TNPSC Thervupettagam

மகுடம் சூடிய குகேஷ்!

December 19 , 2024 15 days 74 0

மகுடம் சூடிய குகேஷ்!

  • சிங்கப்பூரில் நடைபெற்ற ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் உலகின் இளம் செஸ் சாம்பியன் என்னும் சாதனையைப் படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த டி.குகேஷ். இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தப் பட்டத்தை வென்றவர் என்கிற சாதனையையும் குகேஷ் படைத்திருப்பது நாட்டுக்குப் பெருமையான தருணம்.
  • இந்தத் தொடருக்கு முன்பாக குகேஷ் பெற்றிருந்த வெற்றிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. 2024இன் தொடக்கத்தில் குகேஷ் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்றிருந்தார். சென்னையிலும் புடாபெஸ்ட்டிலும் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தனித்தனியாக குகேஷ் தங்கப் பதக்கம் வென்றதும் அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்தது. இந்த வெற்றிக்கெல்லாம் மகுடமாகத்தான் உலக சாம்பியன்ஷிப் வெற்றி குகேஷுக்கு அமைந்துள்ளது.
  • இந்த வெற்றியைப் பெற குகேஷ் செலுத்திய உழைப்பு அபாரமானது. இத்தொடர் 14 சுற்றுகளைக் கொண்டதாகும். எனவே, ஒவ்வொரு சுற்றுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • இத்தொடரின் முதல் ஆட்டத்திலேயே சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரென் வெற்றி பெற்று, குகேஷுக்குக் கடும் சவாலைத் தந்தார். இரண்டாவது சுற்று சமனில் முடிய, மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று சமப் புள்ளிகளைப் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு சுற்றுமே சமனில் முடிந்தன.
  • 11ஆவது சுற்றில்தான் குகேஷ் மீண்டும் முன்னிலை பெற்றார்; ஆனால், 12ஆவது சுற்றில் டிங் மீண்டும் சமன் செய்ய, இரண்டு வீரர்களுக்கும் இடையேயான போட்டி கடுமையாகவும் வலிமையாகவும் மாறியது. 13ஆவது சுற்றின் முடிவில் இருவருமே சமப் புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.
  • 14ஆவது இறுதிச் சுற்றில் வெற்றி மதில் மேல் பூனையாக இருந்தது. ஆனால், டிங் லிரென் 53ஆவது நகர்த்தலில் செய்த சிறு தவறால், குகேஷ் ஆனந்தக் கண்ணீரோடு போட்டியை 7.5 – 6.5க்கு என்கிற புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கினார்.
  • இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆனந்துக்குப் பிறகு கிளாசிக்கல் செஸ் உலகப் பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியராக குகேஷ் உருவெடுத்துள்ளார். 22 வயதில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த ரஷ்யாவின் கேரி காஸ்பரோவின் சாதனையையும் 18 வயதில் வென்றதன் மூலம் குகேஷ் முறியடித்துள்ளார். இந்த வெற்றிக்கு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்றதும் உதவியதாக குகேஷ் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. இதற்காகத் தமிழ்நாடு அரசும் பாராட்டுக்குரியது.
  • உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷைப் பாராட்டி தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி பரிசு வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஏற்கெனவே இந்தியாவின் செஸ் தலைநகராகத் தமிழ்நாடு விளங்கிவருகிறது. இந்தியாவில் உள்ள 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.
  • குகேஷுக்குப் பரிசு வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திறமை வாய்ந்த செஸ் வீரர், வீராங்கனைகளை வளர்த்தெடுக்கவும், உருவாக்கவும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், செஸ் விளையாட்டுக்கென ‘ஹோம் ஆஃப் செஸ்’ என்கிற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும்” என்கிற அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
  • இதுபோன்ற அமைப்புகளைச் சென்னைக்கு வெளியிலும் அமைத்து இளம் வீரர்களை அடையாளம் காண வேண்டும். சதிவாய்ப்பில்லாதவர்களுக்கும் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் செஸ் பயிற்சி கிடைப்பது, தமிழ்நாட்டில் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி போன்ற இன்னும் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்க வழிவகுக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்