TNPSC Thervupettagam

மங்கள்யானின் பயண நிறைவு

October 18 , 2022 662 days 392 0
  • தேசம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு இடையில் உலக அளவில் இந்தியாவைத் தலைநிமிா்ந்து பெருமைப்பட வைக்கும் சாதனைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
  • செவ்வாய் கிரகத்துக்கான தனது எட்டாண்டு பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வரலாறாகி இருக்கிறது மங்கள்யான். இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) மற்றொரு சாதனையாக நிலைபெறுகிறது ‘மங்கள்யா’னின் பயண நிறைவு.
  • 2013 நவம்பா் 5-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ஏவுகணையின் மூலம் விண்வெளியில் செலுத்தப்பட்டது ‘மங்கள்யான்’ விண்கலம். அடுத்த ஓா் ஆண்டுக்குள் செவ்வாயின் புவியீா்ப்பு எல்லையைச் சென்றடைந்தது. ரூ. 450 கோடி செலவில் விண்வெளியில் இஸ்ரோவால் செலுத்தப்பட்ட ‘மங்கள்யான்’, செவ்வாய் கிரகத்தை சென்றடைந்ததேகூட வல்லரசு நாடுகளை வியந்து நோக்க வைத்தது.
  • மனித இன விண்வெளி ஆய்வின் முதல் படியாக கருதப்படுகிறது செவ்வாய் கிரகத்துக்கான பயணம். செவ்வாயில் நிலவும் சூழல், அந்த கிரகத்தின் நீராதாரம், அதன் பூகோள அமைப்பு உள்ளிட்டவை குறித்து தெரிந்துகொள்வதுதான் ‘மங்கள்யா’னின் நோக்கம்.
  • செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான தட்பவெப்ப நிலை, தேவையான நீராதாரம் போன்றவை காணப்படுகிா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வந்த நிலையில், இந்தியாவும் தனது பங்குக்கு, எந்தவொரு அந்நிய சக்தியின் உதவியும் இல்லாமல் செலுத்திய விண்கலம்தான் அது.
  • பல முயற்சிகள் தோல்வி அடைந்த பிறகுதான் அமெரிக்கா, ரஷியா தொடங்கிய வல்லரசு நாடுகளால் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்ப முடிந்தது. ஆனால், முதல் முயற்சியிலேயே இந்தியாவால் இலக்கை எட்ட முடிந்தது என்பது மிகப் பெரிய வெற்றி. அதன் பிறகுதான் உலக நாடுகள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை வியந்து பாராட்டத் தலைப்பட்டன.
  • ‘சிவப்பு கிரகம்’ என்று அழைக்கப்படும் செவ்வாயை ஒருமுறை சுற்றிவர ‘மங்கள்யா’னுக்கு 76.72 மணி நேரம் பிடித்தது. ஆறு மாதங்கள்தான் ‘மங்கள்யான்’ தாக்குப் பிடிக்கும் என்றுதான் ஆரம்பத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்தனா்.
  • ஆனால், ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் சற்றும் சளைக்காமலும், எந்தவிதப் பின்னடைவையும் சந்திக்காமலும் செவ்வாய் கிரகத்தில் ‘மங்கள்யான்’ தன்னுடைய பணியைத் தொடா்ந்ததை மிகப் பெரிய வெற்றி என்று கொண்டாடுவதில் நியாயம் இருக்கிறது. அவ்வப்போது ஏற்பட்ட கிரகணங்களால் ‘மங்கள்யா’னின் மின்கலன்களின் வீரியம் குறையாமல் இருந்திருந்தால், மேலும் சில ஆண்டுகள்கூட தனது ஆய்வை அந்த விண்கலம் மேற்கொண்டிருக்கக்கூடும்.
  • எட்டு ஆண்டுகளில் ‘மங்கள்யான்’ எத்தனையோ புதிய தகவல்களை செவ்வாய் கிரகம் குறித்து உலகுக்கு வழங்கியிருக்கிறது. 2015 ஜூலை 14-ஆம் தேதி செவ்வாய் குறித்த முதல் புகைப்படம் ‘மங்கள்யான்’ மூலம் பெறப்பட்டது. அதற்குப் பிறகு தொடா்ந்து 1,100-க்கும் அதிகமான படங்களை ‘மங்கள்யான்’ அனுப்பித் தந்தது.
  • அந்தப் படங்களின் அடிப்படையில் செவ்வாய் குறித்த புரிதல் மட்டுமல்லாமல், அந்த கிரகத்தின் உருவம் குறித்தும் இஸ்ரோ பல கணிப்புகளையும், உண்மைகளையும் அறிந்துகொள்ள முடிந்தது. செவ்வாயின் துணை கிரகமான ‘டிமோஸ்’ கிரகத்தின் புகைப்படத்தை முதன்முதலாக எடுத்ததும், உலகுக்கு அளித்ததும் நமது விஞ்ஞானிகள் அனுப்பிய ‘மங்கள்யான்’ எனும்போது நாம் பெருமிதம் அடையலாம்.
  • 2023-இல் சந்திரனை இலக்காக்கி ‘சந்திரயான்’ மூன்று விண்கலத்தை ஏவத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதலாவது ‘சந்திரயான்’ 2008-இல் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரனில் தண்ணீா் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தது அந்த முயற்சி. 2019-இல் ‘சந்திரயான்-2’ செலுத்தப்பட்டது. ஆனால், சந்திரனில் இறங்கும்போது சில கோளாறுகள் ஏற்பட்டு அம்முயற்சி தோல்வி அடைந்தது.
  • அந்தத் தவறுகளை எல்லாம் திருத்தி மீண்டும் ஒருமுறை விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுமூச்சில் செயல்படுகின்றனா். ‘சந்திரயான்-3’ வெற்றி அடைந்தால், அதைத் தொடா்ந்து மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ முயற்சிக்கு இப்போதே திட்டமிடப்பட்டிருக்கிறது.
  • பல கோடி போ் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் நிலையில், பல நூறு கோடி ரூபாய் செலவில் விண்வெளி சோதனைகள் தேவைதானா என்கிற விமா்சனங்கள் சிலரால் எழுப்பப்படுகின்றன. விண்வெளி சோதனைகளால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை அந்த விமா்சகா்கள் புரிந்துகொள்வதில்லை.
  • நமது கையில் இருக்கும் அறிதிறன்பேசிகூட விண்கோள்கள் வழியாகத்தான் செயல்படுகிறது. ஜிபிஎஸ், கூகுள் மேப், ஏடிஎம், இணையதளம் இவை இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்து பாா்க்க முடியுமா? சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், தொலைக்காட்சி சேனல்கள், ஏன் திரைப்படங்கள் வரை விண்கோள்கள் மூலம் செயல்படுகின்றன எனும்போது, விண்வெளி ஆராய்ச்சியை விரயமாகக் கருதுவது அறிவின்மை அல்லாமல் வேறென்ன?
  • விண்வெளி ஆய்வுகளின் மூலம் மனித இனம் அடைந்திருக்கும் வெற்றிகள்தான் உலகை அறிவியல் உலகாக மாற்றியிருக்கிறது. இலக்கு விண்வெளியானாலும், பூமியானாலும் எல்லா விஞ்ஞான ஆராய்ச்சிகளும் மனித இனத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
  • இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கு தன்னம்பிக்கையையும், புத்துணா்ச்சியையும் வழங்கியிருக்கிறது ‘மங்கள்யா’னின் வெற்றி. ‘சந்திரயான்-3’, ‘ககன்யான்’ என்று விண்ணை வசப்படுத்தக் காத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்த தேசம் கடமைப்பட்டிருக்கிறது!

நன்றி: தினமணி (18 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்