TNPSC Thervupettagam

மக்கள் மனங்களை வென்ற வேட்பாளர்

September 22 , 2024 65 days 91 0

மக்கள் மனங்களை வென்ற வேட்பாளர்

  • அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. அதிபர் பதவிக்காகக் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சார்பாக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.
  • முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். வயது மூப்பு சார்ந்த விமர்சனங்கள் ஜோ பைடன் மீது வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வேட்புமனுவை பைடன் திரும்பப்பெற்றார். அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி அறிவித்தது.
  • இந்தியா - ஜமைக்கா குடும்பப் பின்னணியைக் கொண்டவர் கமலா ஹாரிஸ். அந்த வகையில் ட்ரம்ப்பின் இனவாத அரசியலை எதிர்க்கும் வலுவான போட்டியாளராகவே கமலாவை அரசியல் நிபுணர்கள் பார்த்தனர். வல்லுநர்களின் கணிப்பிற்கு வலுசேர்க்கும் வகையில் கமலாவின் வருகை அதிபர் தேர்தல் களத்தைப் பரபரப்பானதாக்கியது.

தொடரும் பாலினத் தாக்குதல்

  • அமெரிக்க அதிபர் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் மீது ஆக்கப்பூர்வமான எந்த விமர்சனத்தையும் ட்ரம்ப் முன்வைக்கவில்லை. மாறாக, கமலாவின் மீது வழக்கமான இன ரீதியான தாக்குதலைத் தொடுப்பதிலேயே ட்ரம்பின் கவனம் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
  • அக்குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதத்தில் பிரச்சாரக் கூட்டங்களில் ஆதிக்க மனநிலையோடு ட்ரம்ப் வெளிப்படுத்திய உடல்மொழி, முகம் சுளிக்கும்படி அமைந்து விவாதத்துக்கு உள்ளானது.
  • சமீபத்தில் வடக்கு கரோலினா மாகாணத்தில் குடியரசுக் கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “கமலாவை யாருக்கும் பிடிக்கவில்லை; அவர் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது நாட்டிற்கே பெரும் அவமானம்” எனக் கூறினார். இதில் கமலாவின் பெயரை வேண்டுமென்றே பலமுறை எள்ளல் கலந்த தொனியில் தவறுதலாக உச்சரித்தார். பிற தலைவர்கள் ட்ரம்ப்பின் உச்சரிப்பைத் திருத்தியபோது ட்ரம்ப் அதை ஏற்கவில்லை.
  • இதற்கு முன்னரும் பிரச்சாரக் களத்தில் கமலாவை, ‘அவர் ஒரு பைத்தியக்காரப் பெண், மோசமானவர்’ என அரசியல் நாகரிகமற்ற சொற்களை ட்ரம்ப் பொதுவெளியில் எவ்விதத் தயக்கமுமின்றிப் பயன்படுத்தினார்.
  • ட்ரம்ப்பின் இத்தகைய வெறுப்புப் பேச்சு தீவிரமாகப் பரவ, “பெண்கள் எவ்வளவு உயரிய பதவிகளை அடைந்தாலும் இனம், நிறம், பாலினம் சார்ந்து விமர்சிக்கப்படுவது தொடர்கிறது” என கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகப் பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் பலரும் குரல் கொடுத்தனர்.

கமலாவின் எதிர்வினை

  • ஜோ பைடனுடன் ஒப்பிடுகையில் தேர்தல் பிரச்சாரங்களில் கமலா ஹாரிஸ், ட்ரம்பிற்குக் கடும் சவாலாக இருக்கிறார். ட்ரம்ப்பின் கேலி, கிண்டல்களை ஒதுக்கிவைத்துத் தரவுகள் மூலம் தன் விவாதத்தை முன்நகர்த்தி வருகிறார் கமலா ஹாரிஸ்.
  • அதிபர் தேர்தல் நேரடி விவாதத்தில் ட்ரம்ப் - கமலா பங்கேற்றபோது பிரச்சாரங்களில் ட்ரம்ப் பயன்படுத்திய வசவு மொழிகளை மறந்து, முதலில் கை குலுக்கி விவாதத்தைத் தொடங்கிவைத்தார் கமலா. விவாதத்தில் இன, பாலின ரீதியாக ட்ரம்ப் தன்னை வசைபாடியபோது பதற்றம் அடையாமல் அரசியல் நாகரிகத்துடன் கமலா ஹாரிஸ் பதிலளித்தார். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் ட்ரம்ப்பைவிட கமலா ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்கின்றனர் கமலா ஆதரவாளர்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்