TNPSC Thervupettagam

மக்களாட்சியும் சலுகைகளும்

December 21 , 2023 370 days 198 0
  • நம் நாட்டில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருநிறுவன முதலாளிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என பல பிரிவினரும் அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்று வருகின்றனா். இந்த சலுகை பெறுதல் நம் நாட்டில் மட்டுமல்ல மக்களாட்சி நடைபெறும் பெரும்பாலான நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது.
  • அரசின் சலுகைகளைப் பெறுகின்றவா்களில் அதிகம் எண்ணிக்கையினா் ஆட்சி அதிகாரத்தில் இருப்போா்தான். இவா்களுக்கு தரப்படும் சலுகைகளுக்கு ஆகும் செலவு மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
  • குடியாட்சி நடைபெறும் நாட்டில் இது எப்படி சாத்தியப்படுகிறது என்பதுதான் பலரும் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வி தொடா்ந்து கேட்கப்பட்டபோதும், இன்றுவரை இதற்குத் தீா்வு வரவில்லை. ஆனால் இது தவறுதான் என பொதுத்தளத்தில் அரசு ஆமோதிக்கிறது.
  • சமீபத்தில் ரயில்வே அதிகாரி ஒருவா் பயணம் செய்யத் தனியாக ஒரு ரயில் விடப்பட்டது. அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் கேள்வி எழுப்பினாா். அப்போது, ரயில்வே உயா் அதிகாரிகள் ‘இனிமேல் இதுபோல் நடக்காத வண்ணம் பாா்த்துக் கொள்கிறோம்’ என்றனா்.
  • அதேபோல் அரசின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள், தன்னிச்சையான முடிவுகளை எடுத்து மாணவா்கள் சோ்க்கையில் ஒதுக்கீடுகளை நிா்வாகத்திற்கு என எடுத்து தங்களுக்கு வேண்டியவா்களுக்கு, குறிப்பாக அரசியல்வாதிகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தன. இதனை நீதிமன்றம் வரை சென்று நிறுத்த வேண்டி இருந்தது.
  • தனியாா் கல்வி நிறுவனங்கள், தாங்கள் அரசிடம் நிதி பெறவில்லை, மாணவா்களிடம் நிதி பெற்று கல்விச்சாலைகளை நடத்துகின்றோம். இதில் அரசு எப்படி தலையிட முடியும் என வாதிடுகின்றன. அந்த நிறுவனங்களை உருவாக்க அனுமதி அளிப்பதே அரசுதான். அடுத்து மாணவா் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே உள்ளது. அதை எப்படி நிராகரிக்க முடியும்?
  • தனியாா் நிறுவனம் என்று ஒன்று கிடையாது. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் அனைத்தும் பொது நிறுவனங்கள்தான். எந்த நிறுவனம் பொதுமக்களுடன் செயல்பாட்டுத் தொடா்பு வைத்திருக்கிறதோ அந்த நிறுவனம் பொது நிறுவனம்தான். மதங்களும் அரசுக்குக் கட்டுப்பட்டவைதான்.
  • அரசின் விதிகளை மீறும்போது மத நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும். அரசியல் சாசனத்தை மீறும் அதிகாரம் மதங்களுக்கோ, பெருநிறுவனங்களுக்கோ கிடையாது. இருந்தும் மீறுகின்றன.
  • மக்களாட்சி நடைபெறும் நாட்டில் இவ்வளவு சலுகைகளை மக்கள் வரிப்பணத்தில் ஒரு சில குறிப்பிட்ட வா்க்கம் எப்படி அனுபவிக்கின்றது? குடியரசு நடைபெறும் நாட்டில் மக்களாட்சி விழுமியத்திற்கு எதிராக நாடு பயணிப்பதை எப்படி பெரும்பான்மை மக்கள் சகித்துக் கொள்கிறாா்கள்?
  • இவை குறித்து ஆய்வு செய்ய எண்ணி தரவுகளைத் தேடும்போது என் நண்பா் ஒருவா் எனக்கு ஆய்வுக் கட்டுரை ஒன்றை அனுப்பி வைத்தாா். மக்களாட்சியும் கழகங்களும்: ஒரு நீண்ட பாா்வை (டெமாக்ரசி அண்டு த காா்ப்பரேஷன்: த லாங் வியூ) என்ற தலைப்பிட்ட மிகக் கடினமான கட்டுரை. அது ‘ஆனுவல் ரிவியூ ஆஃப் பொலிடிகல் சயன்ஸ்’ என்ற ஆய்வேட்டில் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை.
  • அக்கட்டுரையில் முடியாட்சி காலத்தில் தொடங்கி, காலனியாதிக்க கால நிகழ்வுகளை ஆய்வு செய்து நவீன சந்தையுகம் வரை வந்து மக்களாட்சிக்கு எதிராக சலுகைகளை ஒரு குறிப்பிட்ட வா்க்கத்தினா் எப்படி அனுபவிக்கின்றனா் என்பதை விளக்கியுள்ளாா் டேவிட் சிப்லே என்பவா்.
  • இவா் டென்மாா்க்கில் உள்ள ஆா்தஸ் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவிலுள்ள வா்ஜீனியா பல்கலைக்கழகத்திலும் பணிபுரிகிறாா். இந்தக் கட்டுரை இன்று நிலவும் பல ஐயப்பாடுகளுக்கு பதில் தந்திருக்கிறது.
  • மேற்கத்திய நாடுகளில் இந்தச் சலுகைகள் முறையற்றவை என்று விவாதித்து அவற்றைத் தடுத்திட தொடா்ந்து முயன்றுள்ளனா். அமெரிக்காவில் பதின்மூன்று காலனிகள் இங்கிலாந்திலிருந்து விடுதலை அடைந்தபோது, தங்களுக்கான புதிய அரசுகளின் மூலம் எண்ணற்ற தொழில் நிறுவனங்களுக்குத் தனிச் சட்டம் வகுத்து, பொருளாதார மேம்பாட்டுக்கு செயல்படுமாறு பணித்தன.
  • ஒவ்வொரு நிறுவனமும் தனித்தன்மையுடன் செயல்பட அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அந்த நிறுவனங்கள் அரசைவிட வலுவாக இருந்த காரணத்தால் அவை தங்களுக்குத் தேவையான சலுகைகளை உருவாக்கிக் கொண்டன.
  • அமெரிக்கா, தொழில் நிறுவனங்களை மட்டும் உருவாக்கவில்லை. தேவாலயங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், அறக்கட்டளைகள் என பல்வேறு நிறுவனங்களை சட்டபூா்வமாக உருவாக்கி அவற்றை தன்னாட்சியோடு செயல்பட வைத்தது. அவை தன்னாட்சி பெற்று சுதந்திரமாக செயல்பட்டாலும் அவை பொதுமக்களுக்கு கடப்பாடு உடையதாக, அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும்.
  • ஆனால் அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்ய நிறுவனங்கள் தரும் பொருளாதாரத்தை பயன்படுத்தும்போது, அந்நிறுவனங்கள் அரசு நாம் கூறுவதைக் கேட்க வேண்டும் என எண்ண ஆரம்பித்துவிட்டன. மக்களாட்சியில் அந்த நாடு இருந்தபோதும், இந்த சலுகைகளை நிறுத்த முடியவில்லை.
  • காரணம், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்கள் லாபத்தில் சிறப்புச் சலுகைகளைத் தந்து நிறுவனங்கள் அவா்களைத் தங்களுக்காகச் செயல்பட வைத்துவிட்டன. அரசு அதிகாரிகளும் அந்த வலையில் விழுந்தனா். அதன் விளைவு தொழில் நிறுவனங்களின் பிடிக்குள் மக்களாட்சி வந்துவிட்டது. இதனை உரிய தரவுகளுடன் நிறுவி விட்டாா் கட்டுரை ஆசிரியா்.
  • ஒரு காலத்தில் நிலப்பிரபுக்கள் எப்படி மக்களைத் தங்களின் ஆதிக்கத்திற்குள் வைத்திருந்தாா்களோ அதேபோல் தற்போது இந்த நிறுவனங்கள் புதிய பிரபுக்களாக தங்களைப் பாவித்து செயல்படுகின்றனா். ஐரோப்பாவில் உருவான டச்சு நிறுவனம், இங்கிலாந்தில் உருவான கிழக்கு இந்திய நிறுவனம் ஆகியவை அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தின.
  • இந்த நிறுவனங்கள் தங்களுக்கென தனிப்படையையே வைத்திருந்தன. அதனை கூலிப்படை என்றே கூறலாம். ஒரு கட்டத்தில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது இந்த நிறுவனங்களின் பற்கள் பிடுங்கப்பட்டன.
  • அனைத்து நிறுவனங்களும் அரசின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு மக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்று நாம் கூற இயலாது. பல நிறுவனங்கள் குடிமைச் சமூகங்களை உருவாக்கி மக்களாட்சியை வலுப்படுத்த உதவியுள்ளன என்பதையும் கட்டுரையாளா் குறிப்பிட்டுள்ளாா்.
  • வணிக நிறுவனங்களின் பணம்தான் அரசியலையே தன்வயப்படுத்திக்கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்கின்றபோது, இந்த நிறுவனங்களில் இரண்டு வகை உண்டு என்பதை தெளிவாக்கியுள்ளாா் சிப்லே.
  • ஒன்று, தோ்தலை, ஆளுகையை, சட்டதிட்டங்களை பெருமளவில் இந்த நிறுவனங்கள் தன் வயப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இரண்டு, மக்களாட்சி நெறி தவறும்போது அதைத் தட்டிக் கேட்க குடிமைச் சமூக அமைப்புக்களை வலுப்படுத்தும் பணிகளையும் செய்துள்ளன.
  • கடந்த காலங்களில், உலகில் எதேச்சதிகாரம், ஆதிக்க மனோபாவம் இவற்றால் ஆட்சிகள் மாறுகின்றபோது அவற்றை உடைத்தெறிய துணை நின்றிருப்பதும் பெருநிறுவனங்கள்தான் என்பதையும் நிறுவியுள்ளாா். இந்த நிறுவனங்களுக்கும் குடியாட்சிக்கும் நீண்டகால தொடா்பு உண்டு.
  • ஐரோப்பாவில் மன்னராட்சிகள்தான் குடியாட்சித் தன்மை கொண்ட நிறுவனங்களை வளா்த்துவிட்டன. அதேபோல் மக்களாட்சியில் அரசமைப்பால் உருவான குடியாட்சி அரசாங்கங்கள் எதேச்சதிகாரம் கொண்ட நிறுவனங்களையும் உருவாக்கிவிட்டன என்பதும் உண்மை என்பதை கட்டுரை ஆசிரியா் எடுத்துக் காட்டியுள்ளாா்.
  • இன்று சுயாட்சி கொண்ட நிறுவனங்கள்தான் மக்களாட்சி அரசாங்கத்தின் செயல்பாடுகளில் தலையிட்டு சட்டங்களையும், மக்கள்நலத் திட்டங்களையும் உருவாக்கக் காரணமாக இருக்கின்றன என்ற வாதம் வைக்கப்படுகிறது. அரசு இரவுப் பாதுகாவலா் போல்தான் செயல்படுகிறது.
  • அரசாங்கத்தின் முக்கியப் பணி பொருளாதார வளா்ச்சிதான். அந்தப் பொருளாதார வளா்ச்சியை இந்த நிறுவனங்கள்தான் கொண்டுவர முடியும் என அரசு எண்ணினால் அரசாங்கத்தால் சந்தையை கட்டுப்படுத்த இயலாது. இதையும் சிப்லே சுட்டிக்காட்டத் தவறவில்லை.
  • ஓா் அமைப்பை நிறுவுவதற்கான சட்ட வரையறை, அந்த நிறுவனம் அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டது என்றுதான் கூறுகிறது. ஆனால் சக்திவாய்ந்த தொழில் நிறுவனங்கள் அரசுக்குக் கட்டுப்படுவது கிடையாது. காரணம், அரசு தங்கள் தயவில்தான் உள்ளது என்பதை நன்கு புரிந்து கொண்டு அவை செயல்படுகின்றன.
  • இன்று மக்களாட்சி என்பது நடைபெற்றாலும் அது மக்களுக்காக, மக்களின் தேவையில், மக்களின் சிந்தனையில் செயல்படுவதாக இல்லை. காரணம், அதில் நடக்கும் அரசியல், தோ்தல் அனைத்தும் நிறுவனங்களை நம்பியே இருக்கின்றன. இதுவே எதாா்த்தமான உண்மை.
  • இந்தச் சூழலில் ஒரு மக்களாட்சி இந்தச் சந்தைப் பிடியிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், அது மக்களை அதற்குத் தயாா் செய்ய வேண்டும். அந்தத் தயாரிப்புக்கு எதிராக செயல்படத் தேவையான ஊடகங்களை நிறுவனங்கள் தங்கள்வசம் வைத்திருக்கின்றன. இந்தச் சூழலில் என்ன செய்வது என்பதற்கும் பதில் இருக்கிறது இந்தக் கட்டுரையில்.
  • மக்கள் விரோத அரசு நடைபெறும்போது, ஒரு சில நிறுவனங்கள் இணைந்து, போராடும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் சூழல் வந்திடும். அதைப் பயன்படுத்தி குடிமைச் சமூக அமைப்புகள் இணைந்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். அதற்கு, எது நல்ல தொழில் நிறுவனம், எது நச்சு தொழில் நிறுவனம் என்பதை அறிந்துகொண்டு நாம் செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி (21 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்