுப்பி மராட்டிய மக்களுடனும் அமைப்புகளுடனும் பேசி அவர்களைத் தயார்படுத்தப்போவதாக அறிவித்தனர். இதனால் கர்நாடகத்திலும் பதற்றம் ஏற்பட்டது.
- இதையடுத்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக்கொண்டதால் அறிவித்தபடி பயணம் செய்யாமல் அதை ஒத்திவைத்தனர். ஆனால், கர்நாடக ரட்சண வேதிகே அமைப்பின் தொண்டர்கள் நாராயண் கௌடா தலைமையில் பெலகாவி சென்று, அங்கு வந்த பேருந்துகள் உள்ளிட்ட மகாராஷ்டிர வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இதற்குப் பதிலடியாக சிவசேனைத் தொழிலாளர்கள் புணே நகரில் இருந்த கர்நாடக பேருந்துகளின் பெயர்களையும் எண்களையும் தார் பூசி அழித்தனர்.
- எல்லாமே அரசியல்ரீதியிலான அனுகூலங்களுக்காகத்தான்!
நன்றி: அருஞ்சொல் (15 – 12 – 2022)