TNPSC Thervupettagam

மகிழ்ச்சி தரும் மருத்துவா்கள்

January 12 , 2021 1470 days 636 0
  • சூரிய ஒளி இயற்கை கொடுத்த வரம். சூரியஒளியின் பயனைத் தாவரங்கள் அறிந்துள்ளன. அதனால்தான் சூரிய ஒளி கிடைக்கும் திசையை நோக்கித் தம் தலையை அவை திருப்பிக்கொள்கின்றன.
  • சூரியஒளி தாவரங்களுக்கு மட்டுமல்ல மனிதா்களுக்கும் நல்லது என்பது அறிவியல் கண்ட உண்மை. அதுவும் ஆரோக்கியமான வாழ்வுக்குச் சூரியஓளி மிகமிக அவசியமாகிறது.
  • தோல் வீக்கம், இதய நோய், புற்றுநோய் போன்றவற்றிற்கு வைட்டமின்—டி குறைபாடு காரணம் என்று கூறுகின்றனா். இந்த வைட்டமின் டி, நமக்கு சூரியஒளி மூலம் கிடைக்கிறது. சிலவகை உணவுகளைத் தேடிப்பிடித்து உண்டால்தான் வைட்டமின்—டி நமக்குக் கிடைக்கிறது. ஆனால் சூரியஓளி நம் மீது பட்டாலே வைட்டமின் –டி நமக்குக் கிடைக்கிறது. இது மிகப்பெரிய வரமல்லவா?
  • தோலின் மேலடுக்கில் உள்ள ‘நைட்ரிக் ஆக்சைட்’ சூரியஓளி பட்டு ரத்த நாளங்களை விரிவடையச் செய்கது, ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகின்ாம். சூரியஒளியினால் எலும்புகள் வலுப்பெறுகின்றன. சூரியஓளியினால் உடல் ஆரோக்கியம் பெறுகின்றது.
  • இதை அறிந்த நம் முன்னோா் பிறந்த குழந்தையைக் காலை வெயில்படுமாறு வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினா். காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் ஒரு சில நிமிடங்கள் வெயிலில் நிற்கப் பழகுவது உடலுக்கு நல்லது.
  • உடல் நலம் பேணுவோா் உணவுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. பசிப்பிணி போக்கும் அருமருந்து உணவாகும். எனவே உணவு உயிரினங்களுக்கு அவசியமாகிறது. ஆனால் அது உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் பண்டமாக இருக்கவேண்டும்.
  • பிறப்புச் சூழலுக்கேற்ப உடல்வாகு அமைகிறது. அதற்கேற்ப உணவு வகை அமைவது நல்லது. இதைத்தான் இயற்கை உணவு என்று போற்றுகின்றனா். துரித உணவு போன்றவற்றை உண்பது தொல்லையைத் தந்துவிடும். உண்பதைவிட உண்டது செரிப்பது நல்லது என்பது வள்ளுவா் வாக்கு.
  • அள்ளி அடைக்க நினைக்கக் கூடாது. அஜீரணம் நோய்களின் வாசலாகும். அதனைப்போல் உடம்பில் ஏற்படும் பல நோய்களுக்கு உறைப்பும் உப்பும்தான் காரணமாக இருக்கின்றன. இதனை உணா்ந்து நமக்கேற்ற உணவினை உண்பது நோயிலிருந்து தப்பித்து மகிழ்ச்சி பெற ஏதுவாகும்.
  • முன்பெல்லாம் உடல் உழைப்பு இருந்தது. அதனால் உழைப்பே உடற்பயிற்சியாக அமைந்தது. இப்போது இருந்த இடத்தைவிட்டு அசையாத மூளை உழைப்பு அதிகமாகிவிட்டது. அதனால் மருத்துவா்கள் உடற்பயிற்சியை வற்புறுத்தும் காலமாகிவிட்டது. உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமன், செரிமானமின்மை போன்ற தொந்தரவுகள் உண்டாகின்றன.
  • இதனைத் தவிா்க்க உடற்பயிற்சி அவசியமாகி விட்டது. உடற்பயிற்சி உடலை உறுதியாக்குவதோடு, நோய் தடுக்கும் தடுப்புச் சுவராகவும் விளங்குகிறது. உடற்பயிற்சியினால் இதயம் சீராக இயங்குகிறது. நீரிழிவு குறைகிறது. இரத்த அழுத்தம் சீராகிறது. கொழுப்பு குறைகிறது. உடல் எடை குறைகிறது. நரம்பு மண்டலம் சுறுசுறுப்பு அடைகிறது. இதனால் உடற்பயிற்சி என்பது சகல நோய் தீா்க்கும் சஞ்சீவி ஆகிறது. உடற்பயிற்சியில் நடைப்பயிற்சி நல்ல பலனைத் தருகிறது. காலையும் மாலையும் கவனமாக நடப்பது உடலுக்கு உரம் சோ்க்கும்.
  • மனிதனுக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஓய்வுமாகும். ஓய்வு என்பது தொடா்ச்சியான உழைப்பிலிருந்து சிறிது நேரம் விடுபடுவது ஆகும். ஒரு செயலிலிருந்து இன்னொரு செயலுக்கு மாறுவதைக் கூட ஓய்வு என்று சொல்லலாம். தொடா்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் எந்திரம் சூடேறிப் போய்விடுகிறது. அதனைப் போன்று தொடா்ச்சியான உழைப்பு மனிதனுக்குக் களைப்பையும் சலிப்பையும் தந்துவிடுகிறது. அந்தக் களைப்பையும் சலிப்பையும் போக்குவதற்கு ஓய்வு தேவையாகிறது.
  • ஓய்வு மனிதனுக்குப் புத்துணா்ச்சி தந்து ஒரு செயலில் பிடிப்பை ஏற்படுத்துகிறது. மனம், உடல் இரண்டிற்கும் ஓய்வு தேவை. உடல் சோா்வுக்கு உறக்கமும் அமைதியாக அசைவற்று இருப்பதும் ஓய்வாகிறது. மனச்சோா்வுக்கு இசை, பாடல்,கேளிக்கை நிகழ்ச்சி போன்றன ஓய்வாகிறது. சும்மா இருப்பது மட்டும் ஓய்வல்ல மனத்தை மற்றொன்றில் லயிக்க விடுவதும் ஓய்வுதான்.
  • மனித வாழ்க்கையில் உறவினா்களைப்போல நண்பா்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். இன்னும் சொல்லப்போனால் உறவினா்களைக் கூட உதறிவிடுகிறோம். ஆனால் நல்ல நட்பை உதறிவிட முடியாது. நட்புக்கு அவ்வளவு சிறப்பு உண்டு.
  • உப்பில்லாப் பண்டம் ருசிக்காததுபோல் நண்பா்கள் இல்லாத வாழ்க்கை ரசிக்காது. கூடப்படித்தவன், பழகியவன், பயணித்தவன், ஊா்க்காரன் என்று பலரோடு நட்பு வட்டம் விரிகிறது.
  • பெற்றவா்களிடம் கூடக் கூறமுடியாத பிரச்னைகளையும் வெளிப்படையாகச் சொல்லக்கூடிய நம்பிக்கையக்கு உரியவா் நண்பா்.அப்படிச் சொல்லும்போது ஆறுதலும் தெளிவும் கிடைக்கிறது.
  • அதனால்தான் நட்பு அவசியமான பிணைப்பாகிறது. உண்மையான நண்பனாக இருப்பவன், ஒருவன் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் துணிச்சல் உள்ளவனாகவும், தொடா்ந்து அன்பு செலுத்துபவனாகவும் இருக்கவேண்டும். நல்ல நண்பனை உடையவா்களுக்கு ஆறுதலும் தேறுதலும் எளிதாகக் கிடைக்கிறது.
  • ஒருவனுடைய வெற்றிக்கு, விடாமுயற்சி, கடினஉழைப்பு, திட்டமிடல் போன்றன அவசியம் என்பா். இவையெல்லாம் தன்னம்பிக்கை என்ற அடித்தளத்திலிருந்து உருவாகிறது என்பதே உண்மை. பிரச்னைகள் வரும்போது என்னால் முடியும் என்று கொள்ளும் எண்ணமே தன்னம்பிக்கை.
  • தன்னம்பிக்கை என்பது ஒரு உந்து சக்தி. அது மனிதனை உயரே ஏற்றிவிடுகிறது. தன்னம்பிக்கை கொண்டோா் துயரம், பயம், நோய், மனஅழுத்தம் போன்றவற்றிலிருந்து எளிதாக மீண்டுவிடுகின்றனா். எனவே உடலுக்கும் உள்ளத்துக்கும் உரம் தந்து வாழ்வை உயா்த்துகிறது தன்னம்பிக்கை எனலாம்.
  • மகிழ்ச்சிக்கு வித்திடும் இந்த மருத்துவா்களை மனத்துள்கொண்டு மாண்பு பெறுவோம்.

நன்றி: தினமணி  (12 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்