TNPSC Thervupettagam

மகிழ்ச்சி சரி, எக்காளம் கூடாது

September 4 , 2023 495 days 281 0
  • இந்தியாவில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுவது தொடர்பாக, ஆள்வோரின் பிரச்சாரமும் மிகையான எக்காளமும் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது என்பது குறித்து நானும் மகிழ்ச்சி அடைகிறேன்; இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகள் குறித்தும் மாநாட்டு இறுதியில் எடுக்கப்படப்போகும் முடிவுகள் குறித்தும் அடக்கமாக இருப்பதே புத்திசாலித்தனம்.

ஏன் இப்படிச் சொல்கிறேன்?

  • காரணம், இந்த ஜி-20 உச்சி மாநாடு என்பது 1999 முதல் ஆண்டுதோறும் ஏதாவதொரு நாட்டில் நடைபெறுவது வழக்கம்தான். முதலாவது உச்சி மாநாடு வாஷிங்டன் நகரில் 2008இல் நடைபெற்றது. (அப்போது உலக அளவில் நிதி நெருக்கடியும் நிலவியது.) ஜி-20 உச்சி மாநாடுகளுக்கிடையில் ஓராண்டுக்குள்ளாகவே உலகத் தலைவர்கள் வெவ்வேறு அமைப்புகளின் கூட்டங்களில் சந்தித்துப் பேசவும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
  • ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம், ஜி-7 நாடுகள் கூட்டம், உலகப் பொருளாதார அரங்கு, ஐபிசிசி, எஸ்சிஓ, பிரிக்ஸ், குவாட், ஆகஸ், ஆசியான், அன்க்டாட் என்று இப்படி எத்தனையோ வாய்ப்புகள் சந்திப்பதற்கு இருக்கின்றன. ஆங்கில மொழியின் முதல் ஐந்து எழுத்துகளைத் திருப்பித் திருப்பி எழுதினாலே ஏதோவொரு பன்னாட்டு அமைப்பின் பெயர் வந்துவிடும் என்று வேடிக்கையாகக்கூடச் சொல்வதுண்டு.

அடக்கம் அவசியம்

  • ஜி-20 நாடுகளின் தலைமைப் பதவி என்பது சுழற்சி அடிப்படையில் எல்லா உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்படுகிறது. 2003இல் இந்தியாவுக்கு அந்தத் தலைமை கிடைத்தது இப்போது 2023இல் கிடைத்திருக்கிறது, மீண்டும் 2043இல் இந்தியா தலைமையேற்கும். இப்படிப்பட்ட தருணத்தில் இந்தியா பணிவோடு இருக்க வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஜி-20 அமைப்பின் நாடுகளுக்குள்ளேயே இந்தியாவில்தான் தனிநபர் வருமானம் (ஆண்டுக்கு 2,085 அமெரிக்க டாலர்கள்) குறைவு, அதிக எண்ணிக்கையிலான ஏழைகள் (23 கோடி), 123 நாடுகளைக் கொண்ட உலகப் பசி  குறியீட்டெண்ணில் இந்தியாவின் இடம் 107.
  • அதற்காக 1991 முதல் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை நான் குறைத்துச் சொல்லவில்லை. ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பிறகும் வெகு சில நாடுகள்தான், ‘நிலையான விலை’ அடிப்படையில் தங்களுடைய மொத்த உற்பத்தி மதிப்பை (ஜிடிபி) இரட்டிப்பாக்கியிருக்கின்றன.  
  • இந்தியாவின் ஜிடிபி 1991-92இல் ரூ.25 லட்சம் கோடியாக இருந்தது, 2003-04இல் ரூ.50 லட்சம் கோடியானது, 2013-14இல் ரூ.100 லட்சம் கோடியாக மேலும் உயர்ந்தது. 2014-15இல் மிக ஆரோக்கியமாக உயர்ந்த ஜிடிபி, 2023-24இல் இரட்டிப்பாகும் வாய்ப்பு இல்லை. நல்ல வாய்ப்பை இந்தியா வீணாக்கிவிட்டது. அதற்குக் காரணம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 9 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சராசரி வெறும் 5.7%தான், காங்கிரஸ் தலைமையில் ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டுக்கால ஆட்சியில் அது 7.5%ஆக இருந்தது.
  • 2004க்குப் பிறகு 41.5 கோடிப் பேரை வறுமைக்கோட்டுக்குக் கீழேயிருந்து மீட்டோம், இருந்தும் 23 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்கும் கீழேயே இன்னமும் வாழ்கிறார்கள். வறுமைக் கோடு என்பதே மிக மிகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, அதாவது நகர்ப்புறமாக இருந்தால் தனிநபர் நுகர்வு மாதத்துக்கு ரூ.1,286ஆக இருந்தால் போதும், கிராமமாக இருந்தால் ரூ.1089ஆக இருக்க வேண்டும். நிலவை ஆராய கோள் அனுப்பும் அளவுக்கு நமக்கு அறிவியல் ஆற்றல் இருந்தாலும் எட்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்களில் 30% பேரால் இரண்டாவது வகுப்பு பாடப்புத்தகத்தைப் படிக்க முடியவில்லை, 55% மாணவர்களுக்கு சாதாரணமான பெருக்கல், வகுத்தல் கணக்குக்கூட போடத் தெரியவில்லை. நம்முடைய வளர்ச்சியானது ‘கசப்பான இனிப்பாக’ இருக்கிறது.

கேடுதரும் மருக்கள்

  • நம்முடைய சமூக – பொருளாதார நிலையானது வளர்ச்சி என்று பெருமை பாராட்டிக் கொள்ளத் தக்க வகையில் இல்லாமல், கேடுதரும் பருக்கள் நிரம்பிய முகம்போல இருக்கிறது.

உலகில் நம்முடைய மதிப்பு எப்போது உயரும் என்றால்

  • ஜனநாயக நாடு என்று பெருமைப்படும் வகையில் களங்கங்களை நீக்கி மெருகேற்றிக் கொண்டால் சாத்தியம்; சுதந்திரமான செயல்பாடுகளை அனுமதித்தல், பன்மைத்துவத்தை ஆதரித்தல், அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதையை அளித்தல் ஆகியவற்றைச் செய்வதன் மூலம் இதைச் சாதிக்கலாம்.
  • நாடாளுமன்றமும் சட்டப்பேரவைகளும் மக்களுடைய பிரச்சினைகளை அதிக நேரம் விவாதித்தால், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கவும் இடம் அளித்தால், மசோதாக்களை விரிவாக ஆராய்ந்து, விவாதித்த பிறகு சட்டமாக நிறைவேற்றினால் சாத்தியம்.
  • அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும் சட்டப்படியான ஆட்சி என்பது நிகழ்ந்தால், புல்டோசர்கள் மூலம் நீதி வழங்குவதை நிறுத்தினால், கும்பலாகக் கூடி யாரையாவது அடித்துக் கொல்வதைத் தடுத்தால், வெறுப்பின் அடிப்படையில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொண்டால் சாத்தியம்.
  • சந்தைப் பொருளாதாரத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டால் (சில தொழிலதிபர்களுக்கு மட்டும் இணக்கமாகச் செயல்படுவதை நிறுத்திவிட்டு), முதலீடு, தொழில்நுட்பம், போட்டி ஆகியவற்றுக்கு நம்முடைய பொருளாதாரத்தைத் திறந்து வைத்தால் சாத்தியம்.
  • நீதிமன்றங்கள், இந்தியத் தேர்தல் ஆணையம், கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம், மனித உரிமைகள் ஆணையம், தகவல் ஆணையம் ஆகியவற்றை உண்மையிலேயே சுதந்திரமாகவும் கட்சி சார்பற்றும் செயல்பட அனுமதித்தால் சாத்தியம்.
  • புலனாய்வு முகமைகள் தாங்களாகவே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு செயல் படாமல், அனைத்து மக்களையும் நிறுவனங்களையும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தாமல் இருந்தால் சாத்தியம்.
  • இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும்தான் இங்கு நடைபெறும் நிகழ்வுகள் தெரியும் என்று நினைத்தால், முட்டாள்களின் உலகில் நாம் வாழ்வதாகிவிடும். உலகின் சர்வாதிகார நாடுகளில் என்ன நடக்கிறது என்று இங்கிருந்துகொண்டே நாம் பார்ப்பதைப் போல – ஒப்புக்கு தேர்தல் என்று நாடகமாடுவது, நிறவெறியைத் தூண்டுவது, பெண்களை அடக்கியாள்வது, அரசியல் – மனித உரிமைகளை மறுப்பது, பழங்குடிகளுக்கு இடையில் மோதல்களை நடத்த அனுமதிப்பது, பெரு நிறுவனங்களின் ஏகபோகத்தை அனுமதிப்பது, அதை நியாயப்படுத்திப் பேசுவது என்று நம்முடைய தோல்விகளையெல்லாம் உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

பொருளாதாரக் கவலைகள்

  • இப்போதைய சூழலில் உலகின் பொருளாதாரம் குறித்துத்தான் ஜி-20 மிகவும் கவலைப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி என்ற அலையால் மட்டுமே வறுமையில் வாடும் மக்களைக் கைதூக்கிவிட முடியும் என்று எல்லாப் பொருளாதார அறிஞர்களுமே ஒப்புக் கொள்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி காரணமாக மக்கள் எப்படிப் பக்குவம் அடைகிறார்கள் என்பதை அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன். மக்களுடைய நடத்தை மட்டுமல்ல பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. (சென்னையில் 1960களிலும் 1970களி்லும் பரவலாக பேசப்பட்ட ‘மெட்றாஸ் பாஷை’ இப்போது அருகிவிட்டது).
  • உலகில் ஏன் சில நாடுகள் பணக்கார நாடுகளாக இருக்கின்றன, அவை எப்படி அந்த நிலையை எட்டின? என்னுடைய கருத்துப்படி அவை நான்கு விஷயங்களைச் செய்தன. நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் அதிகம் முதலீடு செய்தன, கல்விக்கு அதிகம் செலவிட்டன, சுகாதாரத்துக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்தன, பிற நாடுகளுடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொண்டன. இந்தியா இவற்றையெல்லாம் பகுதியளவுக்குத்தான் செய்கிறது. அடித்தளக் கட்டமைப்பில் நாமும் முதலீடு செய்கிறோம், ஆனால் அது போதாது.
  • கல்விக்கு நாம் ஜிடிபியில் 3% சுகாதாரத்துக்கு 1.4% ஒதுக்குவது மிக மிகக் குறைவு. வரலாற்றுச் சிறப்பு மிக்க வர்த்தக சீர்திருத்தங்களை அமல்படுத்திய நாம், இப்போது பிற்போக்கான நடவடிக்கைகள் மூலம் அவற்றையெல்லாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம்; சுங்கத் தீர்வையை உயர்த்துகிறோம், ஏற்றுமதியாகும் பொருள்கள் மீது வரியை அதிகப்படுத்துகிறோம், இறக்குமதிக்கு உரிமம் வேண்டும் என்கிறோம், நாடுகள் வாரியாக சிறப்பு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளத் தயங்குகிறோம்.
  • அதிகம் கவலை தரும் இன்னொரு விஷயம், வருமானத்திலும் சொத்துடைமையிலும் அதிகரித்துக்கொண்டேவரும் ஏற்றத்தாழ்வுகள். இந்தியர்களின் சராசரி வருமான உயர்வு கவலை தருகிறது. ஏழு கோடிப் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதே பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. (அவர்களில் பாதிப்பேர் வரி செலுத்தும்படி அதிக வருமானமில்லை என்று அறிவித்திருக்கிறார்கள்). இதை வைத்து 140 கோடி இந்தியர்களுக்கும் வருமானம் அதிகமாகிவிட்டதைப் போல மார் தட்டுகிறார்கள்.
  • வேலையில்லாத் திண்டாட்டம் 8.5%, 15 வயது முதல் 24 வயதுவரை உள்ளவர்களில் வேலை செய்யத் தயாராக இருந்தும் வேலையே கிடைக்காதவர்கள் எண்ணிக்கை 24% என்னும்போது எப்படி எல்லோருமே பணக்காரர்களாகிவிட முடியும்? பொருளாதாரப் படிநிலையில் கீழே இருக்கும் 50% மக்கள் மொத்த வருமானத்தில் 13% மட்டுமே சம்பாதிக்கும்போது, அவர்களில் 3% பேருக்கு மட்டுமே ஏதோ சொத்து என்று இருக்கும் நிலையில் எப்படி எல்லா இந்தியர்களும் பணக்காரர்களாகிவிட முடியும்?
  • ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வரும் உலகத் தலைவர்கள் இந்தியாவையும் அதன் பொருளாதாரத்தையும் நெருக்கமாக இருந்து ஆராய்வார்கள். நாமும் மேலும் நெருக்கமாக இருந்து நம்முடைய நிலை குறித்து ஆராய வேண்டும் என்றே விரும்புகிறேன்.

நன்றி: அருஞ்சொல் (04 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்