TNPSC Thervupettagam

மக்கள் தொண்டு முருகன் தொண்டு

August 25 , 2024 95 days 123 0

மக்கள் தொண்டு முருகன் தொண்டு

  • ஆன்மிக நாட்டமும் சமூகநல அக்கறையும் ஒன்றுதான் என்பதை வெளிப்​படுத்தும் வகையில் அடியார்கள் பலர் நமது மண்ணில் வாழ்ந்​தனர். சமூகமோ, அரசோ தடம் மாறும்​போது, அதைத் திருத்துவது தம் கடமை எனவும் அவர்கள் எண்ணினர். இந்தப் பண்பு​களுக்கு உடனடி உதாரணங்களாக ராமலிங்க வள்ளலார், குன்றக்குடி அடிகளார் எனச் சில ஆன்றோர்கள் நமது நினைவுக்கு வருவர். முருக​னடி​யார்கள் வரிசையில் அத்தகைய ஆளுமைகள் சிலரைக் காண முடியும்.

ஓலைச்​சுவடியில் உறங்கும் பாடல்கள்

  • திருநெல்​வேலியில் 1839இல் பிறந்தவர் வண்ணச்​சரபம் தண்டபாணி சுவாமிகள். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். மிக இளம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் இவருக்கு இருந்தது. தண்டபாணி சுவாமிகள், திருவா​மாத்​தூரில் கௌமார மடத்தை நிறுவினார். பல வகையான யாப்பு வடிவங்​களில் செய்யுள்களை இயற்றினார். வண்ணம் என்கிற வடிவத்தில் பாடல் இயற்றும் தேர்ச்சி பெற்றிருந்​த​தால், ‘வண்ணச்​சரபம்’ என்கிற அடைமொழியைப் பெற்றார். 1898இல் இறந்தார். இவர் எழுதிய ‘புலவர் புராணம்’ 72 புலவர்​களின் வரலாற்றைப் பதிவுசெய்​கிறது. தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்​தார். தமிழ் எழுத்து​களின் இயல்பை உணர்த்​தும்​விதத்தில் வருக்கக் குறள் என்கிற நூலும் உதடுகளைக் குவித்து உச்சரிக்​கப்​படும் தமிழ் எழுத்து​களைக் குறித்து குவிபா ஒருபது என்னும் நூலும் தமிழ் அலங்காரம் என்கிற நூலும் இவர் எழுதியவை.
  • ஆங்கிலேயர்களை எதிர்த்து இவர் பாடிய நூல், ‘ஆங்கி​லியர் அந்தாதி.’ சைவம், வைணவம் என இரண்டு பிரிவு​களையும் ஏற்றுக்​கொள்ளும் விதத்தில் ஒரு கையில் சூலச் சின்னமும் இன்னொரு கையில் சக்கரச் சின்னமும் வரைந்​திருப்​பார். சாதியின் பெயரால் பிரிவினைக்கு உள்ளா​கா​திருப்பது, கைம்பெண் திருமணம் போன்ற​வற்றைத் தன் பாடல்கள் வழியே இவர் ஆதரித்​தார். இவர் எழுதிய பாடல்​களில் சரிபாதி இன்னும் அச்சேற​வில்லை. அவை இன்னும் ஓலைச்​சுவடிகளாகவே கோவை சரவணம்​பட்டி கௌமார மடாலயத்தில் இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. அவற்றை அச்சில் ஏற்றி நூல்களாகக் கொண்டுவர இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரையைத் துதிக்​காதீர்

  • 1870இல் பவானி அருகில் உள்ள பூதநாச்சி என்னும் ஊரில் பிறந்தவர் திருப்புகழ் சுவாமிகள். இவருக்கு வள்ளிமலை சச்சி​தானந்த சுவாமிகள் எனவும் பெயர் உண்டு. படிப்பில் நாட்டம் இல்லாத​தால், தொடக்கக் கல்வியைக்கூட இவர் பெறவில்லை. இல்லற வாழ்க்கையில் துயரமும் வயிற்று​வலியும் இவரை வருத்தின. பழநியில் உள்ள முருகன் கோயில் அருகே நீண்ட காலம் தங்கி, இறைவனுக்குப் பணிசெய்து, நிவேதனப் பொருள்களை உண்டு வந்த இவருக்கு வயிற்று வலி நீங்கியது. அங்கே ‘திருப்புகழ்’ பாடப்​படு​வதைக் கேட்டு, அதைப் பாடும் ஆவலும் இவருக்கு ஏற்பட்டது. திருப்பு​கழைப் பரப்பும் பணியில் ஈடுபட்​டார். தமிழகத்தின் பல பகுதி​களுக்குத் திருப்புகழ் பாடல்​களைக் கொண்டுசேர்த்​த​தால், இவர் ‘திருப்புகழ்’ சுவாமி என அழைக்​கப்​பட்​டார். இவர் அமைத்த ஆசிரமம், வேலூர் மாவட்​டத்தில் உள்ள வள்ளிமலையில் உள்ளது.
  • ஆங்கிலேயர் ஆட்சி​யின்​போது, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில் துரைமார்​களின் வீட்டுக்குச் சென்று அரசு ஊழியர்கள், செல்வந்​தர்கள் உள்ளிட்ட மக்கள் வாழ்த்தும் வழக்கம் இருந்தது. ஆங்கிலேயர் மீதான அடிமைத்​தனத்தை வளர்க்கும் இந்த வழக்கத்தை திருப்புகழ் சுவாமிகள் எதிர்த்​தார். புத்தாண்டு அன்று துரையைக் காண்ப​தற்குப் பதிலாக முருகன் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை இவர் அறிமுகப்​படுத்​தினார். அதைச் செயல்​படுத்​தும்​வித​மாகத் தம்மைப் பின்பற்றுவோர் சிலருடன், 1918இல் புத்தாண்டு அன்று திருத்தணி கோயிலுக்குச் சென்று திருப்புகழ் பாடி வழிபட்​டார். அந்த வழக்கம், ‘திருத்தணி படி விழா’ என்ற பெயரில் நூறு ஆண்டு​களைக் கடந்தும் பக்தர்​களால் நடத்தப்​படு​கிறது. அந்த வழக்கத்​துக்குப் பின்னணி, ஆங்கிலேயர் ஆட்சிக்கான எதிர்ப்பு​தான்.

தனித்​தமிழ் நாட்டம்

  • ராமநாத​புரம் அருகில் உள்ள பாம்பனில் பிறந்தவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். இவரது இயற்பெயர் அப்பாவு. இவர் 1848இல் பிறந்தவர் எனக் கூறப்​படு​கிறது. தமிழ், வடமொழி இரண்டிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்​தார். இவர் இயற்றிய பல நூல்களில் ‘சண்முகக் கவசம்’ பக்தர்​களிடையே போற்றப்​படும் ஒன்று. அன்றாட வாழ்க்கையில் பல வகைகளில் நேரும் கேடுகள் வாராமல் முருகன் காக்க வேண்டும் என இப்பாடல் வழியே வேண்டப்​படு​கிறது. வட மொழியில் பாடல்கள் எழுதி​யிருப்​பினும், தாய்மொழியான தமிழைப் போற்று​பவராக பாம்பன் சுவாமிகள் இருந்​தார். தமிழும் வட மொழியும் கலவாமல் எழுத்​துநடை சாத்தி​யமற்ற அக்காலத்​தில், வட மொழிச் சொற்கள் சிறிதும் இன்றி தமிழ்ச் சொற்கள் மட்டுமே கொண்டு ‘சேந்தன் செந்தமிழ்’ என்கிற நூலை இவர் இயற்றினார். 1906இல் இம்முயற்சி மேற்கொள்​ளப்​பட்டது. பிற மொழிச் சொற்கள் கலவாமல் எழுதும் போக்குக்கு இவர் முன்னோடி எனலாம்.
  • பூஜை, சடங்கு, சம்பிர​தா​யங்​களுக்கு அப்பாற்​பட்டுக் கடவுளை அணுகும் பார்வை இந்த அடியார்​களுக்கு இருந்தது. கடவுளுக்குச் செய்யும் தொண்டும், சமூகத்​துக்குச் செய்யும் தொண்டும் வேறு வேறு இல்லை என்பதே இவர்களது வாழ்க்கையின் சாரம். இத்தகைய ஆன்றோரின் கருத்து​களுக்குப் பொருத்தமான துறைகளில் இடமளிப்பதை அரசு தன் கொள்கை​யாகக் கொண்டிருப்பதை உறுதிப்​படுத்துவதாக ‘முத்​தமிழ் முருகன் மாநாடு’ அமைய வேண்டும். கடவுள் தொண்டுடன், சமூகத் தொண்டுக்கும் பேர் போன முருக மடங்களின் இன்றைய நிலையைக் கவனித்து, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று​வ​திலிருந்து அரசு தன் பணியைத் தொடங்​கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்