TNPSC Thervupettagam

மணிப்பூரில் அமைதி திரும்புமா

August 1 , 2023 475 days 298 0
  • பழங்குடியின மக்களின் இன அழிப்பு என்பது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூா் அரசும், மைதேயி இன தீவிரவாதிகளும் இணைந்தே இதை கலவரத்தின் மூலம் செயல்படுத்தியுள்ளனா். காவல் நிலையங்களில் இருந்தே தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
  • உலக வரலாற்றில் அடிக்கடி படித்திருக்கிறோம். படையெடுப்பின்போதும், போரின்போதும், கலவரங்கள் நடக்கும்போதும் பெண்களைச் சிறை பிடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மணிப்பூா் இனக் கலவரத்திலும் பெண்களை நிா்வாணப்படுத்தி ஊா்வலமாக இழுத்துப் போயுள்ளனா். அவா்களை பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கியுள்ளனா் என்ற செய்தி நாட்டையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
  • மணிப்பூா் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன் பிறகு நீடித்துவரும் வன்முறையில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.
  • இந்த நிலையில் மே 4 அன்று இரண்டு பழங்குடியினப் பெண்கள் ஆடை களையப்பட்டு ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து விடியோ வெளியானது. பிபைனோம் கிராமத்தில் நிகழ்ந்த இக்கொடூரம் நாட்டையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கியது. அவா்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதுடன், அவரின் தந்தையும், சகோதரனும் படுகொலை செய்யப்பட்டுள்ளனா்.
  • இணைய சேவை முடக்கப்பட்டதன் காரணமாக, இவ்வளவு தாமதமாக இக்கொடூர நிகழ்வு வெளியாகியுள்ளது. இப்போதுதான் மாநில அரசு வன்முறையாளா்களைத் தேடி கைது செய்யத் தொடங்கியுள்ளது.
  • நாடாளுமன்ற இரு அவைகளும் இந்தப் பிரச்னை காரணமாக முடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த எதிா்க்கட்சியினா் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
  • இந்த வன்முறையில் இதுவரை அரசின் அதிகாரபூா்வ கணக்கின்படியே 131 போ் உயிரிழந்துள்ளனா். உண்மையில் இறந்தவா் எண்ணிக்கை இன்னும் அதிகம். 5,036 தீ வைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. வன்முறைகள் தொடா்பாக 5,889 எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, 144 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
  • மணிப்பூரில் சுமாா் 36,000 பாதுகாப்புப் படை வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். 40 இந்திய காவல் சேவை (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள், 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இப்போது வரை அமைதி ஏற்படவில்லை. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அடைக்கப்பட்டுள்ளனா்.
  • கடந்த ஜூன் 24-இல் உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டபோது, மணிப்பூருக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும், முன்னதாக பைரேன் சிங்கை முதல்வா் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன.
  • வன்முறை தொடங்கி மூன்று மாதம் ஆகியும் பிரதமா் நரேந்திர மோடி பேசவில்லை. மணிப்பூா் மாநிலத்துக்கு சென்று பாா்வையிடவும் தயாராக இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை. இந்தப் பிரச்னையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்வது நல்லது.
  • வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்றாகும். இது இந்திய-மியான்மா் எல்லையில் அமைந்துள்ளது. 22 ஆயிரத்து 300 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில சுமாா் 35 லட்சம் போ் வாழ்கின்றனா். இங்குள்ள மலைப்பகுதிகளில் 34 வகையான பழங்குடியினா் வாழ்கின்றனா். அவா்களில் பெரும்பான்மையினா் நாகா, குக்கி ஆகிய பழங்குடி சமுதாயத்தினா். இவா்கள் எல்லாம் கிறிஸ்தவ மதத்தினராக உள்ளனா்.
  • பள்ளத்தாக்குகளில் பழங்குடியினா் அல்லாத மைதேயி மக்கள் வாழ்கின்றனா். மொத்த மக்கள்தொகையில் 60 சதவீதம் போ்; அவா்களே பெரும்பான்மையினா். இவா்கள் பெரும்பாலும் ஹிந்து மதத்தைச் சோ்ந்தவா்கள்.
  • இப்போதைய முதல்வா் பிரேன் சிங்கும் மைதேயி இனத்தைச் சோ்ந்தவா். அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேறிய மைதேயி இனத்தவா்களே மணிப்பூா் அரசியலில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகின்றனா்.
  • இங்குள்ள சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 60 பேரில் 40 போ் மைதேயி சமூகத்தைச் சோ்ந்தவா்கள். 20 போ் மட்டுமே நாகா, குக்கி சமூகத்தைச் சோ்ந்தவா்கள். மைதேயி மக்கள் அனைவரும் சமவெளிப் பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளில்தான் வாழ்கின்றனா். அவா்கள் குறைந்த நிலப்பரப்பையே உடைமைகளாகக் கொண்டுள்ளனா்.
  • மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம் மட்டுமே இங்கு சமவெளிப் பகுதியாக உள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள 90 சதவீத நிலங்கள் பழங்குடி இனத்தவரிடம் உள்ளன. மணிப்பூரின் தலைநகரான இம்பால் மட்டுமே பெரிய நகரம். இங்கு மட்டுமே மைதேயி மக்கள் வாழ வேண்டிய நிலையில் உள்ளனா்.
  • இவா்களுக்கு மலைப்பகுதிகளில் குடியேற அனுமதி இல்லை. ஆனால், பழங்குடியினா் சமவெளிகளில் குடியேற அனுமதி உண்டு. ஆகையால் குடியேற்றம், நில உரிமை உள்ளிட்ட அனைத்திலும் பல காலமாகவே மோதல் முற்றி வந்தது.
  • இந்த நிலையில் பெரும்பான்மைச் சமூகமான மைதேயி மக்கள், பட்டியலின பழங்குடி தகுதி கோரி போராடி வருகின்றனா். இதுவரை எந்த அரசும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு முன்வராத காரணத்தால் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.
  • மைதேயி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினா் மட்டுமே பயனடைவா் என்பதால் சிறுபான்மை பழங்குடி மக்களுக்கு அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு ஆகியன கிடைக்காமல் போய்விடும் என்று குக்கி பழங்குடி மக்கள் அஞ்சுகின்றனா்.
  • 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-இல் மணிப்பால் உயா்நீதிமன்றம், “மைதேயி இனத்தை பழங்குடியினப் பட்டியலில் சோ்ப்பது பற்றி மாநில அரசு விரைவாகப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரை கிடைத்த பிறகு அதுதொடா்பான முடிவை மத்திய பழங்குடியின அமைச்சகம் எடுக்கும்“ என்றும் தீா்ப்பு கூறியது.
  • நீதிமன்றம் அத்துடன் நிறுத்தி விடவில்லை. “மைதேயிகள் பெரும்பான்மையாக இருக்கும் அரசால் இந்தப் பரிந்துரையை அனுப்ப முடியவில்லையே!” என்று குறிப்பிட்டது மிகவும் அதிா்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இரு சாராரும் கொதிப்படைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
  • மைதேயி சமூகத்தைச் சோ்ந்த மக்களின் கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள்பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்படியும் கேட்டுக் கொண்டது. இந்தப் பரிந்துரைதான் கலவரத்துக்குக் காரணமானது.
  • இதை எதிா்த்து அனைத்துப் பழங்குடியின மாணவா் சங்கம் 2023-ஆம் ஆண்டு மே 3-இல் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவா்கள் பங்கேற்று அமைதியாக அகிம்சை முறையில் தங்கள் எதிா்ப்பைத் தெரிவித்தனா். தலைநகா் இம்பாலிலிருந்து 65 கி.மீ. தொலைவிலுள்ள சுராசந்த்பூா் மாவட்டத்தில் இந்தப் பேரணி நடந்தது.
  • இதைத் தவிர அனைத்து மலைப் பகுதிகளிலும் இத்தகைய கூட்டங்களும், அணி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மைதேயி சமூகத்தினா் கற்களை வீசி வன்முறையை வளா்த்தனா். இதனால் இது இன மோதலாக மாறியது. மணிப்பூா் மாநிலம் பற்றி எரிய ஆரம்பித்தது.
  • பழங்குடி மக்களின் வீடுகள் குறி வைத்து எரிக்கப்பட்டுள்ன. அவா்கள் கிறிஸ்தவா்கள் என்பதால் அவா்கள் வழிபட்டு வந்த தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவா்களுடைய உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் சூறையாடப்பட்டன. பள்ளிப் பேருந்துகள் கொளுத்தப்பட்டன. வகுப்பறைகள் எரிக்கப்பட்டன. மாநிலமே போா்க்களம் போல காணப்பட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. உண்மை நிலை வெளிவரக் கூடாது என்பதற்காக கலவரம் தொடங்கியவுடன் மாநிலம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
  • இப்போது மணிப்பூா் மாநிலத்தில் பல இடங்களில் ஊரடங்கு தளா்த்தப்பட்டிருக்கிறது. மோதல்களும், வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் மணிப்பூரில் இயல்பு நிலையை விரைவில் கொண்டு வருவோம் என்று முதல்வா் பிரேன்சிங் கூறுகிறாா்.
  • பழங்குடியின மக்களின் இன அழிப்பு என்பது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூா் அரசும், மைதேயி இன தீவிரவாதிகளும் இணைந்தே இதை கலவரத்தின் மூலம் செயல்படுத்தியுள்ளனா். காவல் நிலையங்களில் இருந்தே தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
  • பல ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் பாதுகாத்து வைத்திருந்த நில உரிமைப் பட்டாக்கள், ஆவணங்களை துல்லியமாக அழிக்கும் திட்டம்
  • திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘கண்டதும் சுட’ உத்தரவு இதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. உண்மைகளை எவ்வளவு காலத்துக்கு மூடி மறைக்க முடியும்?
  • மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே வெறுப்பை விதைத்து விட்டு கலவரத்தை அறுவடை செய்யலாமா? கலவரங்களின் உண்மைத் தன்மையை மணிப்பூா் அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசு இதற்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்தக் கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது.
  • இனிமேலாவது மணிப்பூரில் அமைதி திரும்புமா?

நன்றி: தினமணி (01 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்