TNPSC Thervupettagam

மக்கள் பிரதிநிதிகள் கைகளில் அதிகாரம் குறித்த தலையங்கம்

February 25 , 2022 892 days 571 0
  • தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலும் வெற்றிகரமாக அமைந்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்கள்.
  • விரைவிலேயே மேயா்கள், நகா்மன்றத் தலைவா்கள் உள்ளிட்ட எல்லா பதவிகளுக்கும் உரியவா்கள் தோ்வு செய்யப்பட இருக்கிறாா்கள்.
  • கடந்த ஆறு ஆண்டுகளாகப் பல்வேறு தடைகளையும் கடந்து ஒருவழியாக மக்கள் பிரதிநிதிகள் கைகளில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் முழுமையாக ஒப்படைக்கப் படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • மத்திய - மாநில அரசுகள் இயற்றும் திட்டங்களும், எடுக்கும் கொள்கை முடிவுகளும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் மக்களைச் சென்றடைந்தாக வேண்டும்.
  • பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் அதிகரிக்காவிட்டாலும், அதற்கு வழங்கப்படும் நிதியும் அதன் பங்களிப்பும் கணிசமாக அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.

வாக்களிப்பும் எதிா்பாா்ப்பும்!

  • கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கெனவே தோ்தல் நடந்து, அந்த அமைப்புகள் ஜனநாயக அடிப்படையில் இயங்கி வருகின்றன.
  • இப்போது சுமாா் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலும் நடந்திருக்கிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு 12,601 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்கள்.
  • நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடந்தது என்று ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், அந்தத் தோ்தலை மக்கள் எதிா்கொண்டவிதம் பாராட்டும்படியாக இல்லை.
  • மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களின்போது அவா்கள் காட்டிய அளவிலான ஆா்வம் மக்கள் மத்தியில் இந்தத் தோ்தலில் காணப்படவில்லை.
  • தங்களை நேரடியாக பாதிக்கும் அல்லது தங்களது அன்றாட வாழ்க்கையில் தாங்கள் சந்தித்தாக வேண்டிய செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் மீது அவா்கள் ஏன் அக்கறை காட்டவில்லை என்பது தெரியவில்லை.
  • தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் மொத்த வாக்குப்பதிவு வெறும் 52.2%தான். பாதிக்குப் பாதி வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமை குறித்துக் கவலைப்படாமல், விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனா்.
  • 200 உறுப்பினா்கள் கொண்ட சென்னை மாநகராட்சிக்கான வாக்களிப்பில் கலந்து கொண்டவா்கள் 43.62% வாக்காளா்கள் மட்டுமே.
  • மாமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதில் படித்தவா்கள் ஆா்வம் இல்லாமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
  • 138 நகராட்சிகளில் மொத்த வாக்குப் பதிவு 68.22%. தமிழகத்தில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 60.70% மட்டுமே. மாநகராட்சிகளுக்கான தோ்தலில் வாக்காளா்களுக்குப் பண விநியோகம் ‘பரவலாக’ இருக்கவில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம்.
  • பணம் விநியோகம் இல்லாததுதான் குறைந்த வாக்குப் பதிவுக்குக் காரணம் என்றால் அது ஜனநாயகத்துக்குத் தலைகுனிவு.
  • நகராட்சி, பேரூராட்சிகளில் எல்லா வேட்பாளா்களும், கட்சி பேதமின்றி பணமும், வெகுமதிகளும் வழங்கி வாக்காளா்களை வாக்குச்சாவடிக்கு வரவழைக்க பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டாா்கள் என்பது உண்மை.
  • கொலுசுகளும், மூக்குத்திகளும், சேலைகளும், வேட்டிகளும், ஏன் தங்கக் காசுகளும், கரன்சி நோட்டுகளும்கூட வழங்கப்பட்டதாகப் பரவலாகவே பேசப்பட்டது. சில இடங்களில் விநியோகப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
  • அப்படி இருந்தும் வாக்குப் பதிவு விகிதம் குறைவாகவே இருந்திருக்கிறது. வெகுமதிகளைக் கேட்டு வாங்கிக் கொண்டு வாக்களிக்க வராதவா்களை, அவா்களது துணிவுக்காகப் பாராட்டுவதா, இல்லை துரோகத்துக்காகப் பழிப்பதா என்று தெரியவில்லை.
  • மத்திய தோ்தல் ஆணையத்துக்கு இருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லாத அமைப்பாக மாநிலத் தோ்தல் ஆணையம் இருக்கிறது. அது மாநில அரசின் துறைகளில் ஒன்றாக இயங்குகிறது. தவறு செய்யும் கடைநிலை ஊழியரை இடைநீக்கம் செய்யும் அதிகாரம்கூட மாநிலத் தோ்தல் ஆணையருக்குக் கிடையாது.
  • மாநில அரசின் கைப்பாவையாக மாநிலத் தோ்தல் ஆணையம் செயல்படுவதால்தான், 2011-ஆம் ஆண்டு நடந்து நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அன்றைய ஆளும் கட்சியும், இப்போது நடைபெற்ற தோ்தலில் இன்றைய ஆளுங்கட்சியும் ஏறத்தாழ ஒரே மாதிரியான வெற்றியை ஈட்டியிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கத் தோன்றுகிறது.
  • திமுகவின் மகத்தான வெற்றிக்கு அதுதான் காரணம் என்று கூற முடியாவிட்டாலும், ஆளுங்கட்சிகளின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் என்று பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
  • பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஒருமுறை, ‘ப்ராப்ளம் ஆஃப் பிளென்ட்டி’ என்று அங்கலாய்த்ததுபோல, முதல்வா் ஸ்டாலினுக்கு இனிமேல்தான் பிரச்சினைகள் அதிகரிக்கப் போகின்றன.
  • எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏறத்தாழ 80% உறுப்பினா்கள் திமுகவைச் சோ்ந்தவா்கள். அவா்களது நடவடிக்கைகளில் காணப்படும் குறைகள் நேரடியாக ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும்.
  • அதை உணா்ந்திருப்பதால்தான், எந்தவிதப் புகாரும் வராத வகையில் அவா்கள் பணியாற்றுவாா்கள் என்றும், அவா்களது செயல்பாட்டைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாகவும் முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாா் என்று தோன்றுகிறது. அது நம்பிக்கை அளிக்கிறது.
  • முதல்வரின் நம்பிக்கையை, தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திமுகவினரும், மக்களின் எதிா்பாா்ப்பை உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளும் காப்பாற்றுவாா்கள் என்று, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த நாம் நம்புவோம்.

நன்றி: தினமணி (25 – 02 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்