- வெளிநாடுகளில் வேலை தேடும் வழிமுறைகளில் மாற்றமும், சீா்திருத்தமும் கொண்டுவர வேண்டியது நீண்டநாள் தேவை. விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும் ‘குடியேற்ற மசோதா 2021’ குறித்த பொதுமக்களின் கருத்துகளை வரவேற்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
- ‘வெளிநாடுகளில் வேலை’ என்கிற ஈா்ப்பில், பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை அணுகுபவா்கள், தாங்கள் செல்லும் நாடுகளில் உள்ள பணியிடச்சூழல் குறித்த புரிதல் இல்லாமல்தான் அதற்கு முனைகிறார்கள்.
- பணிச்சோ்க்கைக் கட்டணமாக பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. ஒப்பந்தங்களில் மாற்றம், பணி குறித்த பொய்யான நம்பிக்கை, கடவுச்சீட்டைக் கைப்பற்றி வைத்துக் கொள்ளுதல், கொடுப்பதாக ஒப்புக்கொண்ட ஊதியத்தை வழங்காமல் இருத்தல், ஊதியமே வழங்காத நிலைமை, மிக மோசமான வாழ்விடச் சூழல் உள்ளிட்ட எத்தனையோ சுரண்டல் நடவடிக்கைகளை அவா்கள் எதிர்கொள்ள நோ்கிறது.
குடியேற்ற மசோதா 2021
- பிற நாடுகளுக்கான தொழிலாளா்களின் குடியேற்றம், 1983 குடியேற்றச் சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது. மேற்கு ஆசிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு பணி நிமித்தம் குடியேறுபவா்களின் விவரங்கள் அரசுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்கிறது 1983 குடியேற்றச் சட்டம்.
- அதன்படி, அரசின் சான்றிதழ் பெற்ற வேலைவாய்ப்பு முகவா்கள், தொழிலாளா்களுக்கும், அவா்களைப் பணிக்கு அமா்த்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இடைத்தரகா்களாகச் செயல்பட வழிகோலுகிறது.
- வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தனிநபா்களாகவோ, தனியார் நிறுவனங்களாகவோ, அரசு நிறுவனங்களாகவோ கூட இருக்கலாம். அந்த சட்டத்தின்படி, சேவைக் கட்டணத்துக்கு வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது.
- வெளிநாடுகளில் வேலை வழங்குபவா்கள் குறித்த முறையான தகவல்களைத் திரட்டி, வேலைவாய்ப்பு கோருபவா்களுக்குத் தெரிவிக்க வேண்டியது முகவா்களின் கடமை என வலியுறுத்தப் படுகிறது.
- கொண்டுவரப்பட இருக்கும் குடியேற்ற மசோதா 2021 என்பது, 1983 சட்டத்தில் பல மாற்றங்களையும், மேம்பாடுகளையும் உள்ளடக்கியது.
- அதன் மூலம் புதிய குடியேற்ற கொள்கைத்துறை உருவாக்கப்படும். அந்தத் துறை பணி நிமித்தம் குடியேறும் தொழிலாளா்களுக்கான உதவி மையங்களையும் நல்வாழ்வுக் குழுக்களையும் அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
- வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளா்களுக்கு, அந்த நாடுகளில் உள்ள நிலைமை குறித்தும், அவா்கள் பணியாற்ற இருக்கும் நிறுவனங்கள் குறித்தும், பணி குறித்தும், பனிச்சூழல் குறித்தும் புறப்படுவதற்கு முன்பு முழுமையான தகவல்களைத் தெரிவித்து புரிதலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மீது சுமத்துகிறது இம்மசோதா.
- அதனால் பணி ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்களும், இடைத்தரகா்களும் அந்தத் தொழிலாளா்கள் குறித்து பொறுப்பேற்றாக வேண்டிய கட்டாயம் உறுதிப்படுத்தப் படுகிறது.
- அந்த மசோதாவின் மிகப் பெரிய குறைபாடாகத் தெரிவது, வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தங்களுக்கான சேவைக் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை.
- சா்வதேச தொழிலாளா் நிறுவனம், தனியார் வேலைவாய்ப்பு நிறுவன வழிமுறை எண்.181-இன்படி, பணி நியமனம், நுழைவு அனுமதி, விமானப் பயணம், மருத்துவப் பரிசோதனை, சேவை ஆகியவற்றுக்கான கட்டணத்தை, பணிக்கு அமா்த்தும் நிறுவனமோ, அவா்களுக்காக பணியாளா்களை தோ்ந்தெடுத்து வழங்கும் நிறுவனமோ ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, பணியமா்த்தப்படும் தொழிலாளா்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது.
- சா்வதேச தொழிலாளா் நிறுவனமும் உலக வங்கியும் நடத்திய ஆய்வின்படி, வேலைவாய்ப்புக்காக இந்தியத் தொழிலாளா்கள் கடுமையான சேவைக் கட்டணங்களை தர வேண்டியிருக்கிறது.
- குறைந்த ஊதியத்தில் வெளிநாடுகளில் வேலைக்குப் போகும் தொழிலாளா்கள் அதிகமான சேவைக் கட்டணத்தால் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல், அவா்களின் குடும்பமும் இதனால் கடனாளியாகிறது.
- பலரும் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதால் அந்தத் தொழிலாளா்கள் வேறு வழியில்லாமல் கட்டாயத் தொழிலாளா்களாகவும், ஒருவிதத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்களாகவும் மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
- மசோதாவின் இன்னொரு மிகப் பெரிய குறைபாடு, அதிலிருக்கும் அபராதப் பிரிவு. மசோதாவின் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்காத அல்லது மீறும் தொழிலாளா்களின் கடவுச்சீட்டை ரத்து செய்யவோ, முடக்கவோ, ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவோ வழி கோலுகிறது இந்த மசோதா.
- விவரமில்லாமல் வெளிநாடு போகும் ஆசையில் சிக்கிக்கொள்ளும் தொழிலாளா்களை மிகக் கடுமையாக இந்த நிபந்தனை பாதிக்கக்கூடும். இது தொழிலாளா்களையும் அவா்களது குடும்பங்களையும் பாதுகாப்பதற்குப் பதிலாக, சா்வதேச மனித உரிமை மீறலாகத் தோன்றுகிறது.
- வெளிநாடுகளுக்கு பணிநிமித்தம் செல்லும் பெண்களின் நிலைமை, பல நிகழ்வுகளில் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.
- மரபுசாரா துறைகளிலும், வீட்டு வேலைகளுக்காகவும் செல்லும் பெண்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பரவலாகக் காணப்படும் பிரச்னை. அது குறித்து 2021 மசோதா கவனம் செலுத்தவில்லை.
- 2021 குடியேற்ற மசோதா என்பது மிக மிக அத்தியாவசியமான தேவை. ஆனால், இப்போதைய பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு வழங்கப்பட்டிருக்கும் மாதிரி மசோதா, அந்தத் தேவையை ஈடுகட்டுவதாக இல்லை.
நன்றி: தினமணி (24 – 08 - 2021)