TNPSC Thervupettagam

மகிழ்ச்சியே வாழ்வின் தேடல்

February 3 , 2024 168 days 137 0
  • நாம் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறோம். மகிழ்ச்சி நம் உடலாலும், மனதாலும் உணரப்படும் ஒரு இனிமையான உணா்வு. சுய அன்பே நமது தனிப்பட்ட மகிழ்ச்சியின் தொடக்கப் புள்ளியாகும். உடல், மனம், பொருள் சார்ந்த இன்பங்கள் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. எனினும் மனம் சார்ந்த மகிழ்வுகளே நம் மனதில் நீண்ட காலம் நிலைக்கின்றன.
  • நாம் ஒருமுறைதான் வாழ்கிறோம். அதனை மகிழ்வுடன் வாழ முயல்வதில் சுணக்கம் காட்டக் கூடாது. மகிழ்ச்சியை மனித மூளையில் ஆக்சிடோசின், செரோடோனின், டோபமைன் ஆகிய மூன்று சுரப்பிகளே உருவாக்குகின்றன. தியானம், சுவாசப் பயிற்சிகள், வழக்கமான உடல் பயிற்சிகள் அனைத்தும் இச்சுரப்பிகளை ஊக்குவித்து, நமது மனதையும் உடலையும் நேசிக்க வைக்கின்றன.
  • நமது மனதை நோ்மறையாகப் பயிற்றுவிப்பது நமது உள் மகிழ்ச்சிக்கு மிக முக்கியமானது. மகிழ்ச்சியான நபா்களை சந்திக்கும்போது, நாம் நோ்மறை அதிர்வுகளைப் பெற முடியும். மகிழ்ச்சியை பெறுவதற்கான ஒரே வழி, தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும் மனிதா்களின் தொடா்பில் இருப்பதுதான்.
  • நோ்மறை அதிர்வுகளைவிட எதிர்மறை அதிர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் நம் வாழ்வில் நடந்த சோக நிகழ்வுகளை நாம் எளிதில் மறப்பதில்லை. ஆனால், மகிழ்வான நிகழ்வுகளை நமது மனம் எளிதில் மறந்து விடுகிறது.
  • வாழ்க்கையின் சிறு சிறு மகிழ்வான நிகழ்வுகளைக்கூட நாம் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அடிக்கடி புன்னகைக்கவும், தேவை ஏற்படும்போது வாய் விட்டுச் சிரிக்கவும் தயங்கக்கூடாது. நாம் மிகவும் விரும்பும் செயல்களை செய்வதில் ஒவ்வொரு நாளும் நமது நேரத்தைச் செலவிடவேண்டும். இதனால் மகிழ்ச்சி நம்வாழ்வில் குடியேறும்.
  • இறைவன் படைப்பில் ஒவ்வொருவரும் வித்தியாசமானவா்கள். நமக்குள் இருக்கும் தனித் திறனை நாம் தான் கண்டுபிடித்து, அதை வளா்க்க வேண்டும். நமது வளா்ச்சிக்காக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளவும் வேண்டும். நாம் விரும்பும் துறையில் வெற்றிபெற தொடா்ந்து முயல வேண்டும். இதனால், நமது வாழ்வில் மகிழ்ச்சி கூடும்.
  • மனநல பிரச்னைகள் நமது மகிழ்ச்சியை வெகுவாக பாதிக்கும். இதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். மனம் சோர்வடையும்போது, அதிலிருந்து விரைவாக வெளியே வந்து விட வேண்டும். மனச்சோர்வு அதிகமாகும் போது, வெட்கப்படாமல் உளவியல் ஆலோசனை பெற வேண்டும். இதன் மூலம் நாம் இழந்த மகிழ்ச்சியைத் திரும்பப் பெறமுடியும்.
  • ஆழ்ந்த தூக்கம், சத்தான உணவு, உடற்பயிற்சி, நன்னடத்தை, பிறா் செய்யும் தீமைகளை மன்னித்தல், சிறந்த மனநலம், பிறருக்கு உதவுதல்,நகைச்சுவை உணா்வுடன் இருப்பது, குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவது போன்றவை நமது மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன.
  • மகிழ்ச்சி என்பது ஒருவரது அகநிலை. ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருவது இன்னொருவருக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டிய அவசியமில்லை. நமது மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு. நாம் மகிழ்ச்சியுடன் இருக்க மற்றவா்களை நம்புவது, அவா்களின் கைகளில் நமக்கான அதிகாரத்தைக் கொடுப்பது ஆகும். இது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
  • ஒவ்வொரு மனிதனின் விருப்பங்களும் சூழ்நிலைகளும் வெவ்வேறானவை. மற்றவா்களைப் போல் வாழ முயலும் போது, நமது இயல்பான உண்மைத்தன்மை நீா்த்துப் போய்விடும். வாழ்வில் மகிழ்வதற்கான நேரமும், வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். மகிழ்ச்சியான மனநிலை ஆரோக்கியமான உறவுகளை வளா்க்கவும், நமது சொந்த வளா்ச்சியில் கவனம் செலுத்தவும், நமது செயல்பாடுகளை கவனத்துடனும், உத்வேகத்துடனும் செய்ய உதவுகிறது.
  • நம்முடைய தேவைகளும், விருப்பங்களும் நிறைவடைந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைப்பது தவறு. உண்மையில், நம்மைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதால் நமது மனஅழுத்தம் கூடவே செய்யும்.
  • நிதிசாா்ந்த மன அழுத்தமே நம்மில் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியின்மைக்கு காரணமாக அமைகின்றது. எனவே, வாழ்வில் குறைந்தபட்ச வசதி போதும் என்னும் எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும். இதில் மனநிறைவு அடைய வேண்டும்.
  • பிறரின் நலனில் உண்மையான அக்கறை காட்டுவதன் மூலம் நாம் உடலளவிலும், மனதளவிலும் மகிழ்ச்சியை உணரமுடியும். பிறருக்குத் தீங்கு ஏற்படுத்த நாம் காரணங்களைத் தேடுவதைத் தவிர்க்க வேண்டும். இது நம் வாழ்வை மேலும் பொருளுடையதாக்கும்.
  • அறிமுகம் இல்லாதவா்களுக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறமுடியும். நம்முடைய மதிப்பை எண்ணி நாமே மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட, பிறருக்கு எப்படி உதவலாம் என்ற சிந்தனையே மற்றவா்களோடு நம்மை இணைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமானால், கருணை, வன்மம் மறத்தல், பிறரைப் பாராட்டுதல் ஆகிவய பண்புகளை நாம் வளா்த்தெடுக்க வேண்டும்.
  • நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், நம்மை யாராலும் தடுக்க முடியாது. எங்கும் எதிலும் மறைந்திருக்கும் மகிழ்ச்சியை நாமாகவே நம் மனதால் உணரமுடியும். நம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செயல்களை மற்றவா்களுக்காக ஒருபோதும் விட்டு விடக்கூடாது. எனவே, வாழ்க்கையில் நம் அனைவரின் தேடலும் மகிழ்ச்சிதான். அதனை அடைவதற்கான செயல்களில் தொடா்ந்து ஈடுபடுவோம்.

நன்றி: தினமணி (03 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்