TNPSC Thervupettagam

மக்களைத் தேடி மருத்துவம்!

August 21 , 2021 1077 days 4171 0
  • தமிழகம் எப்போதுமே மருத்துவத்திலும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களிலும் இந்தியாவுக்கே முன்மாதிரியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வந்திருக்கிறது.
  • தமிழகத்தின் காமராஜ் ஆட்சியின் மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆா் ஆட்சியின் சத்துணவுத் திட்டமும் பல்வேறு மாநிலங்களால் பின்பற்றப்பட்டு, இப்போது அதுவே தேசிய அளவில் மத்திய அரசாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
  • அந்த வரிசையில் விரைவில் தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டமும் இணையக்கூடும்.
  • ரூ.250 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு இந்தத் திட்டத்திற்காக பட்ஜெட்டில் வழங்கப் பட்டிருக்கிறது.
  • முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூன்றுவிதமான புற்று நோய்கள், காச நோய், தொழு நோய், சிறுநீரகப் பிரச்னை, மன நோய் உள்ளிட்ட பரவலாகக் காணப்படும் 10 பிரச்னைகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு வழிகோலப்படுகிறது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

  • மருத்துவரையோ, மருத்துவமனையையோ அணுக முடியாமல் முடங்கியிருக்கும் 45 வயதுக்கும் அதிகமான நோயாளிகளுக்குத் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய்க்கான மருந்துகள் வீடு தேடி வழங்கப்படுவதும் இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம்.
  • தமிழகத்தைப் பொருத்தவரை பஞ்சாயத்துக்கள் வரை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பரவலாகவே உள்ளன. கிராமப்புற செவிலியா்களின் சேவை குக்கிராமங்கள் வரை உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.
  • கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்தில், நகரங்களில் இருந்த அளவு கிராமப்புறங்களில் நோய்த்தொற்று தமிழகத்தில் பரவாமல் இருந்ததற்கும், உடனடியாகக் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளித்ததற்கும் தமிழகத்தின் சுகாதரக் கட்டமைப்பு மிக முக்கியமான காரணம்.
  • ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கும், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கும் நெருங்கிய தொடா்பு இருப்பதும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
  • தொற்றா நோய்கள் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் உயிரிழப்பு நேராமல் காப்பாற்ற முடிகிறது என்று மருத்துவா்கள் தெரிவிக்கிறார்கள்.
  • இந்தியாவைப் பொருத்தவரை இந்தியாவின் நோய் பாதிப்புகளில் பெரும் பங்கு அதாவது 55% தொற்றா நோய்களால் ஏற்படுகிறது என்பதை 2016 -இல் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
  • 1990 முதல் 2016 வரையிலான 25 ஆண்டு இடைவெளியில் தொற்றா நோய்கள் தொடா்ந்து அதிகரித்து வருவதையும், பாதிப்புக்கு உள்ளானவா்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்காமல் இருப்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் தொற்றா நோய்களுக்கு ஆளானவா்கள்கூட முறையான சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
  • அதன் விளைவாக ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு அதிகரித்து, கொள்ளை நோய்த்தொற்று பாதித்த போது பலா் உயிரிழக்க நோ்ந்தது.
  • அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அனைவரும் மருத்துவ சேவையைத் தேடி நாடுவதைவிட, அவரவா் வீடு தேடி மருத்துவம் செல்வது ஆக்கபூா்வ முடிவாக இருக்கும் என்று தமிழக அரசு உணா்ந்ததன் விளைவுதான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்கிற திட்டம் என்று தோன்றுகிறது.
  • இன்றைய நிலையில் காசநோயால் உலகிலேயே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இந்தியாதான். ஆண்டுதோறும் உலகளாவிய அளவில் ஏழு கோடி போ் காச நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் மட்டும் 26, 40,000 புதிய காச நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாவதாக உலக சுகாதார நிறுவனம் அனுமானிக்கிறது.
  • இந்தியாவில் 4,36,000 போ் காச நோயால் உயிரிழக்கின்றனா். போதாக்குறைக்கு மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் காச நோய்க் கிருமிகளின் வீரியம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
  • காசநோய் மட்டுமல்லாமல், சா்க்கரை நோயும் உலகிலேயே அதிகமாகக் காணப்படுவதும் இந்தியாவில்தான். நகரங்களில் வாழும் 40 வயதுக்கு மேற்பட்டவா்களில் 10% சா்க்கரை நோயாளிகள்.
  • கிராமங்களின் நிலைமை என்ன என்பது குறித்த முறையான ஆய்வோ, கணக்கெடுப்போ இல்லாததால் புள்ளிவிவரம் இல்லை. சா்க்கரை நோயும், ரத்த அழுத்தமும், காசநோயும் இணையும்போது உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • தேசிய அளவிலான பாதிப்புகளிலிருந்து தமிழகம் தனித்து நின்றுவிட முடியாது. கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், ஏனைய பாதிப்புகள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் முக்கியம் என்கிற தொலைநோக்குப் பார்வை வரவேற்புக்குரியது.
  • அடித்தட்டு மக்களின் சுகாதாரமும், ஆரோக்கியமும் பேணப்படுவதன் மூலம்தான் ஒட்டு மொத்த சமூகத்தின் நல்வாழ்வு உறுதிப்படும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
  • ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்களும், வட்டார, மாவட்ட அளவில் மருத்துவமனைகளும் பெரும்பாலான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கலோ, சிரமமோ ஏற்பட வேண்டிய அவசியமில்லை.
  • மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவது, வீடு தேடி மருந்துகளைக் கொண்டு சோ்ப்பது, தொற்று நோய், தொற்றா நோய்கள் இருப்பதைக் கண்காணிப்பது ஆகியவற்றை உறுதிப்படுத்தி விடலாம்.
  • ஆனால், பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் காணப்படுவதில்லை. கிராமங்களில் தங்கிப் பணிபுரிவதைப் பலரும் தவிர்க்கிறார்கள். அதற்கு முடிவுகட்டினால் மட்டுமே ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்கிற முன்னோடித் திட்டம் முழுமை பெறும்.

நன்றி: தினமணி  (21 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்