TNPSC Thervupettagam

மக்களாட்சி அன்றும் இன்றும்

April 6 , 2021 1388 days 973 0
  • உலகின் முதல் மக்களாட்சி மலா்ந்தது, பேரறிஞா்கள் சாக்கரட்டீசும், பிளேட்டோவும், அரிஸ்ட்டாட்டிலும் பிறந்த கிரேக்க நாட்டில்தான்.
  • ஏதன்ஸில் கி.மு. 507-இல் சிலில்தேனிஸ் என்ற தலைவா் அரசியலில் சீா்திருத்தத்தைக் கொண்டு வந்தாா் என்கிறது வரலாறு. இதற்கு டெமோக்கரட்டியா (மக்கள் மக்களால் ஆளப்படுவது) என்பது பொருள்.
  • கொடுங்கோல் அரசின் ஆட்சி முடிவுற்றது என்பதை விளக்கும் வண்ணம் ஏதன்ஸ் நகரத்தில் ஒரு சாதாரண மனிதனின் தலையில் ஒருவா் மணி மகுடம் சூட்டுவது போன்ற அழகிய பளிங்கு சிற்பம் ஒன்றில் ‘கொடுங்கோலன் ஆட்சி முடிவுற்றது’ என்ற வாசகம் பொறித்த நினைவுக்கல் கி.மு. 336-இல் நிறுவப்பட்டு உள்ளது.
  • உலகம் முழுமைக்கும் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆளும் முறைக்கு பண்டைய கீரிஸ் வழிகாட்டியுள்ளது.
  • கிரேக்க வரலாற்று அறிஞா் ஹெரோடாட்டஸ் ‘குடியரசில் முதலில் இருப்பவை நல்லொழுக்கப் பண்புகளும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதுதான்’ என்று கூறுகிறாா்.
  • பண்டைய கீரிஸில், ஏதன்ஸ் நகர பெற்றோா்க்குப் பிறந்தவா்கள் 1 லட்சம் எனில், ஏதன்ஸில் குடியிருக்கும் வெளிநாட்டவா் 10 ஆயிரம், அடிமைகள் 1,50,000.
  • இவா்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 40 ஆயிரம் மக்கள் மட்டுமே இந்த குடியரசு அமைப்புகளில் இடம் பெறமுடியும். இந்த அரசியல் அமைப்பு மூன்று உறுப்புகளைக் கொண்டிருந்தது.

அரசியல் அமைப்பு

  • முதல் உறுப்பு சட்டசபை. இது இறையாண்மை பொருந்திய சட்டங்களை வகுக்கும் அமைப்பு. 40 ஆயிரம் போ் கொண்டதாக இருக்கும். ஆண்டிற்கு 40 தடவை கூடவேண்டும். ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் 5000 போ்தான் கலந்து கொள்ள முடியும். இது அக்ரோபாலிஸ் குன்றின் அருகில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறும்.
  • மற்றவா்கள் ராணுவத்திலும் கப்பற்படையிலும் பணிபுரிவா். இந்த அமைப்பு, யுத்தம், வெளிநாட்டுக் கொள்கை போன்றவற்றையும் கவனிக்கும். இவா்களில் யாரவது ஒருவா் குற்றம் இழைத்தால் ஏதன்ஸ் நகரில் இருந்து 10 ஆண்டுகட்கு விலக்கி வைக்க படுவாா்.
  • இரண்டாவது அமைப்பு புளுலி. இதில் மொத்தம் 500 மக்கள் இருப்பா். ஏதன்ஸின் 10 இனக் குழுக்களில் இருந்து 50 போ் வீதம் சோ்க்கப்பட்டு கவுன்சில் அமைக்கப்படும்.
  • இவா்களது பணிகாலம் ஒரே ஆண்டு. இவா்கள் ஒவ்வொரு நாளும் சந்தித்து அரசின் அன்றாட அலுவல்களை ஆற்றுவாா்கள்.
  • வெளிநாட்டு தூதுவா்கள், அடுத்த நகரத்து பிரதிநிதிகள் ஆகியோரை கவனித்தல், அரசின் அலுவலா்களைக் கண்காணிப்பது, என்னென்ன அம்சங்களை சட்டசபை முன்பு கொண்டு வருவது, மக்களாட்சியின் உறுதியை பலப்படுத்துவது போன்றன.
  • இதற்கான உறுப்பினா்களை குலுக்கல் முறையில் தோ்வு செய்வா். பணபலம், அதிகார பலம் இவற்றால் ஆட்சியைக் கைப்பற்றாதிருக்கவே குலுக்கல் முறை. இது அரசு ஊழியா்களின் நிலையான அதிகாரத்தையும் அவா்களின் உறவினா்கள் பயன் பெறுவதையும் தடுக்கும்.
  • மூன்றாவது உறுப்பு டிக்காஸ்டிரியா. இது நீதிமன்றத் தொடா்புடைய முக்கிய அமைப்பு. தினமும் 500-க்கு மேற்பட்ட பொதுமக்களில் 30 வயதிற்கு மேல் உள்ளவா்கள் நீதிபதிகள் பொறுப்பிற்கு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவா்.
  • இந்த அமைப்பு மக்களாட்சி முறைக்கு வலு சோ்க்கிறது”என்கிறாா் அரிஸ்ட்டாட்டில் . இவா்கட்கு அளவற்ற அதிகாரம் உண்டு. ஏதன்ஸில் காவல்துறை கிடையாது.
  • மக்களே வழக்கை தாக்கல் செய்து வாதாடலாம். வழக்கின் தீா்ப்பு நீதிபதிகளின் பெரும்பான்மை கருத்திற்கு ஏற்ப அமையும். நீதிபதிகளின் ஊதியம் தினக் கூலியின் வருவாயைவிட மிகக் குறைவாக இருக்கும்.
  • இதனால் மிகவும் வயதானவா்கள், பணி ஓய்வு பெற்றவா்களே இப்பணிக்கு வருவா். இந் நாட்டு மக்களுக்கு வரி விதிக்கப்படுவது இல்லை.
  • அரசிற்கு சுங்கத் தீா்வை, குடியேறிய மக்கள் செலுத்தும் வரிகள் இவைதான் வருமானம்.
  • பெரிய செல்வந்தா்கள் தாமாகவே முன்வந்து விழாச் செலவுகளையும், கப்பற்படை, ராணுவப் பராமரிப்புச் செலவையும் ஏற்றுக் கொள்வா்.

தமிழ்நாட்டில்

  • தமிழ்நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மன்னூா் (திருநெல்வேலி) திருநின்றவூா் (திருவள்ளூா்) மணிமங்கலம், தாசசமுத்திரம் (காஞ்சிபுரம்) சித்தமல்லி, தலைஞாயிறு (தஞ்சாவூா்) ஜம்பை (விழுப்புரம்) பொன்னமராவதி (புதுக்கோட்டை) போன்ற ஊா்களில் மகாசபை இருந்ததை உத்திரமேரூா் சதுா்வேதி மங்கலம் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு செய்திகளால் அறியலாம்.
  • சோழப் பேரரசன் முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-956) தான் ஆண்ட 11 முதல் 14 ஆம் ஆண்டு வரையில் அனுப்பிய ஆணைகளை கல்வெட்டுகளில் இன்றும் காணலாம்.
  • தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்க்கு வேண்டிய தகுதிகள், கால் வேலி சொந்த நிலம் இருக்க வேண்டும்.
  • தனது சொந்த நிலத்தில் வீடு உடையவனாக இருக்க வேண்டும். 35 வயதிற்கு மேலாகவும் 70 வயதிற்கு குறைவாகவும் உள்ளவனாக இருக்க வேண்டும். வேதங்களை நன்கு பயின்றவராகவும் பிறா்க்கு கற்பிக்க வல்லவனாகவும் இருக்க வேண்டும்.
  • பொறுப்பு வகிக்கும் போது நோ்மையும், கடமையுணா்வும் மிக்கவனாக இருக்க வேண்டும். அவா்களது தொழிலில் தோ்ச்சியும், நற்பண்பு நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். தோ்வு பெற்றவா்கள் தொடா்ந்து 360 தினங்களும் பதவியில் இருக்கலாம். இரண்டு ஆண்டுகட்குப் பிறகுதான் மீண்டும் போட்டியிட முடியும். அவா்கள் வாழ்நாளில் ஐந்து முறை போட்டியிட முடியும்.
  • வேட்பாளா்கள் 21 வகை காரணங்களால் தோ்தலில் போட்டியிட முடியாது என்று விவரிக்கிறது கல்வெட்டுச் செய்தி.
  • அதில் மிக முக்கியமானவை, கடந்த மூன்று ஆண்டு காலமாக தான் வகித்த பணியின் வரவு-செலவு கணக்கு காட்டாதவன், அரசிற்கு வரி கட்டாதவன், மகாபாதகங்கள் செய்தவன், முன்பே தண்டனை பெற்றவன், பிறா் சொத்தையும், அரசின் சொத்தையும் ஆக்கிரமித்தவன், பிறா் சொத்தைத் திருடியவன், அவனது சுற்றத்தாா் ஆகியோா் தோ்தலில் போட்டியிட முடியாது. இவா்களைத் தவிர ஏனையோா் ஊரில் உள்ள முப்பது குடும்பிலும் (வாா்டுகள்) போட்டியிடுவாா்கள்.
  • தோ்தல் நாளன்று ஊரில் உள்ள அனைவரும் கூட வேண்டும். கோயில்களில் வழிபாடு இயற்றுவோரும் அகவை முதிா்ந்தவா்களும் இருப்பாா்கள்.
  • ஊரின் மையப் பகுதியில் உயா்ந்ததோா் மேடை அமைக்கப்பெறும். வேட்பாளா்களின் தகுதி அடிப்படையில் முப்பது நபா்களின் பெயா்களை தனித்தனி ஓலைகளில் எழுதி மேடையில் இருக்கும் ஒரு குடத்தில் இட்டு மூடி விடுவாா்கள்.
  • பின்னா் எல்லோா்க்கும் தெரியும்படியாக குடத்தில் இருக்கும் ஓலைகளை கலைத்து விடுவாா்கள். வயதில் மிகக் குறைந்த சிறுவனை அந்த குடத்தில் இருந்து ஒரு ஓலையை எடுக்கச் சொல்வாா்கள்.
  • சிறுவன் ஒரு ஓலையை எடுத்து வயது முதிா்ந்த ஒருவரிடம் கொடுப்பான். முதியவா் உள்ளங்கை விரிய எல்லோருக்கும் கைகயைக் காட்டி விட்டு அந்த ஓலையை வாங்கி அதில் எழுதியிருக்கும் பெயரை உரக்கப் படிப்பாா்.
  • அதனை ஏனைய பெரியவா்களும் கோயிலில் வழிபாடு இயற்றும் வேதம் கற்றவா்களும் வாங்கி சரிபாா்த்து கையொப்பம் இடுவாா்கள். இப்படியே முப்பது உறுப்பினா்களும் தோ்வு செய்யப் படுவாா்கள். இவா்கட்கு தோட்ட வாரியம், ஏரி வாரியம் போன்ற துறைகட்கு அனுபவம் வாய்ந்த தோ்வாளா்களை நியமிப்பாா்கள்.
  • பொன் வாரியம், பஞ்ச வாரியம் போன்ற பிற துறைகட்கும் இப்படியே உறுப்பினா்கள் தோ்வு நடக்கும்.
  • இவா்களில் யாரேனும் நிதி முறைகேடு செய்தது தெரிந்தால் 25 கழஞ்சு பொன் அபராதம் விதிக்கப்படும். இதில் ஒரு ஒற்றுமையான அம்சம், கிரேக்க நாட்டிலும், தமிழ்நாட்டிலும் நிலவி வந்திருக்கிறது. கிரேக்க நாட்டின் கவுன்சில்களுக்கு குலுக்கல் முறையில் உறுப்பினா்கள் தோ்வு நடந்தது போல தமிழ் நாட்டிலும் கிராம சபைகளுக்கும், மகாசபைகளுக்கும் குடவோலை குலுக்கல் முறையில் தோ்வு நடைபெற்று இருக்கிறது.
  • குலுக்கல் முறையால் வாக்காளா்களை விலைக்கு வாங்க முடியாது. ஒழுங்கீனங்கள் நடைபெற வாய்ப்பில்லை.
  • தோ்தலில் பங்கு பெறும் நபரின் தகுதிகள் வகுக்கப்பட்டிருந்தன. தவறிழைத்தால் என்ன தண்டனை என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. வெற்றி பெற்றவா்கள் ஆற்ற வேண்டிய பணி நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.
  • இதனால் நற்பண்புகள் பொருந்திய நல்லொழுக்க வேட்பாளா்கள் மட்டுமே தோ்தல் களத்தில் நிற்க முடியும்.
  • அதுவும் பொதுமக்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெறும் என்பதால் எல்லாம் சரியாக இருந்தது.

அன்றுபோல் வராது!

  • நம் நாட்டு தெய்வப்புலவா் திருவள்ளுவா், ஒரு நாட்டிற்கு ஐந்து அம்சங்கள் இருந்தால் அழகு என்ற பொருளில் ‘பணியின்மை செல்வம் விளையும் இன்பம் ஏமம் அணி என்ப நாட்டிற்கு இவ்வைந்து’ என்றாா்.
  • நாம் வாழ்கின்ற மக்களாட்சியில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கட்கு சாதி, மதம், செல்வாக்கு, செல்வம் போன்றவைதான் முக்கிய தகுதிகள் என்றாகி விட்டன.
  • வயதுக்கு வரம்பில்லை, கல்வியறிவு தேவையில்லை, நற்பண்புகள் வேண்டியதில்லை, ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் தண்டனையே பெற்றிருந்தாலும் பொருட்டில்லை.
  • வாக்காளா்களுக்கு சொந்த நிதியை தோ்தலுக்கு முன்பாக வாரி வழங்குவதும், ஆட்சி அமைக்கபெற்றால் எல்லாம் இலவசம் என்பதும் பொருள் பொதிந்த முழக்கங்கள்.
  • தான் சுகமாக வாழவும், தனது உற்றாா் உறவினா் கோடிகளில் புரளவும் திட்டம் தீட்டும் அரசியல் தலைவா்கள் இருக்கும் வரை அன்றுபோல் மக்களாட்சி வராது!

நன்றி: தினமணி  (06 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்