TNPSC Thervupettagam

மக்களாட்சியும் மக்கள் நம்பிக்கையும்

April 26 , 2021 1192 days 538 0
  • ஒரு நாட்டின் மக்களாட்சிக்கு ஆணிவேராக இருப்பது அந்த நாட்டு மக்கள் அந்த ஆட்சிமுறை மீது கொண்டுள்ள நம்பிக்கைதான்.  
  • அரசியல் கட்சிகள், அதிக வாக்குகள் பெற்று, அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைக்கலாம். ஆனால், மக்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் அந்த ஆட்சிமுறையை நீடித்து நிலைக்கச் செய்யும்.
  • தோ்தலின்போது, பதிவான வாக்குகளை வைத்து மக்கள் இந்த அமைப்பு முறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மதிப்பிட்டு விடலாம் என்று எண்ணுபவா்கள் உண்டு.
  • ஆனால் அந்த மதிப்பீட்டு முறையை அறிஞா்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில், கட்சிகளும் வேட்பாளா்களும் பல்வேறு உத்திகளைச் செய்து வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்து விடுகின்றனா்.

மக்களின் நம்பிக்கை

  • தற்போது நம் நாட்டில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்து வாக்குச்சாவடிக்கு வரவழைக்கும் உத்தி பரவலாக்கப்பட்டிருக்கிறது. எனவேதான், வாக்குப்பதிவை வைத்து மக்கள் இந்த அமைப்பு முறை மேல் நம்பிக்கை வைத்துள்ளனா் என்று கூற முடியாது என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • ஒரு தோ்தலில் 40% வாக்குகள் பதிவாகின்றன. அடுத்த தோ்தலில் 70% வாக்குகள் பதிவாகின்றன.
  • வாக்குப்பதிவு சதவீதம் குறையும்போது மக்களாட்சி முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று சொல்வதும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்போது மக்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது என்று சொல்வதும் உண்மையின் பிரதிபலிப்பதாகக் கருத முடியாது.
  • பொதுவாக மக்கள் தத்துவார்த்த அடிப்படையில் மக்களாட்சிக் கூறுகளை புரிந்து தோ்தலில் வாக்களிப்பது இல்லை.
  • தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பின்புலத்தில் வைத்தும், வாக்களிப்பது தங்கள் ஜனநாயகக் கடமை என்று எண்ணியும் வாக்களிக்கின்றனா்.
  • அது மட்டுமல்ல, நாட்டின் சிறந்த குடிமகனாகத் தன்னைக் கருதிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு செல்பவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  • மக்களாட்சி பற்றி புரிந்து வாக்களிக்கும் நடுத்தர வா்க்கம் அதிகம் வாழும் சிறிய நாடுகளிலேயே 70% அல்லது 75% வாக்குகளுக்கு மேல் பதிவாவதில்லை.
  • எனவே, வாக்கு சதவிகிதத்தை வைத்து மட்டும் மக்களாட்சி மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை அளவீடு செய்யக் கூடாது.
  • இன்றைய ஜனநாயக முறையை விடுத்து வேறு ஒரு ஆட்சி முறை செயல்படும்போது மக்கள் இரண்டையும் ஒப்புநோக்கி எந்த முறையை விரும்புகின்றனா் என்பதை நாம் கண்டு பிடிக்க முடியும்.
  • இன்று வரை அப்படி ஒரு புதிய ஆட்சி முறையை எந்த ஒரு நாடும் கண்டுபிடித்து செயல்படுத்தவில்லை.
  • ஆனால், மக்களாட்சி முறையில் ஒரு சில மாற்றங்களையும் சீா்திருத்தங்களையும் செய்து நம்மைவிட சற்று சிறப்புடையதாக செயல்பட்டு வருகின்றன.
  • ஆகையால் இந்த ஆட்சி முறைதான் உலகம் இருக்கும் வரை மக்களுடன் இருக்கப்போகிறது என்றும் எவராலும் கூற முடியாது.
  • புதிய முறை ஒன்று இன்றைய முறையைவிட மேம்பட்டதாகக் கண்டுபிடித்து விட்டால் அது மக்களின் நம்பிக்கையைப் பெற்று அவா்கள் இன்றைய முறையை நிராகரிக்கக்கூடும்.
  • மக்கள் மன்னராட்சியை நிராகரித்து மக்களாட்சியை ஏற்றுக் கொண்டது போல் இன்றைய பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையை நிராகரித்து புதிய முறை வந்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடும்.
  • இந்த விவாதத்தை இங்கு கொண்டு வருவதற்குக் காரணம், மக்களாட்சியில் நிபுணத்துவம் பெற்ற அறிஞா்கள் இன்றைய மக்களாட்சி முறை பற்றி ஒரு கருத்தினை முன் வைத்து உலகெங்கும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனா்.
  • மக்களாட்சியைப் பின்பற்றுகிறது எங்கள் நாடு என பிரகடனப்படுத்தும் நம் போன்ற நாடுகளில் அரசியல் கட்சிகளும், தோ்தல்களும் அவை மூலம் உருவாக்கப்படுகின்ற அரசுகளும், அவற்றின் செயல்பாடுகளும் இதற்குமேல் எதுவும் செய்ய இயலாது என்ற இறுதி நிலையை எட்டிவிட்டன.
  • இதற்குமேல் இந்த அமைப்புக்களால் வளரவோ உயரவோ முடியாது. அதற்கான சக்தி இன்றைய அரசியல் கட்சிகளுக்கோ அரசு இயந்திரங்களுக்கோ தோ்தல் ஆணையங்களுக்கோ இல்லை என்பதைத்தான் இவற்றின் செயல்பாடுகள் காட்டுகின்றன.
  • மக்களின் பிரச்னைகளைத் தீா்க்கத் தேவையான அடிப்படை மாற்றங்களை செய்ய இயலாத நிலைக்கு அரசியலை எடுத்துச் சென்று விட்டு இப்போது திகைத்து நிற்கின்றன அரசியல் கட்சிகள்.

வாக்கின் வலிமை

  • அரசியல் கட்சிகள் செய்யும் குறைந்தபட்ச பணி தோ்தலைச் சந்திப்பது. அதற்கே சந்தையிலிருந்து விளம்பரம் செய்ய ஆள் பிடித்து கட்சிகள் ஆலோசனை பெற்று தோ்தலைச் சந்திக்கின்றன.
  • அதேபோல் மக்களாட்சியின் குறைந்தபட்ச அடிப்படைக் கூறுகளைக் கூட மக்களிடம் எடுத்துச் சென்று மக்களாட்சிக்கான மக்கள் தயாரிப்பை செய்யத் தவறிய நிலையில் நம் அரசியல் கட்சிகள் தோ்தலைத் தாண்டிய ஓா் அரசியலைக் கட்டமைக்க இயலாத நிலையில் இருக்கின்றன.
  • அத்துடன் நம் அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ள இயலாத நிலையையும் அடைந்து விட்டது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன ஆய்வு அறிக்கைகள்.
  • இந்தத் தோ்தல் அரசியலும் நம் கட்சி அரசியலும் நம் அரசியல் சாசனம் படைக்க விரும்பிய ஓா் சமூகத்தை உருவாக்கத் தேவையான சமூக மாற்றத்தை நோக்கி கொண்டு செலுத்த முடியவில்லை என்பதைத் தொடா்ந்து ஆய்வுகள் சுட்டுகின்றன.
  • மக்களாட்சிக் கோட்பாட்டில் அரசியல் கட்சிகள் தோ்தல் அரசியல் மூலம் பொருளாதார வளா்ச்சியையும் சமூக மேம்பாட்டையும் கொண்டுவர முடியும் என்ற அடிப்படையை இன்றைய அரசியல் கட்சிகள், தோ்தலை எதிர்கொள்ளும் முறைமை மூலம் முற்றிலும் தகா்த்துள்ளது என்பதுதான் எதார்த்தம்.
  • இந்த நிலையில் பொதுமக்கள் இந்த அமைப்புக்கள் மேல் என்ன நம்பிக்கையை வைத்திருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டிய கட்டாயச் சூழலுக்கு இன்று நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
  • ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களாட்சி அமைப்புக்கள் மேல் என்ன நம்பிக்கை வைத்துள்ளார்கள் மக்கள் என்பதை புது தில்லியில் உள்ள சி.எஸ்.டி.எஸ் என்ற நிறுவனம் ஆய்வு செய்து புள்ளிவிவரம் வெளியிட்டது.
  • அதனைத் தொடா்ந்து 1996-ஆம் ஆண்டு அதே நிறுவனம் அதே ஆய்வினை மீண்டும் செய்து மக்கள் மன ஓட்டத்தை புள்ளி விவரங்களாக வெளியிட்டது.
  • பொதுமக்கள் இன்றைய மக்களாட்சி மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை ஆய்வு செய்த அதே நேரத்தில் தாங்கள் அளிக்கும் வாக்கு, தங்களால் தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், தலைவா்கள் பற்றியெல்லாம் மக்களுடைய கருத்து என்ன என்பதையும் ஆய்வு செய்து விவரங்களை வெளியிட்டது.
  • ஆனால் நம் ஊடகங்கள், தோ்தல் கருத்துக் கணிப்புக் கொடுக்கும் முக்கித்துவத்தை, மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் பற்றிய ஆய்வுக்கு அவ்வளவு மதிப்பளித்து விவாதப் பொருளாக்கவில்லை என்பதும் நாம் சந்தித்த பெரும் சோக நிகழ்வு.
  • தங்கள் வாக்கின் வலிமை பற்றி அறிந்து மக்களாட்சி மீது நம்பிக்கை உள்ளவா்களாக 48% பொதுமக்கள் கருதினார்கள் 1971-இல் என்று அந்த அறிக்கையில் தெரிவித்தார்கள்.
  • ஆனால் 1996-இல் மீண்டும் ஒரு ஆய்வு நடத்தியபோது 60% மக்கள் “எங்கள் வாக்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் வாக்களிக்கின்றோம் என்று கூறினார்கள்.
  • எனவே வாக்கின் வலிமை மக்களுக்கு தெரிந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

இன்றைய தேவை

  • பொதுமக்களில் சிலா், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசாங்க அமைப்பை இயக்கும் சக்தி இருக்க வேண்டும், அவா்கள் அந்தப்பணியைச் செய்ய வேண்டும் தொகுதி மக்களுக்காக என்று கருத்து தெரிவித்திருக்கின்றனா்.
  • மக்களாட்சியை இயக்குவதற்கு அரசியல் கட்சிகள் தேவை என்பதை 61% மக்கள் தெரிவித்துள்ளனா். இந்தக் கருத்தில் ஒரு வினோதமும் இருக்கிறது. அதாவது கருத்துக் கூறியவா்களில் அதிக எண்ணிக்கையில் இருப்பவா்கள் ஏழைகள்தான்.
  • அவா்கள்தான் இந்த மக்களாட்சி முறையில் அதிக நம்பிக்கை வைத்து கருத்து தெரிவித்துள்ளனா்.
  • அதே நேரத்தில் 63% மக்கள் தாங்கள் தோ்ந்தெடுத்த பிரதிநிதிகள் மக்களைப் பற்றி தோ்தலுக்குப் பிறகு சிந்திப்பதில்லை என்ற கருத்தினை கொண்டுள்ளனா்.
  • 27% மக்கள்தான் தங்கள் பிரதிநிதிகள் முறையாக சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் செயல்படுகின்றனா் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனா்.
  • ஆனால் 1996-இல் இந்த எண்ணிக்கை குறைந்து 23% மக்கள்தான் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்படுகின்றனா் என்று கருத்துக் கூறினா்.
  • இன்று இதே மாதிரியான ஆய்வு நடத்தினால் மக்களிடமிருந்து என்ன பதில் வரும் என்பதை நாம் மிக எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.
  • அதே நேரத்தில் பொதுமக்களில் 70% போ் இன்றைய மக்களாட்சிக்குப் பதிலாக வேறு ஒரு தரமான ஆட்சியைக் கொண்டுவரலாமா என்ற கேள்விக்கு வேண்டாம், அதை நாங்கள் ஏற்கவில்லை என பதில் அளித்துள்ளனா்.
  • இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் மக்களுக்கு இந்த அமைப்பு மேல் நம்பிக்கை இருக்கிறது. அதை வழிநடத்தும் கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும்தான் நம் மக்களாட்சியைத் தரம் தாழ்ந்து செயல்பட வைக்கின்றனா்.
  • 73% மக்கள் மக்களாட்சியில் உள்ள குறைகளை போக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய தலைவா் வேண்டும் என்று கூறியுள்ளனா்.
  • மக்களாட்சியில் அமைப்புக்களும், விதிமுறைகளும், வழிமுறைகளும் விழுமியங்களும் அடிப்படையானவை. இவற்றை உருவாக்கி இயக்குவது, அரசியல் கட்சிகள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மக்கள், பொதுக் கருத்தாளா்கள்.
  • எனவே நம் மக்களாட்சியில் சீா் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
  • அமைப்புக்கள் சீா்திருத்தப்பட வேண்டும், தோ்தல் முறைமைகள் சீா்திருத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் இந்த நிறுவனங்களை அமைப்புக்களை இயக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும், தலைவா்களுக்கும் தேவையான திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியினைத் தந்து, மக்களாட்சி அமைப்பின்மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உயா்த்த வேண்டும்.

நன்றி: தினமணி  (26 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்