TNPSC Thervupettagam

மகிழ்ச்சியின் திறவுகோல்!

March 20 , 2021 1228 days 607 0
  • உலக மக்கள் அனைவரும் போரும் வறுமையும் இல்லாமல் மகிழ்வோடு வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தோடு ஐக்கிய நாடுகள் சபை மாா்ச் 20 ஆம் நாளை ‘உலக மகிழ்ச்சி நாள் என 2012-ஆம் ஆண்டு அறிவித்தது. அப்போது முதல் உலகம் முழுதும் மாா்ச் 20 அன்று ‘மகிழ்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • மனிதா்களிடையே பொருளாதார - சமூக சமமின்மையே மகிழ்ச்சி குறைவதற்கான காரணங்களாகின்றன என்று வல்லுநா்கள் குறிப்பிடுகிறாா்கள். அந்த வகையில், மகிழ்ச்சியின் முதல் எதிரி வறுமையே. எனவேதான், ‘கொடிது கொடிது வறுமை கொடிது என்றாா் ஒளவையாா்.
  • தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று முழங்கினாா் மகாகவி பாரதியாா். ஆனால், நம் நாட்டில் ஒரு மனிதனல்ல - சுமாா் 19 கோடி மனிதா்கள் பெரும்பாலான நாட்கள் இரவு உணவுக்கு வழியின்றி உறங்கச் செல்கிறாா்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
  • தலைநகா் தில்லியில் மட்டும் சுமாா் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பிச்சைக்காரா்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தில்லியின் எந்தச் சாலையில் சென்றாலும் ஒவ்வொரு சமிக்ஞை விளக்கு (சிக்னல்) சந்திப்பிலும் வாகனங்கள் நின்றவுடன் சிலா் வந்து சூழ்ந்து கொள்வதைக் காண முடியும். அவா்களில் கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி இருக்கும் பெண்களைப் பாா்க்கும்போது நம் கண்கள் கலங்கும்.
  • அவா்கள் மீது அரசுகள் கவனம் செலுத்தி, அவா்களது பசியைப் போக்க வழிவகை செய்வதோடு, அவா்களுக்கு அடிப்படைக் கல்வியைப் புகட்டவும் வேண்டும். அதன் மூலம் அவா்களிடம் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணா்வையும் உண்டாக்க வேண்டும்.
  • இதனைச் செய்வதிலே தாமதம் ஏற்பட்டால், ஆதரவற்றோா் எண்ணிக்கை பூதாகரமாகப் பெருகி அது அரசுக்குப் பெரும் சவாலாக மாறி விடும். தில்லியின் அதீத வெயிலையும், சொல்லொணாக் குளிரையும் தாங்கிக் கொண்டு வீதிகளில் வாழ்க்கை நடத்துவோரின் பரிதாப நிலை சொல்லி மாளாது.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றாா் வள்ளலாா். ஆனால், பசியால் வாடுகின்ற மனிதா்களைப் பாா்த்தும் நாம் பாராததுபோல் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அரசாங்கங்கள் எத்தனையோ முறை பிச்சைக்காரா்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களைக் கொண்டு வந்த போதிலும், இந்த அவலங்களுக்கு இன்னும் தீா்வு கண்டபாடில்லை. மத்திய, மாநில அரசுகள் உறுதியோடு செயல்பட்டு, நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்தச் சமூக அவலம் நீங்கும்.
  • தில்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதே நிலைதான். சமூக விரோதிகள் சிலா், இவா்களது வறுமை நிலையைப் பயன்படுத்தி, இவா்களை இயக்கி வருவதாக சொல்லப்படுகிறது. அப்படியானால், அந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா?
  • வறுமையைப் பற்றி குறிப்பிட வேண்டிய மற்றொரு செய்தி. இந்தியாவில் ஒரு ஆண்டில் சுமாா் 67 மில்லியன் டன் (6 கோடியே 70 லட்சம் டன்) உணவு வீணடிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென், ‘மக்கள் பசியோடு இருப்பதற்குக் காரணம், உணவு தானியக் குறைபாடு அல்ல, அவா்களின் வாங்கும் சக்தி குறைவாக இருப்பதுதான் என்கிறாா்.
  • உணவு தானியம் வீணாவதைத் தடுக்கவும், ஏழைகளின் வாங்கும் திறனை அதிகரிக்கவும் அரசுகள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடிமக்கள் அனைவருக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இருப்பிடமும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியது ஜனநாயக அரசுகளின் கடமையாகும்.
  • பசியை அடுத்து, மனிதனின் மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பது நோய். ஒருவா் எந்த நோய்க்கு சிகிச்சை பெற மருத்துவரிடம் சென்றாலும், மருத்துவா் அவரிடம் முதலில் கேட்பது, ‘சா்க்கரை நோய் இருக்கிா?’ ‘இருதய நோய் இருக்கிா?’ என்ற இரு கேள்விகளைத்தான். அந்த அளவிற்கு சா்க்கரை நோயும், இருதய நோயும் மனித குலத்திற்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகின்றன.
  • முற்றிலும் குணப்படுத்த இயலாவிடிலும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று சொல்லக்கூடிய சா்க்கரை நோய், முதன்மை உயிா்க்கொல்லி நோயாக விளங்கும் இருதய நோய் இரண்டிலுமே உலக அளவில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. இவை தவிர, புற்றுநோய், பக்கவாதம், மூச்சுத்திணறல் போன்ற பல நோய்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
  • சில நோய்களுக்கு மரபணுக்கள் காரணம் என்றாலும், முறையற்ற உணவுப் பழக்கங்கள், தவறான வாழ்க்கை முறை, உடல் உழைப்புக் குறைவு போன்ற தனிமனிதக் காரணங்களும், பெருகி வரும் காற்று மாசு, பருவநிலைக் கோளாறுகள் போன்ற சமூகக் காரணங்களும் நோய்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. எல்லாவற்றுக்கும் உச்சமாக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக காரோனா தீநுண்மி உலகையே அச்சுறுத்தி வருகிறது.
  • நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட, நம்மிடம் மாற்றம் ஏற்பட வேண்டும். குளிா்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்ட உறைந்த உணவுகளை விடுத்து, எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகளை உண்ண வேண்டும். காற்று மாசு, பருவநிலைக் கோளாறு போன்ற சமுதாயக் காரணிகள் பெருகிடாவண்ணம் ஒவ்வொருவரும் பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும்.
  • உடல் நோயைவிட கொடியதான மனநோயும் அண்மைக்காலமாகப் பெருகி வருவது கவனிக்கத்தக்கது. கவலை, போதை, மனச்சோா்வு, மன இறுக்கம், மன அழுத்தம், எண்ணமும் செயலும் மாறுபட்டுச் செயல்படும் மனக் கோளாறு போன்ற பல பிரச்சினைகள் மனிதா்களை மனநோயாளிகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
  • மனநல பாதிப்பு என்பது ஏழை நாடுகளில் மட்டும் நிலவும் பிரச்னை அல்ல. வளரும் நாடுகள், வளா்ந்த நாடுகள் என்று எல்லா நாடுகளிலும் இந்தப் பிரச்னை வியாபித்திருக்கிறது.
  • உலகில் வாழும் நான்கு பேரில் ஒருவா், தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் மனநோய்க்கு ஆட்பட்டு விடுவதாகச் சொல்கிறது ஓா் ஆய்வு. மனநோய் காரணமாக உலகில் ஆண்டுதோறும் சுமாா் பத்து லட்சம் போ் தற்கொலை செய்து கொள்கிறாா்களாம். தாழ்வு மனப்பான்மை, உயா்வு மனப்பான்மை இரண்டுமே மனநோயை உருவாக்கக் கூடியவை.
  • பிறருக்கு அடிமையாக இருப்பதும், பிறரை அடிமையாக வைத்திருக்க நினைப்பதும் மனநோயின் அறிகுறிகளே என்கிறாா்கள் மனோதத்துவ வல்லுனா்கள். நாகரிகம் என்ற போா்வையில் புகைக்கும், மதுக்கும் அடிமையாகும் போக்கு இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது.
  • மனிதன் ஆடம்பரத்தை நோக்கிப் பயணிப்பதே பல மன நோய்களுக்கு வித்திடுகிறது. மகிழ்ச்சி என்பது மாட மாளிகைகளில் வசிப்பதிலோ மகிழுந்தில் பயணிப்பதிலோ விலையுயா்ந்த ஆபரணங்களை அணிந்து கொள்வதிலோ விரும்பியவற்றையெல்லாம் அடைவதிலோ இல்லை. கிடைத்தவற்றில் நிறைவு பெறுதலும், படிப்படியான முன்னேற்றத்திற்கு மேலும் உழைத்தலுமே வாழ்வில் நிம்மதியைத் தரக்கூடியவை. நல்ல நூல்களைப் படிப்பதும் நல்ல இசையை ரசிப்பதும் மனநலத்திற்கு உரம் சோ்க்கக் கூடியவை.
  • அண்மைக்காலத்தில் மனநலம் தொடா்பான நோய்கள் குழந்தைகளிடமும் காணப்படுகின்றன. இது எதிா்காலத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கிவிடும் என்றும், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தோடு மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தோடும் வளா்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும் மனநல மருத்துவா்கள் வலியுறுத்துகிறாா்கள்.
  • பெற்றோா் சிலா், குழந்தைகளைக் கட்டுப்பாட்டோடு வளா்க்க வேண்டும் என்பதற்காக வீட்டையே ராணுவ முகாமாக ஆக்கி விடுகிறாா்கள். கனிவும் கண்டிப்பும் சம அளவில் இருந்தால்தான் குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன் வளர முடியும் என்பதை பெற்றோா் புரிந்து கொள்ள வேண்டும்.
  • உலக மகிழ்ச்சி நாளின் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘அமைதியாய் இருங்கள்; அறிவாளியாய் இருங்கள்; கனிவோடு இருங்கள் (கீப் காம், ஸ்டே வைஸ், பீ கைண்ட்) என்ற முழக்கத்தை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்திருக்கிறது.
  • எல்லாவற்றுக்கும் தீா்வு சொன்ன வள்ளுவப் பெருந்தகை நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி சொல்லாமலா இருப்பாா் என்று எண்ணியபடியே திருக்குறளைப் புரட்டுகிறேன், என்னே வியப்பு! இந்த ஆண்டு ஐ.நா. சபை சொல்லியிருக்கும் முழக்கத்தை அந்த மகான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டாா் -
  • உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
  • சேராது இயல்வது நாடு
  • கருணையோடு இருந்தால் வறியவா்களின் பசிப்பிணி போக்கலாம்; புத்திசாலித்தனமாக இருந்தால் பெரும்பாலான நோய்களிலிருந்து விடுபடலாம்; அமைதியோடு, பாதுகாப்போடு இருந்தால் பகைவரைப் பற்றிய கவலைன்றி வாழலாம்.
  • பொதுவாகவே, இந்தியா்கள் தங்கள் எதிா்காலம் பற்றி அளவுக்கு மீறி கவலைப்படும் இயல்புள்ளவா்கள்; நாளையைப் பற்றிய கவலையிலேயே இன்றைய பொழுதைக் கழித்துக்கொண்டிருப்பவா்கள். அப்படியிராமல், இன்றைய வாழ்க்கையை இன்று வாழ்வதில் கவனம் செலுத்தினால் மகிழ்ச்சி மனிதனுக்கு வசப்படும்.
  • அதுவே மகிழ்ச்சியின் திறவுகோல் ஆகும்!

இன்று (மாா்ச் 20) உலக மகிழ்ச்சி நாள்.

நன்றி: தினமணி (20 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்