- பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கடந்த ஆண்டு பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
- இந்த ஆண்டு தொடக்கத்தில், கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்கின. ஜூன் 2022 வரையில் மாவட்ட எல்லைகளைத் திருத்தியமைக்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்டது நான்காவது முறையாகும்.
- இதற்கு முன்பு, முதன்முறையாக ஜனவரி 1, 2020 தொடங்கி மார்ச் 31, 2020 வரையில் மாவட்ட மறுவரையறைக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்தக் கால அளவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருகிறது.
- மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்னால், மாவட்ட மறுவரையறைகளை நிறுத்திவைப்பது ஒரு கட்டாய விதிமுறையாகும்.
- ஆனால், கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக இன்னமும் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை.
- கடந்த 2011-ல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது இந்தியா முழுவதும் மொத்தம் 640 மாவட்டங்கள் இருந்தன. தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கையில் மேலும் 100 கூடியிருக்கிறது.
- இந்த முறை நடக்கவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளோடு தேசியக் குடியுரிமைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணியும் சேர்த்து மேற்கொள்வதற்குத் திட்டமிடப் பட்டது என்றாலும், சில மாநிலங்கள் அதற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று உறுதிபடத் தெரிவித்து விட்டன.
- மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கான உத்தேசச் செலவு ரூ.8,700 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
- கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இது அதிக செலவைக் கோருகிற திட்டமாக இருந்தாலும், இந்தியாவின் சமூக, பொருளாதார நிலையைப் பற்றி வெவ்வேறு கோணங்களில் தெளிவான தரவுகளைத் தொகுப்பதற்கான ஒரே வழிமுறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பே இருந்துவருகிறது.
- பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகிற இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் விவரங்கள், இந்தியாவுக்கு வெளியிலுள்ள மக்கள்தொகையியலர்களாலும்கூட தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
- கட்டுப்பாடற்ற வகையில் பல்கிப் பெருகும் இந்திய மக்கள்தொகை எப்போதும் ஒரு விவாதப் பொருளாகவே இருந்துவருகிறது.
- இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தபோதும், குறிப்பிடத்தக்க வகையில் எந்தப் பலனும் இல்லை.
- உலகில் சராசரியாக ஆறு நபர்களில் ஒருவர் இந்தியர் என்ற மதிப்பீடு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள பெரும் பொறுப்பை உணர்த்துகிறது.
- அதே நேரத்தில், ஐரோப்பிய நாடுகளில் மக்கள்தொகை குறைந்துவரும் நிலையில், இந்தியாவில் மக்கள்தொகை அதிகரிப்பதை மனிதவளமாகப் பார்க்க வேண்டும் என்ற பார்வையும் நிலவுகிறது.
- மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு மதரீதியான சாயங்களும் கூட பூசப்படுகின்றன.
- மக்கள்தொகையில் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களின் விகிதாச்சாரம் நிலையானதாக இருக்க வேண்டும் என்ற கருத்துகளும் உண்டு.
- மக்கள்தொகைக் கணக்கெடுப்பால் மட்டுமே இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சரியான ஒரு பதிலைக் கொடுக்க முடியும்.
- பெருந்தொற்றுக் காலத்தில் மக்களை அணுகித் தகவல்களைப் பெறுவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்தக் கணக்கெடுப்பை இணையவழியில் மேற்கொள்வது பற்றியும்கூடப் பரிசீலிக்கலாம்.
நன்றி: தி இந்து (09 – 02 – 2022)