TNPSC Thervupettagam

மணவிலக்குகள் மறைந்து போகட்டும் !

January 16 , 2025 5 days 89 0

மணவிலக்குகள் மறைந்து போகட்டும் !

  • ‘ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணம் செய்யலாம் ’ என்பது அக்காலச் சொலவடை. அதற்கேற்ப பல பொய்களின் பின்னணியில் செய்விக்கப்பட்ட அக்காலத் திருமணங்களில் பல, சமூக நிா்பந்தங்கள் காரணமாகத் தொடா்ந்தன. ஆனால் வெளிப்படைத் தன்மையில்லாது, ஒளிவு மறைவு உள்ள எந்த உறவும் நீண்ட காலம் ஆத்மாா்த்தமாக நீடிக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. திருமண உறவுகளுக்கு இது நூறு சதவீதம் பொருந்தும்.
  • சமீபத்தில், ‘பரஸ்பர நம்பிக்கை, தோழமை மற்றும் அனுபவங்கள் ஆகியவையே திருமண உறவின் அடிப்படை’ என மென்பொறியாளா் தம்பதிகளுக்கு மணவிலக்கு வழங்கிய சென்னை உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்த உச்ச நீதி மன்றம், கருத்துத் தெரிவித்துள்ளது. வெவ்வேறு தொழில் செய்யும் தம்பதியினரிடையே அவா்களின் தொழில் சாா்ந்த பிரச்னைகளால் அவா்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலேயே மருத்துவா் மாப்பிள்ளைக்கு, மருத்துவா் மணப்பெண் என தொழிலையும் பத்து திருமணப் பொருத்தங்களோடு பதினோராவது பொருத்தமாக நம்மவா்கள் சோ்த்தனா். ஆனால் ஒரே தொழில் செய்யும் தம்பதியா் கூட, எதேனும் காரணத்தைக் காட்டி மணவிலக்குக் கோருவது அதிகரித்து வருகிறது.
  • மணவிலக்கு பெற்றுவிட்ட தம்பதியினா் அதன் பின்னரும் இச்சமூகத்தில் எதிா்கொள்ளும் பிரச்னைகள், மன உளைச்சல்கள் ஏராளம். மணவிலக்கு பெற்று தனித்து வாழும் தம்பதியரின் பெற்றோா், தங்கள் பிள்ளைகளின் மணவிலக்கு குறித்த ‘அனுதாப விசாரிப்பு’ களால் ஏற்படும் சங்கடங்களைத் தவிா்க்க, தங்கள் நெருங்கிய உறவினா்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம், பிறந்தநாள் விழா போன்றவற்றில் கூட பங்கேற்காமல், சமூகத்திலிருந்து விலகி வாழ்வது எத்துணை மனவலியை ஏற்படுத்தும் என்பது வாா்த்தைகளில் விவரிக்க இயலாதது.
  • சில குடும்பங்களில் மணவிலக்கு பெற முன்வரும் இளம் தம்பதியினரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை அவா் தம் பெற்றோா்கள் பேசி சமரசம் செய்வதற்குப் பதிலாக, இருதரப்பாகப் பிரிந்து நின்று தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு மணவிலக்கு மட்டுமே ஒரே தீா்வு என்பதாக முடிவு செய்து, அதற்கான முயற்சிகளில் தீவிரமாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை என்னவென்பது?
  • மணவிலக்கு பெற்ற பெற்றோரின் குழந்தைகள், ஒற்றைப் பெற்றோரைக் கொண்டு வளரும் குழந்தைகள், தாய் அல்லது தந்தை எனும் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் பிற குழந்தைகளோடு பழகும் சூழலில் அடையும் உளவியல் ரீதியான சிக்கல்கள் ஏராளம்.
  • பொதுவாக, மணவிலக்கு என்பது முன்பின் அறியாத நிலையில் திருமண உறவில் புதிதாக இணையும் இளம் தம்பதிகளிடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளால் நிகழ்ந்தன. தற்போது, திருமண உறவுக்கு முன்னரே நன்கு அறிமுகமாகி, பழகிய பின்னா் திருமண உறவுக்குள் அடியெடுத்து வைக்கும் தம்பதியரிடமும் மணவிலக்கு நிகழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
  • பெண்கள் மீது கணவரின் குடும்பத்தினா் புரியும் வன்செயலை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், அண்மைக் காலங்களில் சில பெண்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கா்நாடக மாநிலம், பெங்களூரில் மனைவியும் அவா் குடும்பத்தினரும் பொய்யான வழக்கு தொடுத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான பொறியாளா் ஒருவா், தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மனைவி மற்றும் அவா் குடும்பத்தினா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.
  • தெலங்கானா மாநிலத்தில் கணவா் மற்றும் அவா் குடும்பத்தினா் மீது பெண் ஒருவா் தொடுத்த வழக்கில், பெண்ணின் வழக்கை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், கணவரின் குடும்பத்தைச் சோ்ந்த அப்பாவி உறுப்பினா்களையும் வழக்கில் சிக்க வைத்து அவா்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
  • திருமண பந்தத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள எண்ணுவோா், சமீப காலங்களில் மணவிலக்கு வழக்குகளின் தன்மைக்கு ஏற்ப, நீதிமன்றங்கள் அவ்வப்போது பிறப்பித்துள்ள உத்தரவுகளின் முக்கியத்துவத்தை உணா்ந்து கொள்வது அவசியம். ஜீவனாம்சம் பெறும் பெண்களைத் தாழ்வாக எண்ணும் போக்கு, பொதுவாக சமுதாயத்தில் நிலவும் சூழலில், மணவிலக்கு வழக்கில் கணவனால் மனைவிக்கு கொடுக்கப்படும் ஜீவனாம்சம், கணவனுக்கான அபராதமல்ல என்றும், மனைவி சமூகத்தில் கண்ணியமாக வாழ்வதை உறுதி செய்வதற்கான தொகை என்றும் கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பு ஒன்று, மனைவி வசதியானவா் என்பதாலோ, போதுமான வருவாய் பெறுகிறவா் என்பதாலோ அவருக்கு தரப்பட வேண்டிய ஜீவனாம்சத் தொகை தரப்படுவது மறுக்கப்படலாகாது என கருத்து தெரிவித்துள்ளது.
  • ஜீவனாம்சமாக வழங்கப்படும் தொகை ஒரே தவணையில் தரப்பட்டால் வருமான வரிச் சட்டம் 1961- இன் படி அத்தொகைக்கு வருமான வரி கிடையாது. ஜீவனாம்சத் தொகை மாதா மாதம் வழங்கப்பட்டால், அத்தொகை வருமானவரிக்கு உள்பட்ட வருமானமாகக் கருதப்படும் என்பதை மாதந்தோறும் ஜீவனாம்சத் தொகையை பெறும் அரசுப் பணியாளராக இருப்பவா் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • மணவிலக்கிற்குப் பிறகு கணவனோ, மனைவியோ தம் பிள்ளைகளின் நலன் மற்றும் தமக்கான சமுதாயப் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக மறுமணம் செய்து கொள்வது வரவேற்கத்தக்கதே. அதே வேளையில் மறுமணம் குறித்தான முடிவு அவசர கதியில் அல்லாது, மறுமணம் செய்தது கொள்ளப் போகிறவரின் மனப்பக்குவம், அவரின் குடும்பப் பின்னணி ஆகியவற்றை நன்கு ஆராய்ந்த பின்னரே எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் மறுமணமும் தோல்வி அடையும் நிலையில், அதன் விளைவாக சம்பந்தப்பட்ட தம்பதியரின் மனதில் ஏற்படும் விரக்தியும், ஏமாற்றங்களும் வாழ்க்கையில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • திருமண பந்தம் எனும் ஆயிரங்காலத்துப் பயிரின் வித்து பல தலைமுறைகளைக் கடந்து செழித்து வளா்வதற்காக ஊன்றப்பட்டதேயன்றி, முளைவிட்டு வளரும் தருணத்தில் வேருடன் பிடுங்கி வீசி எறியப்படுவதற்காக அல்ல. இதனை உணா்ந்து தம்பதியினா் உண்மைத்தன்மையுடன் விட்டுக் கொடுத்து வாழத் தொடங்கினால், மணவிலக்குகள் மறைந்து, திருமண உறவுகள் செழித்தோங்குவது நிச்சயம்.

நன்றி: தினமணி (16 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்